இன ரீதியான அழிவு

சிங்களப் பிரதேசங்களில் உள்ள மதம்பிடித்த யானைகள் முசலிக் காட்டுக்குள்

கொழும்பு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் செயலென்று பிரதேச மக்கள் கண்டனம்
பதிப்பு: 2021 ஏப். 11 22:01
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 14 00:34
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கையின் தென் பகுதி மாவட்டங்களில் பல மனித உயிர்களைப் பலியெடுத்து பொது மக்களின் பயிர் செய்கைகளுக்கும் ஏனைய உடமைகளுக்கும் பெரும் சேதம் விளைவித்த 15 ற்கும் மேற்பட்ட மதம்பிடித்த காட்டு யானைகள் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிடிக்கப்பட்டு கனரக வாகனங்கள் மூலம் வட மாகாணம் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல கிராமங்களைச் சூழவுள்ள வனப்பகுதிகளில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். குறித்த யானைகள் இரவு நேரங்களில் முசலிக் கிராமங்களுக்குள் நுழைந்து பெரும் சேதாரங்களை ஏற்படுத்தி வருவதாகப் பாதிக்கப்பட்ட முசலிப் பகுதி மக்கள் பிரதேச அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
 
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து குறித்த யானைகளினால் முசலி பிரதேச செயலக பகுதியில் கூழாங்குளம் கிராமசேவையாளர் பிரிவில் சீனத் நகர், ஹூனைஸ் நகர், கொண்டச்சி கிராமசேவை யாளர் பிரிவில் பாசித்தென்றல், கொக்குப்படையான் மற்றும் மரிச்சிக்கட்டி, முள்ளிக்குளம் கிராமசேவையாளர் பிரிவுகளில் உள்ள அனைத்து பகுதிகளிலுமே மேற்படி தென்னிலங்கை யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தென்னிலங்கையில் உள்ள மதவாச்சி, கெக்கிராவ, ஹெப்பித்திகொல்லாவ, மாகோ தம்புள்ளை, ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து அங்கு பொது மக்களின் பயிர் செய்கைகளை அழித்து பொது மக்களில் சிலர் உயிரிழக்கக் காரணமான காட்டு யானைகளே இலங்கை வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிடிக்கப்பட்டு மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராமங்களில் கனரக வாகனங்களின் மூலம் இரகசியமாக இறக்கிவிடப்பட்டுள்ளதாக முசலி பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் இம் மாதம் வரை முசலிப் பகுதி மக்களின் வாழைச் செய்கை உட்பட அனைத்து தோட்டச் செய்கைகளும் அவர்களின் வீடுகளும் குறித்த காட்டு யானைகளினால் அழிக்கப்பட்டு பல லட்சக்கணக்கான ரூபா நஷ்டத்திற்கு அவர்கள் முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்னிலங்கையில் இருந்து முசலிப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ள குறித்த காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள மின்கம்பங்களையும் சேதப்படுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

ஏலவே வடகிழக்கு தாயகத் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வனப் பாதுகாப்பு மற்றும், வன ஜீவராசிகள் திணைக்களங்கள் ஆகியவற்றால் ஆக்கிரமிக்கப்படும் நிலையில் அதனை மீட்ப்பதற்கு மக்கள் போராடிவரும் நிலையில் தமிழர் பகுதிகளில் தென்னிலங்கை காட்டு யானைகளை இறக்கி தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கான புதிய நுட்பத்தை வன ஜீவராசிகள் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருவதாக மன்னார் நகரில் உள்ள பொது அமைப்பொன்றின் பிரமுகர் இது தொடர்பாக கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கருத்து தெரிவித்தார்.

இதேவேளை வட மாகாணத்தின் தமிழர்கள் வாழ்ந்து வரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மாங்குளம் பகுதிகளில் உள்ள காடுகளிலும் தென்னிலங்கையில் பிடிக்கப்பட்ட காட்டு யானைகள் இறக்கிவிடப்பட்டுள்ள நிலையில் அப் பகுதி மக்களும் குறித்த காட்டு யானைகளினால் தினமும் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.