சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்படும்

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு அரசாங்கத்தின் தோல்வியைச் சமாளிக்கும் நோக்கமா?

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி
பதிப்பு: 2021 ஏப். 13 23:47
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 14 00:43
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
சமுர்த்தி பயனாளிகள் மற்றும் வயோதிபர்கள் உட்பட அரசாங்கத்தின் மாதாந்த பணக்கொடுப்பனவுகளைப் பெற்றுவருபவர்களுக்குச் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நேற்றுத் திங்கள் இலங்கைத்தீவு முழுதும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் குறித்த பணக்கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மன்னார் மாவட்டத்திலும் குறித்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்றுத் திங்கள் காலை வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.
 
மன்னார் நகர பிரதேசச் செயலகத்தில் பிரதேச செயலாளர் எம். பிரதீப் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் காதர் மஸ்தான் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் ஆகியோர் மேற்படி ஐயாயிரம் ரூபா பணக் கொடுப்பனவுகளை வழங்கும் நிகழ்வை வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தனர்.

இலங்கை முழுதும் மாதாந்தம் வயோதிபர் கொடுப்பனவு, நூறு வயதை தாண்டியவர்களுக்கான கொடுப்பனவு, சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவு, மற்றும் தொழுநோய்க்கான கொடுப்பனவு ஆகியவற்றை பெறுவோர் உட்பட சமுர்த்திப்பயனாளிகள் குடும்பம் என மேற்படி ஐயாயிரம் ரூபா கொடுப்பனவினை தமிழ் சிங்களப்புத்தாண்டை முன்னிட்டு இன்று தொடக்கம் நாளை வரை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் குறித்த ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கு 32277 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு குறித்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

இதேவேளை குறித்த கொடுப்பனவு தொடர்பில் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பல விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

கோத்தபயா ராஜபக்ஸவின் அரசாங்கம் இலங்கை வரலாற்றில் குறுகிய காலத்தில் பெரும் தோல்வியைச் சந்தித்த சர்வாதிகார அரசாங்கமாக மாறி தென்னிலங்கை உட்பட முழு இலங்கையிலும் அது வேகமாக செல்வாக்கு இழந்து வரும் நிலையில் அரசின் மீது அதீத வெறுப்பில் உள்ள மக்களின் மனநிலையை மாற்றுவதற்கான தந்திரோபாய நடவடிக்கையே புதுவருடத்திற்கான குறித்த ஐயாயிரம் ரூபா பணக்கொடுப்பனவு என அக்கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கம் இம்மாத ஆரம்பத்தில் புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு 11 அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஒரு முகக் கவசம் அடங்கிய 1000 ரூபா பெறுமதியான நிவாரணப்பொதிகளை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள்(சதொச) ஊடாக மக்களுக்கு விற்பனை செய்தது.

எனினும் குறித்த நிவாரணப் பொதியில் உள்ளடங்கிய பொருட்கள் தரமற்றவை எனவும் குறித்த பொருட்களைத் தனியார் விற்பனை நிலையங்களில் 900 ரூபாவில் கொள்வனவு செய்யலாம் எனவும் கூறியுள்ள எதிர்த்தரப்பினரான ஐக்கிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள் குறித்த நிவாரணப்பொதிகள் மூலம் அதனை நடைமுறைப்படுத்திய இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவும் இலங்கை அரசும் பொது மக்களை கடுமையாக ஏமாற்றியுள்ளதாகப் பலத்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் புத்தாண்டு நிவாரணப் பொதியில் இலங்கை மக்களிடம் மோசமான அவப்பெயரை சம்பாதித்துள்ள ராஜபக்ஸ அரசாங்கம் அதை சமாளிப்பதற்காகவும் ஏற்கனவே அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ள அதன் செல்வாக்கைத் தூக்கி நிறுத்துவதற்காகவுமே எதிர்வரும் புத்தாண்டை முன்னிறுத்தி ஐயாயிரம் ரூபாப் பணக்கொடுப்பனவை இலங்கை மக்களுக்கு வழங்கி அவர்களின் சீற்றத்தை தணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிவித்துள்ளனர்.