மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சியமைத்த

ராஜபக்ச அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள்- சமாதான முயற்சியில் பௌத்த குருமார்

மகிந்த தலைமையில் 19 ஆம் திகதி கூட்டம்
பதிப்பு: 2021 ஏப். 15 20:40
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 16 02:35
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்க்க பௌத்த தேரர்கள் தலையிட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் பதவி வகிக்க வேண்டுமெனவும் அதற்கேற்ப ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஒற்றுமை இருக்க வேண்டுமெனவும் கொழும்பில் உள்ள பௌத்த மகா சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரன, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், மூத்த உறுப்பினர்களை பௌத்த பிக்குமார் சந்தித்துப் பேசியுள்ளனர்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் சிலரைத் தனியாகச் சந்தித்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியதாகவும் அறிய முடிகின்றது.

நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகளின் தலைவர்களும் பங்குபற்ற வேண்டுமெனவும் வெவ்வேறாக மேதினக் கூட்டங்களை நடத்த வேண்டாமெனவும் பௌத்த குருமார் ஆலோசனை வழங்கியதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, பௌத்த பிக்குமார் மேற்கொண்ட முயற்சியினால் எதிர்வரும் 19 ஆம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக் கூட்டத்தில் முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமெனக் கூறப்படுகின்றது. பங்காளிக்கட்சிகளுடனான கூட்டம் தொடர்பாக மகிந்த ராஜபக்ச நேரடியாகவே ஒவ்வொரு கட்சித் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளாரென்றும், 12 கட்சிகளின் தலைவர்களும் பங்குபற்றுவார்கள் எனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை. மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படுமென விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.