இந்தியக் கடற்படையினரால் கைதான

மீனவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு உருக்கமான வேண்டுகோள்

இலங்கை அரசாங்கத்திற்குக் கடிதம்
பதிப்பு: 2021 ஏப். 18 19:34
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 18 22:12
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள புழல் சிறைச்சாலையில் கடந்த ஐந்து வாரங்களாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மீனவர்களான தமது கணவன்மார்கள் இருவரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் அதன் வெளிவிவகார அமைச்சரும் மேற்கொள்ள வேண்டுமென சிறையில் உள்ள மன்னார் மாவட்ட மீனவர்கள் இருவரின் மனைவிகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமாகாணம் மன்னார் மாவட்டம் பேசாலை எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களான 30 வயதுடைய அருண் பிரசானியா டலிமா மற்றும் 37 வயதுடைய றேகன் நிசாந்தினி மஸ்கிரிஞ்சே ஆகிய இரண்டு தமிழ் பெண்களே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
 
புழல் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அப்பாவி மீனவர்களான தங்கள் கணவன்மார் இருவரையும் விடுதலை செய்து விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிற்கு விலாசமிடப்பட்ட கோரிக்கைக் கடிதமொன்றைக் கடந்த வியாழக்கிழமை காலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனிடம் தாங்கள் கையளித்துள்ளதாக அவர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

எனது கணவரான 31 வயதுடைய ரவீந்திரன் அருண் குருஸூம் பேசாலையில் வசிக்கும் சக மீனவரான 38 வயதுடைய வெலிச்சோர் றேகன் பாய்வாவும் கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் பேசாலைக் கடலுக்கு வழமைபோல் தொழிலுக்கு சென்றனர்.

பேசாலையில் உள்ள இலங்கை கடற்படையினரிடம் உரிய பதிவுகளை மேற்கொண்டு தமது மீன்பிடிப் படகையையும் கடற்படையினரின் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே அவர்கள் அன்றைய தினம் கடலுக்குச் சென்றுள்ளனர்.

அன்றைய தினம் முற்பகல் 11 மணியளவில் கரை திரும்பவேண்டியவர்கள் கரை வராத நிலையில் பேசாலை பொலிஸ் நிலையத்தில் கணவர் தொடர்பில் முறைப்பாடொன்றினை நான் பதிவு செய்தேன். இந்த நிலையில் எம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தனுஷ்கோடிப் பொலிஸார் எனது கணவர் ரவிந்திரன் அருண் குருஸையும் அவருடன் மீன் பிடிக்கச் சென்ற வெலிச்சோர் றேகன் பாய்வாவையும் படகு மூலம் அனுமதியின்றி இந்திய நாட்டு எல்லைக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் 10 ஆம் திகதியன்று நிலவிய திடீர் காலநிலை மாற்றத்தினால் உருவான கடல் கொந்தளிப்புக் காரணமாக எனது கணவரின் படகு திசை மாறி இலங்கை-இந்தியா கடல் எல்லை அருகில் சென்றுள்ளது. இந்த நிலையில் அக்கடல் பிராந்தியத்தில் ஹெலிகொப்டர் மூலம் கடல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இந்தியக் கடலோர காவல் படையினர் எனது கணவரின் மீன்பிடிப்படகை இந்திய கடல் எல்லைக்குள் செல்லுமாறு துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய நிலையிலேயே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தான் அறிந்து கொண்டதாகத் திருமதி அருண் பிரசானியா டலிமா கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

எனது கணவரின் மீன்பிடி படகும் அதன் வெளியிணைப்பு இயந்திரமும் மற்றும் மீன்பிடி வலைகளும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே எட்டு லட்சம் ரூபாவில் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டது. எனது தங்க ஆபரணங்களை விற்பனை செய்தும் கடன் பெற்றுமே அவை கொள்வனவு செய்யப்பட்டது.

எனது கணவரும் மற்றைய மீனவரான வெலிச்சோர் ரேகன் பாய்வாவும் மீன் பிடியையே தமது ஜீவனோபாயத் தொழிலாகக் கொண்டவர்கள். அத்துடன் இவர்களுக்கு வேறு வருமானம் எதுவும் இல்லாத நிலையில் மீன்பிடி மட்டுமே இவர்களின் வருமானம் மார்க்கமாகும். இந்த நிலையில் இவர்களை நம்பியே எங்கள் இரண்டு குடும்பங்களும் வாழ்ந்து வருகிறோம்.

தற்போது அவர்கள் ஐந்து வாரங்களாக இந்தியச் சிறையில் உள்ள நிலையில் வேறு வருமானங்கள் இன்றி நான் எனது இரண்டு சிறிய பிள்ளைகளுடனும் மற்றைய மீனவரான வெலிச்சோர் ரேகன் பாய்வாவின் மனைவி அவரின் மூன்று சிறிய பிள்ளைகளுடன் மிகுந்த பொருளாதாரக் கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வறுமையுடன் போராடிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை புழல் சிறையில் உள்ள தனது கணவர் உட்பட மற்றைய பேசாலை மீனவரான வெலிச்சோர் ரேகன் பாய்வா ஆகிய இருவரும் உடல் உள ரீதியாகக் கடும் பாதிப்படைந்து நலிவடைந்து காணப்படுவதாகவும் அவர் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அப்பாவி மீனவர்களான தனது கணவரும் அவருடன் கைதான வெலிச்சோர் ரேகன் பாய்வாயையும் எங்கள் இரண்டு குடும்பத்திலும் உள்ள ஐந்து சிறிய பிள்ளைகள் மற்றும் ஏனைய எங்கள் குடும்ப உறவுகளின் எதிர்கால நிலையைக் கருணையுடன் கருத்தில் கொண்டு விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

அத்துடன் இலங்கை அரசாங்கமும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவும் இந்திய மத்திய அரசுடன் இராஜதந்திரரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி தனது நாட்டுப் பிரஜைகள் இருவரையும் சிறையில் இருந்து விடுதலை செய்து தாயகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு உள்ள ஓரே ஓரு சொத்தான தங்கள் புதிய மீன்பிடி படகையும் அதன் வெளியிணைப்பு இயந்திரத்தையும் விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் தான் வேண்டுவதாக அவர் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்

அத்துடன் இலங்கை கடல் எல்லைக்குள் கைதாகும் இந்திய தமிழ் நாட்டு மீனவர்கள் இரு நாடுகளின் பரஸ்பர இராஜதந்திர நல்லெண்ணத்தின் அடிப்படையில் கைதாகிய சில தினங்களில் அவர்களின் படகுகளுடன் விடுவிக்கப்படுவது போல் தனது கணவரும் அவருடன் கைதான பேசாலையைச் சேர்ந்த மற்றைய குடும்பஸ்தரும் மனிதாபிமான அடிப்படையில் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்டம் பேசாலையை சேர்ந்த அருண் பிரசானியா டலிமா கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இராமேஸ்வரம் நீதிமன்றில் புழல் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த பேசாலை மீனவர்கள் இருவரின் வழக்குத் தொடர்பான விசாரணைகள் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.