இலங்கை அரசாங்கம்

சிங்கள மீனவர்களை விடுவிப்பதுபோன்று, தமிழ் மீனவர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை

கடற்றொழில் இணையத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முகம்மது ஆலம் குற்றச்சாட்டு
பதிப்பு: 2021 ஏப். 23 21:56
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 24 00:27
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதாகும் தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களை இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு துரிதமாக விடுதலை செய்யும் இலங்கை அரசாங்கம், இந்தியக் கடற்படையினரால் கைதாகும் வட மாகாண மீனவர்களின் விடுதலை தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை என வட மாகாணக் கடற்றொழில் இணையத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என். முகம்மது ஆலம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
வட மாகாண மீனவர்கள் தமது கடற்றொழிலில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். வட மாகாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் ஒரு புறம் தென்னிலங்கை மீனவர்களின் வரவு மறுபுறம் என அவர்கள் கடற்றொழிலில் பலத்த சவாலை எதிர்கொண்டு வருகின்றனர் என தெரிவித்த முகம்மது ஆலம் வட மாகாண மீனவர்கள் கடற் சீற்றத்தினாலும் அவ்வப்பொழுது கடும் பாதிப்படைகின்றனர் என மேலும் தெரிவித்தார்.

வட மாகாண கடற்றொழில் இணையத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளரான என். முகம்மது ஆலம் கூர்மைச் செய்தித்தளத்திற்கு மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் நிகழ்ந்த புயல் தாக்கத்தினால் வட மாகாண மீனவர்கள் பலத்த பாதிப்பை எதிர்கொண்டனர். இவ்விதம் புயலால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களுக்கு எவ்வித இழப்பீடுகளும் இன்று வரை வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக வட மாகாணக் கடற்றொழில் இணையத்தினால் கடற்றொழில் அமைச்சு மற்றும் அரச உயர் மட்டத்திற்கு பல கோரிக்கைகள் முன்வைத்தும் குறித்த நஷ்டஈட்டு கொடுப்பனவு பாதிப்படைந்தவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

அத்துடன் இந்தியா மற்றும் வேறு நாடுகளின் எல்லைக்குள் தவறுதலாக நுழையும் வட பகுதி தமிழ் பேசும் மீனவர்கள் அங்கு கைதாகும் நிலையில் அவர்களின் விடுதலை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் உரிய சிரத்தை எடுக்கப்படுவதில்லை. அத்துடன் இலங்கை அரசின் அசமந்தத்தினால் அவர்களின் விடுதலை நீண்ட காலத் தாமதத்திற்கு உள்ளாகின்றது.

தென்னிலங்கை மீனவர்கள் இலங்கை எல்லை தாண்டி பிற நாடுகளில் கைதாகும் சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கம் இராஜதந்திரரீதியில் அவர்களைச் சிறைகளில் இருந்து விடுவித்து தாயகத்திற்கு விரைவில் அழைத்து வருகிறது.

மேலும் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் கைது செய்யப்படுகின்ற எமது வடக்கு மீனவர்களின் விடுதலை வீணாகத் தாமதிக்கப்படுகின்றது. அவர்கள் குறித்து எத்தரப்பும் அக்கறை கொள்வதில்லை.

மியன்மாரில் கைது செய்யப்பட்ட தென்னிலங்கை மீனவர்களின் விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மியன்மார் ஆட்சியாளர்கள் அங்கு சிறையில் உள்ள தென்னிலங்கை மீனவர்களைத் தற்போது விடுதலை செய்துள்ளனர். இன்னும் சில நாட்களில் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

மேலும் இலங்கையின் வட பகுதி கடல் பரப்பில் கைதாகும் இந்திய நாட்டு மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதுவராலயத்தின் விரைவான நடவடிக்கையால் கைதாகி சில நாட்களிலேயே கடல் மார்க்கமாக அவர்களின் படகுகள் மூலமாகவே மீண்டும் இந்தியாவிற்கு அனு்ப்பப்படுகின்றனர்.

இதற்கு இலங்கை அரசாங்கமும் தனது முழுமையான ஒத்துழைப்பை இந்தியாவிற்கு வழங்குகின்றது. வட பகுதி மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டு அங்குள்ள சிறையில் வாடுகின்றனர்.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கைதாகி தமிழகச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் அவர்களின் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ளது. எனினும் அவர்கள் இன்னும் இலங்கைக்கு அழைத்து வரப்படாதுள்ளனர். இலங்கை அரசும் அது பற்றி அலட்டிக்கொள்ளாது உள்ளது.

இந்த வகையில் இலங்கை அரசாங்கம் தனது பிரஜைகளான வட மாகாண மீனவர்களை ஒரு விதமாகவும் தென்னிலங்கை மீனவர்களை பிறிதொரு விதமாகவும் பார்க்கிறது. மேலும் கடந்த காலங்களாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவும் வட மாகாண மீனவர்கள் விடயத்தில் மாற்றாந் தாய் மனதோடுதான் செயல்படுகிறார்.

கடற்றொழில் அமைச்சர் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் தொழில் செய்ய அனுமதிப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இது பாரதூரமான செயற்பாடாகும் இது முழு வட மாகாண மீனவர்களுக்கும் செய்யும் மாபெரும் அநீதியாகும். இதற்கெதிராக வட மாகாண மீனவர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் வட மாகாண மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி எதிர்காலத்தில் இந்திய மீனவர்களுக்கு வட மாகாண கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்கினால் வட பகுதி மீனவர்கள் இதற்கெதிராகக் கிளர்ந்து எழும்புவர் என முகம்மது ஆலம் கூர்மை செய்திக்கு மேலும் தெரிவித்தார்.