உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரம்

ரிஷாட் பதியுதீன் அதிகாலை கொழும்பில் திடீரெனக் கைது

சகோதரர் றியாஜ் பதியூதீனும் கைது
பதிப்பு: 2021 ஏப். 24 13:37
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 24 15:45
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் முன்னாள் கைத்தொழில் வாணிப அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது இளைய சகோதரர் றியாஜ் பதியூதீன் ஆகியோர் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக இன்று சனிக்கிழமை அதிகாலை இலங்கை பொலிஸாரின் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டைச் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னாள் அமைச்சரை அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.
 
அத்துடன் முன்னாள் அமைச்சரின் இளைய சகோதரர் றியாஜ் பதியூதீனை கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் குறித்த பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத்தாரிகளுக்கு உதவியமை, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவரின் இளைய சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜீத் ரோகண இன்று காலை இலங்கை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும் முன்னாள் அமைச்சர் பதியூதீன் தான் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர் தனது டிவிற்றர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அத்துடன் அவர் வீடியோ பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

மைத்திரி ரணில் அரசாங்கத்தின்போது இடம்பெற்ற விசாரணையில் ரிஷாட் பதியூதீன் குற்றமற்றவர் என அப்போதைய பொலிஸ் மா அதிபரினால் நீதிமன்றத்தில் கூறப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் விசாரணைகள் புதிப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.