இலங்கைத்தீவில்

வேகமாகப் பரவிவரும் கொரோனா- பொது முடக்கம் வருமா?

உயிாிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிப்பு
பதிப்பு: 2021 ஏப். 30 14:53
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 02 02:27
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
இலங்கையின் பல மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் கொவிட் -19 தொற்று நோய் சிகிச்சைக்கான பல வைத்தியசாலைகள் கொவிட் தொற்றாளர்களினால் நிரம்பி வழிகின்றது. கொழும்பு. களுத்துறை, கம்பஹா, குருநாகல் மாவட்டங்களில் புதிய கொவிட் நோய் தொற்றாளர்கள் தினமும் அடையாளம் காணப்படும் நிலையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்துச் செல்கின்றது. இந்த நிலையில் கொவிட் - 19 ன் மூன்றாவது அலையில் இலங்கை நாடு சிக்கித் தவிக்கும் சூழ்நிலையில் கோட்டபாய ராஜபக்ஸ தலைமையிலான இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளது.
 
இலங்கை தீவில் கடந்த செவ்வாய் 1111 புதிய கொவிட் நோய் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்ட நிலையில் அன்றைய நாள் ஆறு நோய் தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளனர்.

கடந்த புதன் 1451 புதிய தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அத்தினத்தில் 8 நோய் தொற்றாளர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். மேலும் வியாழன் காலை முதல் இரவு 10 மணி வரை இலங்கையில் 1531 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் வியாழன் அன்று ஆறு கொவிட் தொற்றாளர்கள் மரணமடைந்தனர்.

அத்துடன் இலங்கையில் கடந்த எட்டு நாட்களில் மட்டும் 7481 கொரோனா நோய் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொவிட்- 19 நோய் தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தீவில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் கடந்த புதன்கிழமை தொடக்கம் மூடப்பட்டுள்ளது. அத்துடன் பொது போக்குவரத்துச் சேவையான ரெயில் சேவைகள் பலவற்றை இலங்கை அரசு எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து கண்டி, பொலநறுவை, பதுளை ஆகிய தூர மாவட்டங்களுக்கான ரயில் சேவைகள் இவ்விதம் நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பில் இருந்து வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய முக்கிய மாவட்டங்களுக்கான ரயில் சேவைகளையும் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் நிறுத்துவதற்கு இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.

தற்போது உலகம் பூராக முஸ்லிம்கள் நோன்பு அனுஷ்டித்து வரும் நிலையில் குறித்த நோன்பை முன்னிட்டு முஸ்லிம்களால் தினமும் மேற்கொள்ளப்பட்ட "தராவிஹ்" எனும் இரவு நேர கூட்டுத் தொழுகை இலங்கை அரசாங்கத்தின் உத்தரவுப்படி வியாழக்கிழமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தீவு முழுவதும் அதி தீவிரமாக பரவும் கொரோனா அச்சம் காரணமாக வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் முஸ்லிம்களின் ஜூம்மாத் தொழுகைகளையும் இலங்கையில் நடாத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. அத்துடன் ஏனைய மதத்தினரும் தமது மத வழிபாட்டு தலங்களில் ஒன்று கூடி மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது.

மேலும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிதியமைச்சின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள மிகப் பெரும் தேசிய வங்கிகளான இலங்கை வங்கி இலங்கை தீவின் பல முக்கிய நகரில் உள்ள தனது 23 கிளைகளை மூடியுள்ளது. அத்துடன் மக்கள் வங்கி பல முக்கிய நகரங்களில் உள்ள அதன் 22 கிளைகளை வியாழன் தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடியுள்ளது.

கொழும்பில் உள்ள இலங்கை தேசிய நூதனசாலையில் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நூதனசாலை வியாழன் தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் கொரோனா தடுப்பு முகக்கவசங்களை தயாரிக்கும் முன்னணி தொழிற்சாலையில் பணியாற்றும் 19 ஊழியர்களே கொரோனா நோய் தொற்றுடன் அடையாளம் காணப்படும் அளவிற்கு குறித்த தொற்று மிக வேகமாக பரவி இலங்கையைப் புரட்டி எடுத்து வருகிறது.

இலங்கையின் கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடையில் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையின் உரிமையாளரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சூழ்நிலையில் கடந்த புதன் குறித்த தொழிற்சாலையில் முகக்கவசம் தயாரிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏலவே தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களின் விநியோகத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் தமிழர் தாயகப்பகுதியான வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களையும் கொவிட் -19 ன் மூன்றாவது அலை தாக்கி வரும் நிலையில் அம் மாவட்டங்களில் நோய் தொற்றுடன் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு உட்பட மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் வட கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்ட அரசாங்க அதிபர்களும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் அங்கு தலைதூக்கி வரும் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

மேலும் தினம் தினம் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு முழு இலங்கை தீவையும் பல நாட்களுக்கு முடக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் குறிப்பிடுகின்றனர்.

எனினும் சமீப காலங்களாக கொரோனா நோய்த் தொற்று இலங்கையில் அதிகரித்து வந்தாலும் முழு இலங்கையையும் முடக்கும் (லொக்டவுன்) எண்ணம் இலங்கை அரசிற்கு இல்லை என இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவிக்கிறார்.

முழுநாட்டையும் முடக்கினால் அது நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மகிந்த மேலும் தெரிவிக்கிறார்.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் கொவிட் நோய் தொற்று தொடர்பில் வீராப்பு பேசி பொது மக்களின் உயிரோடு விளையாடுவதாக இலங்கையின் நாட்டின் எதிர்கட்சி அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இலங்கையில் கொவிட் நோய் தொற்று மின் வேகத்தில் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுவதற்கு இலங்கை அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும் பொது மக்களின் அஜாக்கிரதை காரணமாக கொவிட் பரம்பல் அதிகரிக்கும் நிலையில் இலங்கை ஆட்சியாளர்கள் அதனை கட்டுபடுத்துவதற்கு போராடி வருவதாக கொழும்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றது.