இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள

தமிழ் அரசியல் கைதியின் தந்தை மரணம்

இதுவரை 17 பெற்றோர் உயிரிழப்பு
பதிப்பு: 2021 மே 01 23:25
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 02 02:16
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மகனின் விடுதலையை எதிர்பார்த்து 12 வருடங்களாக காத்திருந்த தமிழ் அரசியல் கைதியின் தந்தை ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். தந்தையின் இறுதி சடங்கில்கூட மகன் கலந்து கொள்ள முடியாததால் உறவுகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சுன்னாகம் செல்லாச்சி அம்மையார் வீதியை சேர்ந்த 79 வயதான எஸ்.இராசவல்லவன் என்பவரே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
 
சுன்னாகத்தை சேர்ந்த 39 வயதான இராசவல்லவன் தபோரூபன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு வழக்கு இடம்பெற்று சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுத் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மகன் கைது செய்யப்பட்ட பின்னர் தந்தை மனதளவில் பாதிக்கப்பட்டதுடன் நாளுக்கு நாள் உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். குறித்த மகனின் விடுதலைக்காக இவர் பல முயற்சிகளை மேற்கொண்டும் பயன் கிடைக்கவில்லை. மகனின் தண்டனைக்காலம் இன்னும் சில ஆண்டுகளில் முடியவுள்ள நிலையில் தந்தையார் உயிரிழந்தமை உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்பார்த்திருந்த அவர்களின் உறவுகள் 17 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். தற்போது உயிரிழந்த தந்தையின் மகனான தபோரூபனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள போதிலும் அவருடைய தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையால் ஏனைய கைதிகளுக்கும் அவர்களின் உறவுகளுக்கும் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.