வடமாகாணம்

மன்னார் மாவட்ட சிறுபோக நெற்செய்கை தொடர்பாக உரையாடல்

2578 ஏக்கர் பரப்பளவில் நெற்செய்கை செய்யத் தீர்மானம்
பதிப்பு: 2021 மே 03 17:05
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மே 05 21:35
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் 2020 மற்றும் 2021 வருடத்திற்கான பெரும்போக நெற்செய்கையின் அறுவடைப் பணிகள் அனைத்தும் விவசாயிகளினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுபோக நெற்செய்கைக்கு அவர்கள் தயாராகி வருவதாக மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை கமநல சேவை அபிவிருத்தித் திணைக்களம் மன்னார் மாவட்டத்தில் உள்ள அதன் 12 கமநல சேவை நிலையங்கள் ஊடாக மேற்கொண்டு வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.
 
மன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் உயிலங்குளம் விவசாய மாநாட்டு மண்டபத்தில் கடந்த 27 ஆம் திகதி காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் தலைமையில் நடைபெற்றதென குறிப்பிட்ட அவர் மேற்படிக் கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் 2578 ஏக்கர் பரப்பளவில் இவ்வருட சிறுபோக நெற்ச் செய்கை மேற்கொள்வதற்கு தீரமானிக்கப்பட்டுள்ளதென மேலும் குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்ட விவசாயிகளால் இவ்வருடம் மேற்கொள்ளப்படும் சிறுபோக நெற் செய்கைக்கு தேவையான நீரை முருங்கன் கட்டுக்கரைக்குளத்தில் இருந்து சின்ன உடைப்பு, பெரிய உடைப்பு, அடைக்கலமோட்டை ஆகிய பிரதான வாய்க்கால்கள் மூலம் பெற்றுக்கொள்வதற்கு குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உயிலங்குளத்தில் உள்ள 11 ஆம் கட்டை பிரதான வாய்க்கால் மற்றும் முருங்கனில் உள்ள 12ஆம் 13 ஆம் கட்டை பிரதான நீர் வாய்க்கால்கள் ஆகியவற்றின் மூலமும் கட்டுக்கரைக்குளத்தில் இருந்து நீரைப்பெற்றுக்கொள்வதற்கு குறித்த கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வருடம் மன்னார் மாவட்டத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பில் மேட்டு நிலப்பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கட்டுக்கரைக்குளத்தில் இருந்து முருங்கன் குருவில் வான் பிரதான நீர் வாய்க்கால் மூலம் இதற்கு தேவையான நீர்ப்பாசனத்தை பெற்றுக்கொள்வதற்கு மேற்படி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இவ்வருட சிறுபோக பயிர் செய்கைகளையிட்டு கால்நடை வளர்ப்போர் தமது கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த தவறும் கால்நடை வளர்ப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் குறித்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பெரும்போகப் பயிர் செய்கை மற்றும் சிறுபோகப் பயிர் செய்கைககளுக்கு இடையில் சில விவசாயிகள் அனுமதியின்றி "அடாத்துப் பயிர்" செய்கை எனப்படும் இடைபோகப் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டுள்ளமை, தொடர்பாகக் குறித்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

இது தொடர்பாக குறிப்பிட்ட மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் மன்னார் மாவட்டத்தில் இடைபோகப் பயிர்செய்கைகளை மேற்கொண்ட விவசாயிகளுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் இக் கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.