யாழ் கல்வியங்காடு- நாயன்மார்க் கட்டு

போர்க்கால மனிதப் புதைகுழி விவகாரத்தை மூடிமறைக்க இலங்கைப் பொலிஸார் முயற்சி- கொழும்பில் இருந்து அழுத்தம்?

நீதிபதியின் உத்தரவையும் கண்டுகொள்ளவில்லை
பதிப்பு: 2018 ஜூலை 23 15:15
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 23 17:59
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
யாழ்ப்பாணம் கல்வியங்காடு- நாயன்மார்க் கட்டு செம்மணி பிரதேசத்திற்கு அருகில் கண்டபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான விசாரனைகளுக்கு இலங்கைப் பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இலங்கை அரசாங்கத்தின் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் ஏற்பாட்டில் இந்திய நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக, வெட்டப்பட்ட குழியில் இருந்தே மனித எச்சங்கள கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டிருந்தன. இதனால் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை குறித்த விசாரனைகளை முன்னெடுப்பதை தவிர்க்குமாறு இலங்கைப் பொலிசாருக்கு கொழும்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பில் இருந்தும் அதிகாரிகள் சிலர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர்.
 
சென்ற சனிக்கிழமை மாலை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி சி.சதிஸ்தரன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைப் பொலிஸாருக்கும் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், இன்று திங்கட்கிழமை பிற்பகல் வரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் இலங்கைப் பொலிஸார் முன்னெடுக்கவில்லை.

யாழ் கல்வியங்காடு- நாயன்மார்க் கட்டு செம்மணி பிரதேசத்திற்கு அருகில் கண்டபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான விசாரனைகளை இலங்கைப் பொலிஸார் உரிய முறையில் மேற்கொள்ளமாட்டார்கள் என பிரதேச மக்கள் ஏற்கனவே கூறியிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி க.மயூரன் சம்பவ இடத்திற்குச் சென்று மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை பார்வையிட்டார்.

ஆனால் யாழ் நகரில் உள்ள இலங்கைப் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி வருகை தரவில்லை. தடயவியல் பொலிசார் மாத்திரமே வருகை தந்திருந்தனர்.

அத்துடன் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்குரிய உபகரணங்களையும் இலங்கைத் தடயவியல் பொலிசார் கொண்டு வரவுமில்லை. இதனால் அகழ்வுப் பணியை சட்ட வைத்திய அதிகாரி மயூரன் ஒத்திவைத்தார்.

மனித எச்சங்கள் மீட்கப்பட்ட குழியில் இருந்து ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்ட மண்ணையும் பரிசோதனை செய்யுமாறு யாழ் நீதிபதி சி.சதிஸ்தரன் நேற்று முன்தினம் சனிக்கிழமை உத்தவிட்டிருந்தார்.

ஆனால், இன்று திங்கட்கிழமை பிற்பகல் வரை இலங்கைப் பொலிஸார் எந்தவொரு ஏற்பாட்டையும் செய்யவில்லை என குடிநீர்விநியோகப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, கோப்பாய் பிரதேச செயலக உறுப்பினர்கள் சிலர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மனித எச்சங்கள் மீ்ட்கப்பட்ட இடத்திற்கு வருகை தந்தனர்.

ஆனால் புதைகுழியைப் பாா்வையிட அங்கு கடமையில் ஈடுபட்டுள்ள இலங்கைப் பொலிஸாா் அனுமதிக்கவில்லை. தாயகப் பிரதேசங்களில் கண்டு பிடிக்கப்படும் போர்க்கால மனிதப் புதைகுழிகள் தொடர்பாக தமிழ்க் கட்சிகள் மௌனமாக இருப்பதாக மக்கள் பலரும் குறை கூறுகின்றர்.

இதேவேளை, மன்னார் நகரத்தின் நுழைவாசலில் போர்க்காலத்திற்குரியது என சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழியில் இருந்து மூன்று சிறுவர்களின் மண்டையோடுகள் பாற்பற்களுடன் மீட்கப்பட்டுள்ளன. இந்த மூன்று சிறுவர்களும் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம் என அகழ்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

37 ஆவது நாட்களாக இடம்பெற்று வரும் அகழ்வுப் பணியின்போது சுமார் 40 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. புதைகுழியில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் ஒழுங்கற்ற முறையில் இருந்ததாகவும் ஆகவே சடலங்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை எனவும் சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ். ராஜபக்ஷ, கூறுகின்றார்.

களனி பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜ் சோமதேவாவும் அவ்வாறு தெரிவிக்கின்றார்.