வடமாகாணம் மன்னார்

தாராபுரத்தில், கொவிட் 19 தொற்றாளர்களுக்குப் புதிய வைத்தியசாலை

மேலும் புதிய சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அரச அதிபர் கூறுகிறார்
பதிப்பு: 2021 மே 19 20:58
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மே 22 15:20
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
வட மாகாணம் மன்னார் மாவட்டம் தாராபுரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள "துருக்கி சிட்டி" பகுதியில் உள்ள பாடசாலைக் கட்டிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொவிட் 19 தொற்றாளர்களுக்கான சிகிச்சை மையம் இன்று 19 ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் முதற் கட்டமாக பெண் கொவிட் தொற்றாளர்களே குறித்த சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மேல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
 
தற்பொழுது மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த கொவிட் -19 தொற்றுக்குள்ளான பெண் நோயாளர்கள் தாராபுரம் "துருக்கி சிட்டி" கொவிட் சிகிச்சை நிலையத்தில் முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் தற்பொழுது பெண் கொவிட் நோயாளர்கள் அதிகம் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் தாராபுரம் துருக்கி சிட்டியில் உள்ள குறித்த சிகிச்சை நிலையத்திற்கு குறித்த தொற்றாளர்கள் அனுப்பப்பட உள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

தாராபுரம் துருக்கி சிட்டியில் உள்ள மேற்படி பாடசாலைக் கட்டிடம் கொவிட் தொற்றாளர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க கூடிய அனைத்து வசதிகளையும் கொண்டதாக முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், இங்கு நூறு தொற்றாளர்களை ஒரே நேரத்தில் தங்கவைத்து சிகிச்சை வழங்க கூடிய நிலையில் இதில் ஆண் தொற்றாளர்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்க்கு 50 படுக்கை வசதிகளுடன் பிரத்தியேகக் கட்டிடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூர்மைக்கு தெரிவித்தார்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் மேலும் ஒரு கொவிட் சிகிச்சை நிலையம் ஒன்றினை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ . ஸ்ரன்லி டி மெல் கூர்மைக்கு தெரிவித்தார்.

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு அருகாமையில் கைத்தொழில் பேட்டை வளாகத்தில் உள்ள பயன்படுத்தப்படாதுள்ள கட்டிடத்தொகுதியே இவ்விதம் கொவிட் சிகிச்சை நிலையமொன்றினை அமைப்பதற்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கைத்தொழில் அமைச்சுக்கு சொந்தமான குறித்த கட்டிடத்தை கொவிட் சிகிச்சை மையமாக பயன்படுத்துவதற்கு கைத்தொழில் அமைச்சிடம் அனுமதி கோரிய நிலையில் குறித்த அமைச்சும் அதற்கான அனுமதியை தனக்கு வழங்கியுள்ளதாக மன்னார் அரச அதிபர் திருமதி டி மெல் மேலும் தெரிவித்தார்.

குறித்த கட்டிடத்திற்கு மின் இணைப்பு உட்பட பல அடிப்படை கட்டமைப்புகள் தற்பொழுது நிறுவப்பட்டு வரும் நிலையில் சிகிச்சை நிலையத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் ஏனைய உள்ளக வடிவமைப்புகளும் விரைவில் பூர்த்தி செய்யப்பட்டு குறித்த கட்டிடத்தில் மன்னார் மாவட்டத்திற்கான இரண்டாவது கொவிட் சிகிச்சை மையம் செயல்பட ஆரம்பிக்கும் என மன்னார் மாவட் அரசாங்க அதிபர் திருமதி ஏ . ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்தித்தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.