கொவிட்-19 நோய்த் தாக்கம்-

போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மீனவக் குடும்பங்களுக்கு மேலும் நெருக்கடி

அன்றாட உணவுக்குச் சிரமப்படுவதாக மீனவர் ஒத்துழைப்புப் பேரவை கூறுகின்றது
பதிப்பு: 2021 ஜூன் 01 21:21
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 02 23:20
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
கொவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக இலங்கை அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள இலங்கைத்தீவு முழுவதிலுமான பயணத்தடை காரணமாக வட மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 15500 தமிழ் பேசும் மீனவக் குடும்பங்கள் தமது நாளாந்த வருமானத்தை இழந்து அன்றாட உணவிற்கு அல்லலுரும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். வடமாகாண மீனவக் குடும்பங்கள்
 
இலங்கையின் தென் பகுதி மீனவர்கள் தமது நவீன கடற்றொழில் மூலம் தினமும் அதிக வருமானத்தை பெறுபவர்களாவர். அத்துடன் அவர்களின் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்கும் வல்லமையும் அவர்களுக்கு உண்டு. நாட்டில் உள்ள பயணத்தடை காரணமாக கடற்றொழிலில் ஈடுபட முடியாத இன்றைய காலக்கட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களுக்கு அமுலில் உள்ள பயணத்தடை பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியம் மிக குறைவு.

இவ்வாறான நிலையில் தென்னிலங்கை மீனவர்களுடன் ஒப்பிடும் போது வட பகுதி மீனவர்கள் நீண்ட கால யுத்தம் ஒன்றிற்கு முகம் கொடுத்து அனைத்தையும் இழந்து வறுமையுடன் போராடி வருபவர்கள்.

இந்த நிலையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடியை மட்டுமே தமது வாழ்வாதாரத்திற்கான நிரந்தரத் தொழிலாக கொண்டவர்கள் ஆவர். மேலும் அன்றாடம் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டே தமது குடும்பத்தினரின் தினசரி ஜீவியத்தைக் மேற்கொண்டு வருபவர்கள்.

அத்துடன் வட மாகாண மீனவர்களிடம் எவ்வித பணச்சேமிப்பும் கைவசம் இல்லாததினால் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக அவர்களினால் கடற்றொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு பொருளாதாரரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மைக்கு மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் நாட்டில் தீவிரமாக பரவிவரும் கொரொனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே மாதம் 13 ஆம் திகதியில் இருந்து நாடு தழுவியரீதியில் பயணத்தடையை அமுல்படுத்தியது. இந்தநிலையில் கடந்த 13ஆம் திகதியில் இருந்து கடந்த 25ஆம் திகதிவரையான காலப்பகுதிகளில் குறித்த பயணத்தடை இரண்டொரு தடவைகள் அரசாங்கத்தினால் தளர்த்தப்பட்டது.

பின்னர் மேற்படி பயணத்தடை கடந்த 25ஆம் திகதியில் இருந்து எதிர்வரும் இம்மாதம் 7ஆம் திகதிவரை தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் வட பகுதி மீனவர்கள் கடந்த மாதம் 25ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதிவரையான ஆறு நாட்கள் கடற்றொழிக்கு செல்ல முடியாது தமது குடும்பத்தினருடன் வீடுகளில் முடங்கியிருந்தனர்.

மேலும் வட மாகாண மீனவர்கள் எதிர்வரும் 7ஆம் திகதி வரைக்குமான பல நாட்கள் கடற்றொழிலில் ஈடுபட முடியாத சூழ்நிலையை குறித்த பயணத்தடை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் வட மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு மீன் பிடியில் ஈடுபடமுடியாத சூழ்நிலையில் எவ்வித வருமானமுமின்றி குடும்பத்தினரோடு ஒருவேளை உணவைக் கூட உண்பதற்கு வழியின்றி மிக பரிதாபகர நிலையை அடைந்துள்ளனர் என அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மைச் செய்திக்கு மேலும் தெரிவித்தார்.

மேலும் வட பகுதி மீனவர்கள் பலர் தாமும் குடும்பத்தினரும் பல நாட்களாக பசி பட்டினியுடன் நாட்களை கடத்துவதாகவும் தமது நிலை குறித்து அரசாங்கத்திற்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் அறியப்படுத்தி தமக்கு நிவாரணங்களைப் பெற்றுத்தருமாறு தமது அமைப்பிற்கு தொடர்ச்சியான கோரிக்கைகளை விடுத்து வருவதாகவும் தெரிவித்த அந்தோணி பெனடிட் குரூஸ் இலங்கை கடற்றொழில் நீரியல் அமைச்சு வட பகுதி மீனவர்களின் நிலை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் கொரோனா பேரிடர் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை நிமித்தம் வருமானங்களை இழந்த குடும்பங்களுக்கு எதிர்வரும் நாட்களில் அரசாங்கம் ஐயாயிரம் ரூபா பணக்கொடுப்பனவுகளை வழங்கவுள்ள நிலையில் குறித்த பணக் கொடுப்பனவிற்கு மேலதிகமாக வட பகுதியில் உள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும் எனவும் அந்தோணி பெனடிட் குரூஸ் தெரிவித்தார்.

மேலும் வட பகுதி மீனவர்களுக்கான நிவாரணங்களை அரசு வழங்கத் தவறும் பட்சத்தில் வட மாகாணத்தில் வசிக்கும் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட 15500 தமிழ் பேசும் மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த பலர் பட்டினிச் சாவை எதிர்கொள்ளவேண்டிய மிக பரிதாப நிலை ஏற்படும் என இலங்கை மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.