வடமாகாணம் மன்னார்

சிலாவத்துறை, கொண்டச்சிக்குடா, முள்ளிக்குளம் பிரதேசக் காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்க மறுப்பு

கையளிக்கப்படுமென மைத்திரி- ரணில் அரசாங்கம் உறுதியளித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது
பதிப்பு: 2021 ஜூன் 06 20:46
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 07 20:46
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் இலங்கை படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை மீள வழங்குவதற்காக மைத்திரி- ரணில் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கையின் தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தினால் காலவரையின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளதாகப் காணிகளின் உரிமையாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள சிலாவத்துறை, கொண்டச்சிக்குடா, முள்ளிக்குளம் ,ஆகிய பகுதிகளில் உள்ள தமது காணிகளே இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என காணி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
 
இந்த நிலையில் அவற்றை மீள வழங்குவதற்கு கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இன்றைய ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டுள்ளதாக காணிகளின் உரிமையாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவில் கடற்படை மற்றும் விஷேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான குடி நிலக்காணிகள் விவசாய நிலங்கள் மற்றும் ஏனைய நிலப்பரப்புகளை அதன் உரிமையாளர்களான பொதுமக்களுக்கு மீள கையளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு பேரவை இணைப்பாளர் அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் மேற்படி முசலிப் பகுதியில் கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நிலை கொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் எனினும் இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுடன் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான அனைத்துப் பணிகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு பேரவை இணைப்பாளர் அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பசார் பகுதிக்கு அருகாமையில் ஆண்டாண்டு காலமாக முஸ்லிம் மக்கள் வாழ்ந்த குடியிருப்பு காணிகள் கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

சுமார் 112 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 36 ஏக்கர் விஸ்தீரணம் உடைய மேற்படி குடி நிலக்காணிகளை ஆக்கிரமித்துள்ள கடற் படையினர் அங்கு முகாமொன்றினையும் அமைத்துள்ளனர். இந்த நிலையில் அக்காணிகளை விடுவிக்கக்கோரி 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதப் பகுதியில் சிலாவத்துறை மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்ருந்தனர்.

இந்த சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் உத்தரவுப்படி சிலாவத்துறை கடற் படையினர் தம்வசமுள்ள 36 ஏக்கர் பரப்பளவுடைய பொதுமக்களின் காணியில் சுமார் 6 ஏக்கர் பகுதியை விடுவிப்பதற்கு முன்வந்தனர்.

குறித்த 6 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல்கள் சிலாவத்துறை மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் தற்போது அது தொடர்பில் எதுவித நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் இணைப்பாளர் அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

இதேவேளை முசலிப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கொண்டச்சிக் குடாவைச் சேர்ந்த 33 தமிழ் குடும்பங்களுக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் விஸ்தீரணமுடைய குடி நிலக்காணியில் இலங்கை விஷேட அதிரடிப்படை மற்றும் கடற்படையினர் நிலை கொண்டுள்ளனர்.

அத்துடன் கொண்டச்சிகுடா இந்து மயானம், விளையாட்டு மைதானம் மற்றும் இந்து ஆலயம் ஆகியன அமைந்துள்ள சுமார் 4 ஏக்கர் காணியும் மேற்படி படைத்தரப்பின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாக அந்தோணி பெனடிட் குரூஸ் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் வட மாகாண காணி ஆணையாளரின் அனுமதியுடன் கொண்டச்சிகுடா மக்களுக்கு காணி கச்சேரி நடத்தப்பட்டு முசலிப் பிரதேச செயலகத்தினால் கடந்த 2005 ஆம் ஆண்டு இக்காணிகள் 33 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

குறித்த காணிகளின் உரிமையாளர்கள் 33 பேர்களிடம் இக்காணிக்கான உரிய அனுமதிப்பத்திரங்கள் கைவசம் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மேலும் கொண்டச்சிக்குடா மக்களும் படையினர் வசம் உள்ள தமது காணிகளை மீளத் தம்மிடம் வழங்குமாறு கோரிக்கைகளை முன்வைத்து பல நடவடிக்கைகளை முன்னெடுத்தும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை என அந்தோணி பெனடிட் குரூஸ் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2007ஆம் ஆண்டு முசலி பிரதேச செயலக பிரிவில் நிகழ்ந்த இராணுவ நடவடிக்கை காரணமாக முள்ளிக்குளம் கிராம மக்கள் இடம்பெயர்ந்தனர். இந்தநிலையில் முள்ளிக்குளம் கிராமம் முழுமையாக கடற் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் தற்பொது உள்ளது.

கடற் படையினர் வசம் உள்ள முள்ளிக்குளம் மக்களில் குறிப்பிட்ட தொகையினரின் காணிகளுக்கு மாற்றீடாகக் காயக்குழி மற்றும் மலங்காடு ஆகிய பகுதிகளில் காணிகள் வழங்கப்பட்டு அவர்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

எனினும் முள்ளிக்குளம் மக்களின் அநேகமானவர்களுக்கு எதுவித மாற்றுக் காணிகளும் இதுவரை வழங்கப்படவில்லை. அத்துடன் கடற்படையினர் ஆக்கிரமிப்பிற்குள் உள்ள முள்ளிக்குளம் மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான நடவடிக்கைகளும் கைவிடப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு பேரவை இணைப்பாளர் அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் குறிப்பிட்டார்.