இலங்கை ஒற்றையாட்சி அரசின்

பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராகிறார்- ஆனால் சஜித் அணி மறுப்பு

15 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது
பதிப்பு: 2021 ஜூன் 08 23:36
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 12 21:22
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்கை அனுமதிக்க முடியாதென்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எவரும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையப் போவதில்லையெனவும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரோடு, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 15 பேர் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
 
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற 54 உறுப்பினர்களில் 20பேர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க முன் வந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

நேற்றுத் திங்கட்கிழமை கொழும்பு ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் சுகாதார விதிமுறைகளைப் பேணி முக்கிய கூட்டம் ஒன்று நடந்ததாகவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்கி எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதெனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதெனவும் அமைச்சர் மகிந்தனந்த அழுத்கமகே இன்று பாராளுமன்றத்தில் கூறினார்.

ஆனால் அதனை மறுத்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் சஜித் பிரேமதாசாவே எதிர்க்கட்சித் தலைவர் என்றும் கூறி பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

அதேவேளை ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால் அவருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவரென ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தேசியப் பட்டியல் மூலம் அடுத்த மாதம் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளார். கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியடைந்தது. எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை. ஆனாலும் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் மூலம் ஒரு உறுப்பினர் பதவி கிடைத்தது.

அந்த இடத்திற்கே ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.