வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவில்

கொவிட் நோய்தாக்கம் ஒரு மாதத்தில் 28 சதவீதத்தால் அதிகரிப்பு- மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

பரவல் தொடர்பான ஆய்வு அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது
பதிப்பு: 2021 ஜூன் 09 22:58
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 10 02:48
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
கொவிட் 19 நோய்த் தொற்று இலங்கையில் கடந்த ஒரு மாதத்தில் 28 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மருத்துவர் சங்கத் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பத்தமா குணரட்ன கொழும்பில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சென்ற ஏழாம் திகதியில் தொற்றின் வேகம் அதிகமாகக் காணப்பட்டதாகவும் இந்த ஆபத்து மேலும் தொடரக்கூடிய நிலமை இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
 
நோய்த் தொற்றுத் தொடர்பாக இறுதியாகக் கிடைத்த தகவல்கள் ஆரோக்கியமானதாக இல்லை என்றும் ஆனாலும் இதனைச் சமுகப்பரவல் என்று கூற முடியாதெனவும் கூறிய அவர் மேலும் இரண்டு வாரங்களுக்கு பொது முடக்கத்தை நீடிக்க வேண்டுமெனவும் கூறினார்.

அதேவேளை, சுகாதார சேவையாளர் சங்கமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது முடக்கத்தை நீடிப்பது தொடர்பாக இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்தித்து உரையாடியுள்ளதாகவும் சுகாதார சேவையாளர் சங்கம் மேலும் கூறியுள்ளது

இதேவேளை, இலங்கை முழுவதும் கொவிட்-19 வைரஸ் தொற்றுகள் பரவுவது தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை நாளை பத்தாம் திகதி வியாழக்கிழமை கையளிக்கப்படவுள்ளது.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் வைத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

கொவிட் நோய்த் தொற்றின் அதிகரிப்புத் தொடர்பாக அரசாங்கத்தின் உத்தரவில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதென்று மருத்துவர் சந்திம ஜீவந்தர கூறினார்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் 96 மாதிரிகள் இலங்கை முழுவதிலும் இருந்து எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டே அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.