கொழும்புத் துறைமுகக் கடலில் கப்பல் தீக்கிரையானதால்

மன்னார் கடற்கரையில் ஒதுங்கும் பிளாஸ்ரிக் பொருட்கள்

கடல் ஆமை ஒன்றும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்
பதிப்பு: 2021 ஜூன் 11 21:01
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 12 21:19
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#indianocean
#region
இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் கரையோரக் தமிழ் கிராமங்களில் கடந்த புதன்கிழமை தொடக்கம் பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் மற்றும் குருணை வடிவிலான வெண்ணிறப் பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவு கரையொதுங்கி வருவதாக உள்ளூர் மீனவர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். கொழும்பு கடலில் மூழ்கிவரும் எம். வி எக்ஸ்பிரஸ் பேர்ல் (MV- X Press Pearl) எனும் சரக்கு கப்பலில் எடுத்து வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பிளாஸ்ரிக் மூலப் பொருட்களே மன்னார் மாவட்டத்தின் மீனவக் கிராமங்களில் கரையொதுங்குவதாக மீனவர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தனர்.
 
மன்னார் மாவட்டத்தின் வங்காலை நறுவிலிக்குளம் சிலாவத்துறை அரிப்பு மற்றும் காயக்குழி ஆகிய மீனவக் கிராமங்களில் குறித்த பிளாஸ்டிக் பொருட்களும் அடையாளம் காணமுடியாத துகள்களும் கடந்த புதன்கிழமை தொடக்கம் கரையொதுங்கி வரும் நிலையில் இக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இது தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் மற்றும் அதிகாரிகள் கடந்த வியாழன் அன்று வங்காலை சென்று அங்கு கரையொதுங்கும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களை பார்வையிட்டுள்ளனர்.

மேலும் மன்னார் சிலாவத்துறை கடற்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறந்த நிலையில் கடல் ஆமையொன்றும் கரையொதுங்கியதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடலில் மூழ்கி வரும் எம். வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் கலந்த பிளாஸ்ரிக் மற்றும் இரசாயனப் பொருட்களினாலேயே குறித்த கடல் ஆமை இறந்திருக்கலாம் என சிலாவத்துறை மீனவர்கள் சந்தேகிக்கின்றனர்.

சிங்கப்பூர் நாட்டின் கப்பல் நிறுவனமொன்றிற்கு சொந்தமான எம். வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் சீனா நாட்டில் இருந்து பொருட்களுடன் கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த நிலையில் இலங்கையின் வத்தளை கடற்பரப்பில் தீ விபத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் தீயில் முற்றாக சேதமடைந்த குறித்த சரக்கு கப்பல் பொருட்களுடன் கடலில் மூழ்கி வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் கொள்கலன்கள் மூலம் கப்பலில் எடுத்து வரப்பட்ட பல இரசாயன பொருட்கள் அடங்கிய பொதிகள் உட்பட பிளாஸ்ரிக் மூலப்பொருட்கள் ஆகியன கடலில் மூழ்கி தென் இலங்கையின் கரையோர மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாகக் கரையொதுங்கி வருகிறது.

அத்துடன் இலங்கையின் அரிய வகை கடல் ஆமைகளும் ஏனைய கடல் வாழ் உயிரினங்களும் இறந்த நிலையில் தென்னிலங்கையில் தினமும் கரையொதுங்கி வருகின்றன. மேலும் மூழ்கும் கப்பலில் இருந்து சுமார் 585 தொன் நிறையுடை பிளாஸ்டிக் பொருட்கள் தென்னிலங்கை கடற்கரைகளில் கரையொதுங்கிய நிலையில் இதுவரை அகற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது வட மாகாணத்தின் மன்னார் மாவட்ட கரையோரப் பகுதிகளிலும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்கள் கரையொதுங்கி வரும் நிலையில் கடல் ஆமையொன்றும் இறந்து கரையொதுங்கியமை குறித்து மன்னார் மாவட்ட மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.