கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பயணத் தடைக்கு மத்தியிலும்

வடமாகாணத்தில் போதைப்பொருட் கடத்தல்கள் தொடருவதாக இலங்கைப் பொலிஸார் கூறுகின்றனர்

கடற்பாதுகாப்பை மேலும் அதிகரிப்பது மற்றும் அரசியல் காரணங்கள் இருக்கலாமெனச் சந்தேகம்
பதிப்பு: 2021 ஜூன் 13 19:05
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 15 00:04
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கை அரசாங்கத்தினால் கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு முழுவதிலும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழர் தாயகப்பகுதியான வட மாகாணத்தின் சில பகுதிகளில் கசிப்பு உற்பத்தி மற்றும் சட்டவிரோதப் போதைவஸ்து கடத்தல் அதிகரித்துள்ளன. அத்துடன் இந்தியாவின் தமிழ்நாட்டு பகுதியில் இருந்து கடல் வழியாக படகுகள் மூலம் வட மாகாண மாவட்டங்களுக்கு போதை பொருட்கள் கடத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருட் கடத்தல்களுக்கு இலங்கைப் பொலிஸார், படை அதிகாரிகள் சிலர் மறைமுக ஆதரவு வழங்கி ஊக்குவித்ததாக மக்கள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தனர்.
 
இந்த நிலையில் தற்போது குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் பின்னணியில் ஏதும் அரசியல் காரணங்கள் இருக்கலாமென மக்கள் சந்தேகிக்கின்றனா்.

இலங்கைத்தீவில் நிலவும் பயணத்தடை நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா மற்றும் போதைவஸ்துக் கடத்தல்கள் மற்றும் கசிப்பு தயாரிப்பு தொடர்பில் இலங்கை பொலிஸ் மற்றும் மதுவரித் திணைக்களத்தினரால் சந்தேகத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோதப் போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கடல் வழியாக போதைவஸ்துக் கடத்தல்களை நீண்ட காலங்களாக மேற்கொண்ட மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.

யாழ் குருநகரைச் சேர்ந்த குறித்த மூன்று சந்தேக நபர்களிடமிருந்து ஏழு கோடி ரூபா பெறுமதியான பெருமளவு ஹெரோயின் மற்றும் ஐஸ் என அழைக்கப்படும் போதைவஸ்து பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் வழியாக படகுகள் மூலம் போதைப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரும் மேற்படி மூவர் அடங்கிய இக் கும்பல் பின்னர் அதனை தரைவழியாக கொழும்பிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் அறியவந்துள்ளது.

இந்தியா தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 12 தடவைகளுக்கு மேலாக போதைவஸ்து பொருட்களை மேற்படி கும்பல்கள் கடல் வழியாக கடத்தி வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் மேலும் தெரிய வந்துள்ளது.

இதேசமயம் யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கு பகுதியில் மீன்பிடிக் கட்டுமரமொன்றில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் சுமார் 55 கிலோ நிறையுடைய கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. பின்னர் மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகளை இலங்கை இராணுவத்தினர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரைக்கு அருகாமையில் சில்லாலைப் பகுதியில் புதர்களுக்கு மத்தியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கஞ்சா பொதிகள் இலங்கை கடற்படையினரால் அண்மையில் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 240 கிலோ நிறையுடைய குறித்த கஞ்சா பொதிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட இளவாலைப் பொலிஸார் இந்தியாவில் இருந்து மாதகல் கடல் மார்க்கமாக இவை கடத்தி வரப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

குறித்த கஞ்சா பொதிகள் கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதே சமயம் மன்னார் மாவட்டத்தின் வட்டுப்பித்தான் மடுப் பகுதியில் உள்ள விவசாய நீர் வாய்க்கால் ஒன்றில் இரகசியமாகச் செயற்பட்ட கசிப்பு தயாரிப்பு நிலையமொன்றினை இலங்கை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் கண்டுபிடித்ததுடன் கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிக்கும் பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பில் சந்தேக நபரொருவரையும் கைது செய்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்தில் இரணை இலுப்பைக் குளம் பூசாரிகுளம் காட்டுப் பகுதியில் செயற்பட்ட கசிப்பு தயாரிக்கும் இடமொன்றினை அண்மையில் சுற்றிவளைத்த மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள் சந்தேகத்தில் ஒருவரைக் கைது செய்ததுடன் கசிப்பு மற்றும் கசிப்பு வடிக்கும் உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.

இதேவேளை மன்னார் மாவட்டம் இலுப்பைக்கடவை சிப்பி ஆற்றுப் பகுதியில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 90 கிலோ நிறையுடைய கஞ்சாவினை மன்னார் பொலிஸார் அண்மையில் கைப்பற்றினர். இது தொடர்பில் கனரக டிரக் ஒன்றைக் கைப்பற்றிய பொலிஸார் மேற்படி கஞ்சாவினை தென் இலங்கைக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த மூவரைக் கைது செய்துள்ளனர்.

மன்னார் பேசாலைக் காட்டாஸ்பத்திரிப் பகுதியில் இலங்கை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சுமார் 5.5 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் பேசாலை காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரைப் பொலிஸார் கைது செய்த நிலையில் அவர் மன்னார் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் பேசாலை நான்காம் வட்டாரம் கடற்கரை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 46 கிலோ நிறையுடைய கஞ்சாப் பொதிகளும் பேசாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகள் பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொவிட் நோய்த் தொற்றையும் அமுலில் உள்ள பயணத் தடையையும் பொருட்படுத்தாது வாரத்தில் பல தடவைகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கஞ்சா ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொழில் முறையான கடத்தலில் அதிக கால அனுபவமும் அதில் தேர்ச்சியும் கொண்டவர்களால் குறித்த கடத்தல் நடவடிக்கைகள் மிகுந்த சாதுரியமாக மேற்கொள்ளப்படுவதால் குறித்த கடத்தல் நடவடிக்கைகளை முறியடிப்பது கடினமான பணி எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

போதைவஸ்துக் கடத்தல்காரர்கள் தமது கடத்தல்களின் பிரதான தளமாக யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களின் மீனவக் கிராமங்களைப் பயன்படுத்துவதினால் குறித்த கடத்தல்களுக்கு உள்ளூர் மீனவர்களும் துணை போவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

ஆனாலும் வடக்குக் கிழக்குக் கடல் பிரதேசங்களில் இலங்கைக் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்கும் நோக்கில் போதைப் பொருட் கடத்தல்காரர்கள் கைது செய்யப்படலாமெனவும் மக்கள் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன் வடக்குக் கிழக்கு மீனவர்களைக் கண்காணிக்கவும் இறுக்கமான நடைமுறைகள் மற்றும் நெருக்குவாரங்களைக் கொடுக்கும் நோக்கிலும் கைது நடவடிக்கைகளைப் பொலிஸார் துரிதப்படுத்தக் கூடுமெனவும சந்தேகிக்கப்படுகின்றது.