வடமாகாணம் முல்லைத்தீவு

முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களைப் பதிவு செய்யுமாறு பொலிஸார் உத்தரவு- படிவங்கள் வழங்கப்பட்டன

ஒரு மணி நேரத்தில் பூர்த்தி செய்து கையளிக்குமாறும் பணிப்பு
பதிப்பு: 2021 ஜூன் 14 22:32
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 14 23:47
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
தமிழர் தாயகமான வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் வீடுகளில் தங்கியிருப்பவர்களின் விபரங்களைப் பதிவு செய்யுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். பதிவதற்கான படிவங்கள் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்துப் பிரதேசக் குடியிருப்பாளர்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறலாமென மக்கள் சந்தேகிக்கின்றனர். முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்களைப் பதிவு செய்யும் நோக்கம் தொடர்பாகப் பொலிஸார் எதுவுமே கூறவில்லை என்றும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
 
படிவங்களை ஒரு மணி நேரத்தில் பூர்த்தி செய்து பொலிஸ் நிலையத்தில் கையளிக்குமாறு பொலிஸார் கூறியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் வசிக்கும் கிராமவாசி ஒருவர் மூலமாகப் படிவங்களைப் பொலிஸார் வழங்கியதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இந்தப் படிவங்கள் தொடர்பாக முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள கிராம சேவகர்களுக்கு எதுவும் தெரியாதெனவும் மக்கள் கூறுகின்றனர்.

சிவில் நடவடிக்கைகளின்போது கிராம சேவகர்களின் ஒத்துழைப்பைப் பொலிஸார் பெற வேண்டுமெனவும் ஆனால் அவ்வாறான நடவடிக்கைகள் எதுவுமேயின்றி பிரதேசவாசி ஒருவர் மூலமாகப் படிவங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கைப் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76 ஆவது பிரிவிற்கு அமைவாகச் செய்யப்படும் ஆணை என்று அந்த படிவத்தில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிடப்பட்டுள்ளது.