இந்தோ பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரம்

ஐ.ஒ.ஆர்.ஏ-பிம்ஸ்டெக் அமைப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியில் புதுடில்லி

அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடல்
பதிப்பு: 2021 ஜூன் 21 20:56
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 22 10:50
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#indianocean
#region
இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இன்று திங்கட்கிழமை தொலைபேசியில் உரையாடியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில் நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிராந்தியக் கூட்டுச் செயற்பாடுகள் (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) தொடர்பாகவும் ஐ.ஒ.ஆர்.ஏ எனப்படும் இந்து சமுத்திரத்தைத் தொடுகின்ற கடலின் கரையோரத்தில் உள்ள பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டு முயற்சி (The Indian Ocean Rim Association- IORA) பற்றியும் மற்றும் இதர இராஜதந்திரச் செயற்பாடுகள் குறித்தும் பேசப்பட்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
 
ஐ.ஒ.ஆர்.ஏ எனப்படும் இந்து சமுத்திரத்தைச் தொடுகின்ற கடலின் கரையோர நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டு முயற்சி என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும். அதாவது இந்துமா சமுத்திரத்தின் கடலோர எல்லைகளைத் தொடுகின்ற நாடுகளின் கூட்டுச் செயற்பாடுகளாகும்.

கடந்த ஆண்டு இந்த அமைப்பில் பிரான்ஸ் இணைந்துள்ளது. ஏனெனில் பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான சில தீவுகள் இந்தப் பிராந்தியத்தில் உண்டு. அது மாத்திரமல்ல இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் பிரான்ஸ் தனித்தும் சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

ஆனால் இந்து சமுத்திரத்தைத் தொடுகின்ற கடலின் கரையோரத்தில் இருக்கும் பாக்கிஸ்தான் ஐ.ஒ.ஆர்.ஏ அமைப்பில் அங்கம் வகிக்கவில்லை. பாக்கிஸ்தான் அங்கம் வகிப்பதை இந்தியா விரும்பவில்லை என்பதையே நகர்வுகள் காண்பிக்கின்றன. இந்த அமைப்பில் இணைவதற்கு பாக்கிஸ்தான் விண்ணப்பித்துமுள்ளது.

அவுஸ்திரேலியா, மொரீசியஸ், மாலைதீவு, ஈரான், இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட 23 நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. 1997 ஆம் ஆண்டு மார்ச் ஆறாம் திகதி இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்து சமுத்திரத்தைத் தொடுகின்ற கடலின் கரையோரத்தில், அமைதியான, நிலையான மற்றும் வளமான கடல் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் 23 உறுப்பு நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்களை ஒன்றிணைத்தது. 20 ஆவது ஆண்டு நிறைவு மாநாடு 2017 ஆம் ஆண்டு இந்தோனிஷியாவில் நடைபெற்றது.

வர்த்தகம் மற்றும் கல்விச் செயற்பாட்டாளர்களையும் இந்த அமைப்பு கூட்டிணைக்கிறது.

பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான செயற்பாடு என்பது தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் ஏழு நாடுகளின் சர்வதேச அமைப்பாகும்,

இந்த அமைப்பு 1.73 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளது மற்றும் இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் 2021 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை 3.8 ரில்லியன் டாலராக அதிகரிப்பதே நோக்கமாகும்.

பங்களாதேஷ் பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகள் இதன் உறுப்பு நாடுகளாகும். 1997 ஆம் ஆண்டு யூன் மாதம் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பிலும் பாக்கிஸ்தான் இல்லை. 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சார்க் அமைப்பில் பாக்கிஸ்தான் அங்கம் வகிக்கின்றது.

ஆனால் தற்போது உருவாக்கியுள்ள இந்தோ- பசுபிக் விவகாரத்தினால் சார்க் அமைப்பைச் செயற்படுத்த இந்தியா பெருமளவில் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக பாக்கிஸ்தான் அங்கம் வகிக்காத பிம்ஸ்டெக் அமைப்பை ஊக்குவிப்பதிலேயே இந்தியா ஆர்வம் காட்டுகின்றது.

ஆகவே இந்து சமுத்திரத்தைத் தொடுகின்ற கடலின் கரையோரத்தில் உள்ள நாடுகளை இணைக்கும் ஐ.ஒ.ஆர்.ஏ அமைப்பிலும், தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை மையப்படுத்திய பிம்ஸ்டெக் அமைப்பிலும் பாக்கிஸ்தான் இல்லாத நிலையில், இந்த இரு அமைப்புகளையும் ஊக்குவிப்பதோடு இவற்றில் இலங்கையை முக்கிய செயற்பாட்டாளராக மாற்றும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றது என்பதையே ஜெய்சங்கரின் இன்றைய உரையாடலில் அவதானிக்க முடியும்.

சீன அரசினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு போட் சிற்றி எனப்படும் கொழும்பு சர்வதேச நிதி வர்த்தக நகரத்தின் செயற்பாடுகளுக்கு முன்னதாக மேற்படி இரண்டு அமைப்புகளின் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கிலும் அமைச்சர் ஜெய்சங்கர் அமைச்சர் தினேஸ் குணவர்த்னவுடன் உரையாடியிருக்கலாமென கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அகற்றிவிடுவதற்காக இலங்கை முயற்சி எடுத்து வரும் நிலையில், தங்கள் புவிசார் அரசியல் நோக்கில் இந்த உரையாடல் இடம்பெற்றிருக்கிறது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை கொழும்பில் சந்தித்த கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு தமிழர்கள்தான் கேட்க வேண்டுமெனக் கூறியிருந்தார்.

13 ஆவது திருத்தச் சடடம் தீர்வல்ல என்று தமிழ்த்தேசியக் கட்சிகள் அன்று முதல் கூறி வந்த நிலையிலும் 13 ஆவது திருத்தச் சட்டமே தீர்வு என வலியுறுத்தி வந்த இந்தியா, தற்போது இலங்கை அரசாங்கத்துடன் அது பற்றிப் பேசவும் தயங்குகின்றது என்பதையே தூதுவரின் கருத்து எடுத்துக் காட்டியிருக்கிறது.