ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியலில்

ரணில் விக்கிரமசிங்க நாளை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பு

விரைவில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவியேற்பாரென்கிறார் பாலித ரங்கபண்டார
பதிப்பு: 2021 ஜூன் 22 23:45
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 23 22:22
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#slparliament
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான ரணில் விக்கிரமசிங்க நாளை புதன்கிழமை இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் வெளிவந்துள்ளது. நாளை பதவியேற்கவுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சித் தலைவர் அந்தஸ்த்து மற்றும் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் என்ற மரியாதையோடு எதிர்க்கட்சி வரிசையில் முன்பக்க ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
சபாநாயகர் சபைக்குள் வரும் சபா மண்டப வாசலுக்கு அருகாக இருக்கும் ஆசனம் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரின் ஆதரவு கிடைக்குமென கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.

அடுத்து வரும் மாதங்களில் சுமார் 60 உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்பாரெனவும் அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளர்.

அதேவேளை, சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக இருப்பாரெனவும் மீண்டுமொருமுறை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டுச் சபாநாயகரிடம் நம்பிக்கை தெரிவிப்பார்கள் எனவும் ஹர்சாடி சில்வா தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு ஆசனத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி பெறவில்லை. ஆனாலும் கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் ஒன்று இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டது.

அந்த இடத்திற்கே ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பரிந்துரைத்தது.