இராணுவ முகாங்கள் அதிகரித்துள்ள நிலையில்

வடமாகாணத்தில் புதிய பொலிஸ் நிலையங்கள் திறப்பு

வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதே நோக்கம் என்கிறது அரசாங்கம்
பதிப்பு: 2021 ஜூன் 24 20:04
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 25 00:45
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் மாகாணங்களில் ஒன்றான வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் படை முகாம்கள் ஏலவே அமைந்துள்ள நிலையில், அங்கு ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கம் புதிய பொலிஸ் நிலையங்களை உருவாக்கும் செயற்பாடுகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக் காலங்களில் பொலிஸாரினால் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு மரணங்கள் லொக்கப் மரணங்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் மற்றும் சித்திரவதைகளினால் இம்மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் கடும் பீதியடைந்துள்ள நிலையில் இம்மாகாணங்களில் புதிய பொலிஸ் நிலையங்களை அமைக்கும் பணிகளை இலங்கை அரசாங்கத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.
 
இதற்கமைவாக வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் கடந்த 23ம் திகதி புதன்கிழமை காலை இரண்டு பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரபுரம் மற்றும் நெளுக்குளம் ஆகிய தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலேயே மேற்படி பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு தமிழ் கிராமங்களிலும் ஏலவே பொலிஸ் காவலரண்கள் செயற்பட்டு வந்த நிலையில், மேற்படி இரண்டு பொலிஸ் காவலரண்களும் பொலிஸ் நிலையங்களாகத் தரமுயர்த்தப்பட்டு புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி இரண்டு பொலிஸ் நிலையங்களும் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சிவ தர்மரத்தினாவினால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

இதேவேளை மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளத்தில் இயங்கிய பொலிஸ் காவலரண் பொலிஸ் நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த 23ம் திகதி புதன்கிழமை மாலை 5 மணியளவில் அப்பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க தலைமையில் நடைபெற்ற மேற்படி திறப்பு விழா வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சிவ தர்மரத்தினா குறித்த உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இலங்கையின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரால் விடுதலைபுலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதிகள் கைப்பற்றப்பட்டன.

இவ்விதம் கைப்பற்றப்பட்ட தமிழர் பிரதேசம் எங்கும் அச்சமயம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றிய கோட்டபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் பொலிஸ் நிலையங்கள் பல திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் ஏற்பட்ட இலங்கையின் ஆட்சி மாற்றத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கும் பணிகள் கைவிடப்பட்டது.

தற்போது இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச பதவியில் உள்ள நிலையில், அவரின் அரசாங்கத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ரியால் அட்மிரல் சரத் வீரசேகரவின் நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் நன்மை கருதி 197 புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையிலே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியால் அட்மிரல் சரத் வீரசேகரவின் உத்தரவில் வட மாகாணத்தின் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் கடந்த புதன்கிழமை மூன்று புதிய பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.