வடமாகாணத்தில்

அபாயகரமான வெடி பொருட்கள் மீட்பு

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்டவையென பிரதேச மக்கள் கூறுகின்றனர்
பதிப்பு: 2021 ஜூன் 24 23:55
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 25 00:51
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
தமிழர் தாயகத்தின் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் யுத்த காலத்தில் பாவிக்கப்பட்ட அபாயகரமான வெடிபொருட்கள் தற்போது பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வரும் நிலையில் மேற்படி வெடி பொருட்களினால் பல வெடிப்புச் சம்பவங்களும் அண்மையில் அங்கு நிகழ்ந்துள்ளதினால், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. கைக் குண்டுகள் ஆட்டிலறிக் குண்டுகள் செல்கள் ரொக்கட் வெடி குண்டுகள் மற்றும் விமானக் குண்டுகளே பொது மக்களின் குடி நிலக்காணிகள் வயற் காணிகள் கைவிடப்பட்ட கிணறுகள் மற்றும் கடற் கரையோரங்களில் கண்டுபிடிக்கப்பட்டு அவை இலங்கைப் படைத்தரப்பினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
 
இவ்வாறான சூழ்நிலையில் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகாமையில் ஏப்பிரல் மாதம் 25 ஆம் திகதி தனியார் காணியொன்றில் காணப்பட்ட குண்டொன்று வெடித்ததில் குளிர்பான விற்பனையாளரான இளைஞரொருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞர் படுகாயம் அடைந்தார்.

முல்லைத்தீவு செல்வபுரம் எனுமிடத்தைச் சேர்ந்த 19 வயதுடைய குமாரசாமி சந்திரமோகன் டிசான் என்பவர் மேற்படி குண்டு வெடிப்பில் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில் அவரின் நண்பரான முல்லைத்தீவு வட்டுவாகலைச் சேர்ந்த 20 வயதுடைய செல்வக்குமார் சயந்தரூபன் என்பவர் படுகாயமடைந்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலகப் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் ஏற்பட்ட பிரிதொரு குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குடும்பப் பெண்ணொருவர் காயமடைந்தார். புதர்கள் அடர்ந்து காணப்பட்ட தனது காணியை அவர் துப்பரவு செய்து குப்பைகளுக்குத் தீ வைத்த சமயம் குப்பைகளுக்குள் காணப்பட்ட கைக்குண்டு வெடித்ததில் குறித்த பெண் காயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பகுதியில் ஆட்டிவெட்டை எனும் இடத்தில் உள்ள காணியொன்றை துப்பரவு செய்த அதன் உரிமையாளர் குப்பைகளுக்கு தீ மூட்டியவேளை குப்பைகளில் இருந்த கைக்குண்டொன்று வெடித்தது.

எனினும் காணி உரிமையாளர் காயங்கள் எதற்கும் இலக்காகவில்லை. மேலும் குறித்த காணியில் இருந்து வெடிக்காத நிலையில் ஆட்டிலறி செல்லொன்றை கிளிநொச்சி பொலிஸார் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் மீட்டு அதைச் செயலிழக்கச் செய்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கடற் கரைப் பகுதியில் அண்மையில் ஆட்டிலறி குண்டொன்று மீட்கப்பட்டு இலங்கை இராணுவத்தால் அது வெடிக்கச் செய்யப்பட்டது.

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் காணியொன்று துப்பரவு செய்யப்பட்ட நிலையில் அங்கு விமானக் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காணியின் உரிமையாளரினால் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் குறித்த குண்டினை செயலிழக்கச் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரின் ஸ்ரன்லி வீதியில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் ஒன்றில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆட்டிலறிச் செல்லொன்றை யாழ் மாநகர சபை ஊழியர்கள் மீட்டுள்ளனர். பின்னர் மேற்படி. ஆட்டிலறி செல் இலங்கை இராணுவத்தினரால் செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அராலி தெற்குப் பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆட்டிலறிக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காணியின் உரிமையாளர் அங்கு அமைந்துள்ள கிணற்றை சுத்தப்படுத்தியவேளையே மேற்படி குண்டுகள் வெளிப்பட்டுள்ளது. இதையடுத்து மீட்க்கப்பட்ட குண்டுகள் இலங்கை விஷேட அதிரடிப்படையினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள பட்டகட்டுவான் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டொன்றை பொலிஸார் அண்மையில் மீட்டுள்ளனர். சுமார் 30 கிலோ நிறையுடைய மேற்படி குண்டு இந்தியா நாட்டுத் தயாரிப்பு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த குண்டு இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயம் அவர்களினால் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கடந்த வருடம் சுமார் 30 ற்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு வெடி பொருட்கள் கிளைமோர் குண்டுகள் துப்பாக்கி ரவைகள் ஆகியன இலங்கைப் பொலிஸாராலும் படைத்தரப்பினராலும் மீட்கப்பட்ட நிலையில் இவ்வருட ஆரம்பத்தில் இருந்து ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் வட மாகாண மாவட்டங்களில் சுமார் 10 ற்கும் மேற்பட்ட இடங்களில் வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதி யுத்தம் நடைபெற்ற கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பொது மக்களின் குடி நிலக்காணிகள் மற்றும் தோட்டக் காணிகளில் பெருந்தொகையான வெடிப் பொருட்கள் புதையுண்டு காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அரசாங்கம் குறித்த ஆபத்தான வெடி பொருட்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாததினால் தாம் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழவேண்டிய அபாய நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாது காணப்படும் தமது காணிகளை துப்பரவு செய்வதற்கு பொது மக்கள் அஞ்சுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.