உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரம்

றிஷாத் பதியூதீன் கைது தொடர்பான விசாரணைகளில் இருந்து தொடராக விலகும் நீதியரசர்கள்

காரணம் என்ன?
பதிப்பு: 2021 ஜூன் 25 23:13
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 26 01:25
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
றிஷாத் பதியூதீன் மற்றும் அவர் சகோதரர் றியாஜ் பதியூதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களைப் பரிசீலிக்கும் இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர் குழாமில் இருந்து இரண்டு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஏலவே விலகியுள்ள நிலையில் குறித்த மனுக்கள் மீதான பரிசீலனையில் இருந்தன. தற்போது நீதியரசர் ஏ.எச்.எம்.ஏ. நவாஸ் விலகியுள்ளார். பதியூதீன் சகோதர்களின் அடிப்படை உரிமை மனுக்களைப் பரிசீலனை செய்வதற்கான அமர்வு கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை உயர் நீதிமன்றில் நடைபெற்றவேளையே தனது தனிப்பட்ட காரணங்களால் மேற்படி மனுக்கள் தொடர்பான அமர்வில் இருந்து தான் விலகுவதாக நீதியரசர் ஏ.எச்.எம்.ஏ.நவாஸ் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீன் மற்றும் அவர் சகோதரர் றியாஜ் பதியூதீன் ஆகியோர் இலங்கை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சகோதரர்கள் இருவரும் தமது கைதிற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா ஊடாக இலங்கை உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை கடந்த மே மாதம் 18 ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலிக்கும் உயர் நீதிமன்ற அமர்வு கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற வேளையே உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.ஏ. நவாஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த மனுக்கள் மீதான பரிசீலனையில் இருந்து தான் விலகிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

றிஷாத் பதியூதீன் அவரின் சகோதரர் றியாஜ் பதியூதீன் ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா ஊடாக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர்களினால் கடந்த மே மாதம் 28 ஆம் திகதியன்று முதன் முதலாக பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட சமயம் குறித்த மனு மீதான விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக நீதியரசர் ஜனக் டி சில்வா அச்சமயம் தெரிவித்திருந்தார்.

மேலும் இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக தான் செயலாற்றிய நிலையில் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வில் மனுதாரர்களான பதியூதீன் சகோதர்கள் தொடர்பாக பலர் வழங்கிய சாட்சியங்களைத் தான் செவிமடுத்ததினால் அதன் அடிப்படையில் சகோதரர்கள் இருவரினாலும் தாக்கல் செய்யப்பட்ட உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையில் இருந்து தான் விலகிக்கொள்வதாக நீதியரசர் ஜனக் டி சில்வா அன்றைய தினம் தெரிவித்திருந்தார்.

உயர் நீதிமன்றில் பதியூதீன் சகோதரர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கடந்த ஜூன் 4 ஆம் திகதி இரண்டாவது தடவையாக பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட சமயம் குறித்த மனுக்களைப் பரிசீலனை செய்யும் நீதியரசர் குழாமில் இருந்து நீதியரசர் யசந்த கோத்தகொட தனிப்பட்ட காரணங்களுக்காக தான் விலகுவதாகத் தெரிவித்து அதில் இருந்து விலகிக்கொண்டார்.

இவ்வாறான சூழ்நிலையில் பதியூதீன் சகோதரர்களின் மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்ற அமர்வு கடந்த புதன்கிழமை 23ஆம் திகதி நடைபெற்ற வேளை குறித்த மனுக்களைப் பரிசீலிக்கும் செயற்பாடுகளில் இருந்து நீதியரசர் ஏ.எச்.எம்.ஏ.நவாஸ் தனது தனிப்பட்ட காரணங்களினால் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீன் மற்றும் அவர் சகோதரர் றியாஜ் பதியூதீன் ஆகியோர்களின் அடிப்படை உரிமை மீறல் மனுவினை உயர் நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளது.

இதேவேளை பதியூதீன் சகோதரர்கள் கடந்த ஏப்பிரல் மாதம் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டு தற்போது இரண்டு மாதங்கள் கழிந்துள்ளது. இந்த நிலையில் சகோதரர்கள் இருவரும் தமது கைதிற்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் மேற்படி மனுக்கள் மீதான நான்கு அமர்வுகள் உயர் நீதிமன்றில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.