வடமாகாணம்

மன்னாரில் இரு கிராமசேவகர் பிரிவுகள் முடக்கம்

கொவிட் 19 பரிசோதனை மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டன
பதிப்பு: 2021 ஜூன் 25 23:55
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 26 01:20
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கொவிட்-19 நோய்த் தொற்று அதி தீவிரமாக பரவிவரும் நிலையில், தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய இரண்டு கிராமசேவையாளர் பிரிவுகளும் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். தலைமன்னார் பியர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொவிட்-19 நோய்த் தொற்றுடன் 33 பேர்கள் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட 80 பி.சிஆர் பரிசோதனைகளில் தலைமன்னார் பியர் பகுதிகளைச் சேர்ந்த 29 பேர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.


 
இந்த நிலையில் தலைமன்னார் பியர் பகுதியில் இருந்து வேறு பகுதிகளுக்கு கொவிட் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவுகள் தனிமைபடுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் கூர்மை செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

தலைமன்னார் பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் இந்தியாவில் திரிபடைந்த புதிய வைரசினால் பீடிக்கப்பட்டவர்களா என்பது தொடர்பில் அவர்களின் பீ.சீ.ஆர் மாதிரிகள் கொழும்பு ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் இதன் முடிவுகள் ஒரு வாரத்தில் கிடைக்கப்பெறும் எனவும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்

இதேவேளை தலைமன்னார் பியர் பகுதியில் குறுகிய சில தினங்களுக்குள் 62 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தலைமன்னார் பியர் பகுதி இலங்கை இராணுவத்தினரின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலைமன்னார் பியர் பகுதியின் பிரதான பாதைகளில் இராணுவத்தினரால் வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் இலங்கை பொலிஸாரும் அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் பியர் பகுதியில் சுகாதார அதிகாரிகளினால் இனங்காணப்படாத மேலும் பல கொவிட் நோய்த் தொற்றாளர்கள் உள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தநிலையில் தலைமன்னார் பியர் பகுதிக்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்காது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைமன்னார் பியர் பகுதி வெள்ளிக்கிழமை தனிமைபடுத்தப்பட்டு முடக்கப்பட்ட நிலையில் அங்குள்ள மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லவில்லை எனத்தெரிவிக்கப்படுகிறது.