இலங்கையில்

ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும் என்கிறார் ஜனாதிபதி கோட்டாபய

சர்வதேச சக்திகள் உள் விவகாரங்களில் தலையிட முடியாதெனவும் கூறுகிறார்
பதிப்பு: 2021 ஜூன் 26 21:45
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 26 23:26
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை மக்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக உரையாற்றியிருந்தார். சுமார் ஒரு மணி நேரமும் பத்து நிமிடங்களும் நிகழ்த்தப்பட்ட அந்த உரையில் தமிழ் மக்கள் என்ற வார்த்தைகளோ, இனப் பிரச்சினைக்கான தீர்வு அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டமை பற்றியோ எதுவுமே பேசவில்லை. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கவுள்ள ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைக்கான தடைகள் பற்றியோ, ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானம் குறித்தோ அவர் எதுவுமே கூறவில்லை.
 
ஆனால் எந்தவொரு வெளிநாட்டுச் சக்திகளுக்கும் இலங்கையில் இடமளிக்க முடியாதெனவும் எவரும் இலங்கையின் இறைமைக்குச் சவாலாக செயற்பட முடியாதெனவும் கோட்டாபய ராஜபக்ச அடித்துச் சொன்னார்.

16 தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பில் விடுலை செய்யப்பட்டது பற்றியோ அல்லது துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பினால் எழுந்துள்ள எதிர்ப்புகள் தொடர்பாகவோ எந்தக் கருத்துக்களையும் ஜனாதிபதி வெளியிடவில்லை.

அத்துடன் தனிப்பட்ட சலுகைகளை எதிர்பார்த்து அதனைப் பூர்த்தி செய்யாததால் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தைப் பலர் விமர்சிப்பதாகக் குற்றம் சுமத்திய ஜனாதிபதி தனிப்பட்ட நலன்களைவிட மக்களின் நலன்களுக்கு மாத்திரமே மதிப்பளிக்க முடியுமெனவும் கூறினார்.

கடந்த காலத்தில் அச்சுறுத்தலை எதிர்கொண்ட அம்பாறை பொத்துவில் கடலோர விகாரை, தீகவாவி போன்ற கலாசார மத உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கும்.

இலங்கை மக்கள் இனியும் ஒற்றையாட்சி குறித்து அச்சமடையத் தேவையில்லை. இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் எந்த வகையிலும் இடமளிக்காது. தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டிய தருணத்தில் செலுத்த முடியாமற் போகும் என்று எதிர்க்கட்சியினர் வெளியிட்ட ஆருடங்களை தகர்த்தெறிந்து ஸ்ரீலங்காவினால் கடன்களை சரியான நேரத்தில் செலுத்த முடிந்ததாகவும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

பல்வேறு சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. தனிப்பட்டரீதியில் சில விம்பங்களை பெரிதுபடுத்திய போதிலும் அரசாங்கத்தின் உண்மையான பக்கங்களை மக்களுக்கு வெளிப்படுத்துவது தடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அதனால் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீது பொய்யான விம்பமே ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

தனது ஆட்சியில் எந்த அரசியல் நியமனங்களும் மேற்கொள்ளவில்லை என்றும் நீதித்துறையிலும் அதேபோன்ற கொள்கையையே பின்பற்றியதாகவும் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய, கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு முன்நகர்ந்து பயணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பலவீனமடைந்திருப்பதாகவும், தோல்வியடைவதாகவும் விமர்சனம் வெளியிடுபவர்கள், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தனிப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்ததோடு, அவை இன்று நிறைவேற்றப்படாத காரணத்தினாலாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.