வடமாகாணம் மன்னார் மாவட்டத்தின்

மாந்தை மேற்கு மக்களின் காணிகளை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி

இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிகளில் மோசடிகள் இடம்பெற்றதாகவும் முறைப்பாடு
பதிப்பு: 2021 ஜூன் 28 18:11
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 29 00:12
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவில் வசிக்கும் பொது மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகளை வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் போலி ஆவணங்கள் மூலம் உரிமை கோரி அபகரிக்க முற்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேற்படி அரச காணிகளில் அத்துமீறி அதில் உள்ள பெறுமதி வாய்ந்த காட்டு மரங்களையும் காணி அபிவிருத்தி எனும் பெயரில் டோசர் இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக அழித்து வருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிடப்பட்டுள்ளது.
 
மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவில் இலுப்பைக்கடவை, வெள்ளாங்குளம், பரப்புக்கடந்தான், தேவன்பிட்டி பள்ளமடு ,பெரியமடு, கன்னாட்டி மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள பல கிராமங்களிலேயே இவ்விதம் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகளில் பல மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையிட்டுள்ளனர்.

மேற்படி கிராமங்களில் வதியும் பொது மக்களுக்குப் பல வருடங்களுக்கு முன்னர் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தினால் விவசாய செய்கைகளுக்காவும் மற்றும் குடியிருப்புத் தேவைக்காகவும் வழங்கப்பட்ட அரச காணிகளே போலி ஆவணங்கள் மூலம் உரிமை கோரப்படுவதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தமது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் குறித்த காணிகள் அனைத்தும் மாந்தை மேற்குப் பிரதேசச் செயலகத்தினால் முறைப்படி காணிக் கச்சேரி நடத்தப்பட்டு தமக்கு வழங்கப்பட்டதாகவும் இந்தநிலையில் அரசினால் வழங்கப்பட்ட குறித்த காணிகளில் நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்செய்கைகளைத் தாம் தொடர்ச்சியாக மேற்கொண்டதாகவும் அதில் வீடுகள் அமைத்து வசித்ததாகவும் பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

போரினால் இடம்பெயர்ந்து தற்பொழுது தமது பூர்வீக காணிகளில் மீள்குடியேறி வாழ்ந்து வருவதுடன் தமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மேற்படி காணிகளில் தாம் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குறித்த காணி தமதென உரிமை கோரி வருவதாகப் பாதிக்கப்பட்ட மாந்தை மேற்கு பகுதி மக்கள் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

தமக்கு சொந்தமான காணிகளில் அத்துமீறி நுழைந்து டோசர் இயந்திரங்கள் மூலம் அங்கு காணப்பட்ட மரங்களை அழித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலி ஆவணங்கள் மூலம் தமது காணிகளைக் கையகப்படுத்த முற்படுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களை மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மேற்படி பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.