வடமாகாணம் மன்னார்

கொவிட் நோய்த் தொற்றினால் மடு மாதா பெருநாளில் மக்கள் கலந்துகொள்ளத் தடை

மன்னார் செயலகக் கூட்டத்தில் தீர்மானம்
பதிப்பு: 2021 ஜூன் 28 22:45
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 29 00:15
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டம் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத வருடாந்த பெருநாள் எதிர்வரும் இரண்டாம் திகதி நடைபெறும் நிலையில் கொவிட் -19 நோய் தொற்றுக் காரணமாக வெளி மாவட்டப் பக்தர்கள் குறித்த பெருநாளில் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லையென மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மடு மாதா ஆலயத்தின் ஆடி மாத பெருநாள், சென்ற 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து ஆடி மாதம் 2ம் திகதி திருப்பலி மற்றும் திருச்சொரூபப் பவனியுடன் நிறைவடையும்.
 
இலங்கைத்தீவில் கொவிட் - 19 நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மேற்படி மடு மாதா ஆலயத்தின் இவ்வருட ஆடி மாதப் பெரு நாளை மிக கட்டுப்பாட்டுடன் கடுமையான சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் வெளி மாவட்டத்தவர்கள் மடுமாதா பெருநாளில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படாதென மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

மடுமாதா ஆலயத்தின் ஆடிப் பெருவிழா தொடர்பாக மன்னார் மாவட்டச் செயலகத்தில் கடந்த 16 ஆம் திகதியன்று உயர் மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.

கலந்துரையாடலில் மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னான்டோ, குரு முதல்வர் அருட்தந்தை ஏ. விக்டர் சூசை, சுகாதாரத் திணைக்கள உயர் அதிகாரிகள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மடுமாதா பெருநாளை நடத்துவது தொடர்பாக பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும், பெருநாளில் வெளி மாவட்டங்களில் இருந்து யாத்திரீகர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதிப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

மடுமாதா ஆலயத்தின் ஆடி மாதா பெருநாள் தொடர்பான இரண்டாவது விசேட கலந்துரையாடல் திங்கட் கிழமை காலை 11 மணிக்கு மடுத் திருத்தலத்தின் புனித ஜோசப் வாஸ் தியான மண்டபத்தில் நடைபெற்றது.

16 ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மடு பெருநாள் தொடர்பான முதலாவது கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகள் இந்தக் கலந்துரையாடலில் உறுதிப்படுத்தப்பட்டதாக அரச அதிபர் கூறினார்.

மன்னார் மறை மாவட்டத்தின் பங்குகளில் இருந்து கலந்துகொள்ள தீர்மானிக்கப்பட்டவர்கள் மட்டுமே பெருநாளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

மடுத் திருத்தலத்திற்கு செல்லும் இரண்டு பிரதான பாதைகள் ஊடாகவே அனுமதிக்கப்பட்டவர்கள் உட்செல்ல முடியும். அத்துடன் தேவை ஏற்படின் மடுத் திருத்தலத்திற்கு வருகை தர அனுமதிக்கப்பட்டவர்கள் கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் கடுமையான சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

மடுமாதா பெருநாள் திருப்பலி எதிர்வரும் இரண்டாம் திகதி காலை 6.15 மணிக்கு மன்னார் மறை மாவட்ட ஆயரினால் ஒப்புக் கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஆறு திருப்பலி பூஜைகள் குறிக்கப்பட்ட நேரத்தில் நடைபெறும். ஒவ்வொரு திருப்பலியிலும் சுமார் 30க்கு உட்பட்ட எண்ணிக்கையானோர் மட்டுமே கலந்து கொள்ளமுடியும் என மடு ஆலய நிர்வாகிகள் கூர்மைக்கு தெரிவித்தனர்.

கொவிட் தொற்றுக் காரணமாக இவ்வருட மடு மாதா ஆலய பெருநாளில் பொது மக்கள் கலந்து கொள்ள முடியாததினால், எதிர்வரும் இரண்டாம் திகதி தொலைக்காட்சி அலைவரிசை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகிகள் மேலும் தெரிவித்தனர்.