சர்வதேச அழுத்தங்களுக்கு

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் அடிபணியமாட்டார்- அமைச்சர் மஹிந்த சமரசிங்க விளக்கம்

புதிய யாப்பு வெளிவராது என்கிறார் அமைச்சர் மனோ
பதிப்பு: 2018 ஜூலை 26 10:47
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 26 11:25
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் மற்றும் அரசியல் செயற்பாடுகளிலும் சர்வதேச அழுத்தங்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் அடிபணியமாட்டார் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் பல்வேறு பரிந்துரைகளை செய்துளார் என்றும், ஆனால் அவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையெனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்தபோது இலங்கை அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்களை மைத்திரி- ரணில் அரசாங்கம் அமூல்படுத்தவுள்ளதாக மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கடந்தவாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

புதிய அரசியல் யாப்பு வரும் என்று கூறி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை-- அமைச்சர் மனோ. புதிய யாப்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இல்லையேல் வேறு வழியை நாடவேண்டிய நிலை வரும்-- சம்பந்தன். இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் நின்று கொண்டு ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது-- கணேசலிங்கம்.

இந்த நிலையில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க சர்வதேச அழுத்தங்களுக்கு இலங்கை அடிபணியாது எனக் கூறியுள்ளார்.

புதிய அரசமைப்பு உருவாக்க வேண்டுமென ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் பரிந்துரை செய்துள்ளமை தொடர்பாக சிங்கள ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, உள்நாட்டு விடயங்கள் தொடர்பாக மனித உரிமைச் சபை கேள்வி எழுப்ப முடியதெனக் கூறினார்.

மரண தண்டனையை இலங்கை அரசு ஒருபோதும் அமூல்படுத்தாது என ஜெனீவா மனித உரிமைச் சபையில் கூட்டத்தொடரில், 2015ஆம் ஆண்டு இலங்கையின் வெளிவிகவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் மரண தண்டனைச் சட்டத்தை அமூல்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளமை குறித்தும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க. மனித உரிமைச் சபையின் பரிந்துரைகள் அனைத்தையுமே இலங்கை நிராகரித்துள்ளதாகக் கூறினார்.

இதேவேளை ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அடிபணிந்து மைத்திரி- ரணில் அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை இந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் டளஸ் அழகபெருமா கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் புதிய அரசியல் யாப்பு வெளிவரும் என்பதில் நம்பிக்கையில்லை என அமைச்சர் மனோ கணேசன் பகிரங்கமாகவே கூறியுள்ளார். புதிய அரசியல் யாப்புத் தொடர்பாகக் கூறி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, புதிய அரசியல் யாப்பை ஆண்டின் இறுதிக்குள் மைத்திரி- ரணில் அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இல்லையேல் தமிழர்கள் வேறு வழியை நாடிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கடந்தவாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

அதேவேளை, இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் நின்று கொண்டு ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியாதென யாழ் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறையின் தலைவர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.