போர்க் காலத்தில் இந்தியச் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட

மீன்பிடிப் படகுகளை மீள ஒப்படைக்குமாறு ஈழத்தமிழ் மீனவர்கள் கோரிக்கை

இந்திய மீனவர்களின் படகுகள் இலங்கையினால் மீள ஒப்படைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய மீனவர் சங்கம்
பதிப்பு: 2021 ஜூன் 30 20:03
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 01 02:28
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கையில் கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலைகளினால் இந்தியாவிற்கு கடல் வழியாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களை ஏற்றிச் சென்ற சுமார் அறுநூறுக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் இந்தியா சுங்க அதிகாரிகள் வசம் உள்ள நிலையில் அதனை மீள வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என குறித்த மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
 
அதைத் தொடர்ந்து இலங்கைத்தீவில் ஏற்பட்ட பெரும் பதற்ற நிலை மற்றும் வடகிழக்கு மாகாணத்தில் தமிழ் போராளிகளுக்கும் இலங்கை படையினருக்கும் அடிக்கடி ஏற்பட்ட மோதல் சம்பவங்கள் மற்றும் வடகிழக்கில் தமிழ் மக்கள் படையினரால் இன அழிப்புச் செய்யப்பட்டமை ஆகியவற்றினால் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் அச்சம் காரணமாக அகதிகளாக கடல் வழியாக படகுகள் மூலம் இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் சென்றடைந்தனர்.

இவ்விதம் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்ற தமிழர்கள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, பாம்பன் மண்டபம் தங்கச்சிமடம் ,வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் கரை சேர்ந்தனர். இந்த நிலையில் இந்திய அதிகாரிகள் தமது நாட்டிற்கு வருகை தந்த இலங்கை தமிழ் அகதிகளை அச்சமயம் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் இயங்கிவந்த இலங்கை அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

இத்தகைய நிலையில் அகதிகள் தமிழ்நாட்டிற்குள் வருகை தருவதற்குப் பயன்படுத்திய இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான அனைத்து படகுகளையும் தமிழ்நாட்டின் தாசில்தார் என அழைக்கப்படும் அதிகாரிகள் மூலம் இந்திய சுங்க அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.

இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்ற ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் கடந்த காலங்களில் மீண்டும் தாயகம் திரும்பி இலங்கையில் தமது பூர்வீக இடங்களில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களை இந்தியாவிற்கு ஏற்றிச்சென்ற சுமார் 600 இலங்கை மீன்பிடிப் படகுகள் இந்தியா சுங்க அதிகாரிகளின் பாதுகாப்பில் தொடர்ந்தும் உள்ள நிலையிலேயே குறித்த படகுகளைத் தம்மிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசு இந்தியா அரசின் ஊடாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என மேற்படி இலங்கைப் படகுகளின் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீன்பிடி இழுவை படகுகள் இலங்கை அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மைக் காலங்களில் இந்தியா இலங்கை நாடுகளுக்கு இடையிலான பேச்சுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த படகுகள் இந்தியா மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தமது மீன்பிடிப் படகுகளையும் தமக்கு மீள வழங்க இலங்கை கடற்றொழில் அமைச்சரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இலங்கை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள இலங்கை மீன்பிடிப் படகுகளில் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பேசாலை தாழ்வுபாடு வங்காலை மற்றும் சிலாவத்துறை பகுதி மீனவர்களின் படகுகளே அதிகம் உள்ளது. அத்துடன் அதற்கடுத்த நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள கரையோரக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் படகுகள் உள்ளதென மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தகவல் தெரிவித்தார்.

குறித்த மீன்பிடிப் படகுகளை இந்திய சுங்க அதிகாரிகளிடம் இருந்து மீட்டு இலங்கைக்கு எடுத்து வருவதற்கு இலங்கை மீனவர் ஒத்துழைப்பு பேரவை பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும், இது தொடர்பாக இந்திய மத்திய அரசாங்க அதிகாரிகள் மற்றும் இந்தியச் சுங்கத்துறை அதிகாரிகளுடன் புதுடில்லியில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்தியாவில் உள்ள மீன்பிடிப்படகுகளை, இலங்கைக்கு எடுத்து வருவதற்கு மீனவர் ஒத்துழைப்பு பேரவை மேற் கொண்ட முயற்சிகள் துர் அதிர்ஷ்ட வசமாக பலனளிக்கவில்லை என மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தகவல் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற நிலையில் பேசாலை மீனவர்களுக்குச் சொந்தமான உள்ளிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட 21 மீன்பிடி இழுவைப் படகுகளும் சுமார் 60 கண்ணாடியிழைப் படகுகளும் இந்திய சுங்க அதிகாரிகள் வசமுள்ளதாக இலங்கையின் பேசாலையைச் சேர்ந்த மன்னார் பிரதேச சபையின் உறுப்பினரான ஜூட் கொன்சால் குலாஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

மேலும் இலங்கையிலிருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற அனைத்துப் படகுகளும் இந்தியாவின் மாவட்ட கலெக்டர்களின் உத்தரவின் படி தாசில்தார்கள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளினால் பொறுப்பெடுக்கப்பட்டு மண்டபம் பகுதியில் வைக்கப்பட்டதாகவும் படகுகளை பொறுப்பெடுத்த இந்திய அதிகாரிகளினால் வழங்கப்பட்ட ஆவணங்கள் இலங்கையில் உள்ள மேற்படி படகுகளின் உரிமையாளர்களிடம் தற்போது உள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் ஜூட் கொன்சால் குலாஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

கடந்த யுத்த காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற படகுகள் இந்திய சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டுப் பகுதியில் திருகோணமலை பகுதி தமிழ் அரசியல்வாதிகளின் முயற்சியினால் திருகோணமலை மீனவர்களுக்கு மீள வழங்கப்பட்டதாக மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஜூட் கொன்சால் குலாஸ் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் மீனவர்களின் படகுகளை மீள தாயகத்திற்கு எடுத்து வருவதற்கு இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில் அம் முயற்சி வெற்றி பெறும் என மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஜூட் கொன்சால் குலாஸ் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இந்தியாவில் உள்ள இலங்கை படகுகள் பல வருடங்களாக பராமரிப்பின்றி உள்ளதால் அவை யாவும் தற்போது பழுதடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.