இலங்கைத் தீவின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள

அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் ஏன் விடுதலை செய்ய முடியாது? அனந்தி

நாமலின் வேண்கோளுக்கு அவ்வளவு மரியாதையென்றால், ஜனாதிபதியும் பிரதமரும் ஏன் உத்தரவிட முடியாது?
பதிப்பு: 2021 ஜூலை 02 21:36
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 03 02:26
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கை அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட உரைக்கு அமைவாகத் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கைதிகளை விடுதலை செய்யமுடியுமாயின், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளில் உள்ள ராஜபக்ச சகோதரர்களினால் பல வருடங்களாக இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஏன் முழுமையாக விடுதலை செய்ய முடியாதென முன்னாள் வட மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இலங்கைச் சிறையிலிருந்து 16 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 24 ஆம் திகதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக முன்னாள் வட மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலே மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளார்.

அனந்தி சசிதரன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்ததாவது;

இலங்கை பௌத்த பேரினவாத அரசு தமிழ் இனத்தின் விடுதலைக்கு உதவியவர்கள் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் அதற்காக போராடியவர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்களைப் பயங்கரவாத தடைச்சட்டம் எனும் காட்டுச் சட்டத்தை உருவாக்கி பல வருடங்களாகச் சிறையில் வைத்துள்ளது.

இந்த நிலையில் பெரும் குற்றங்களை செய்து கிரிமினல் சட்டங்களின் கீழ் கைதாகி நீதிமன்றங்களில் மரணதண்டனை பெற்றவர்களை பொது மன்னிப்பின் கீழ் இலங்கை அரசு விடுதலை செய்து வருகிறது.

மேலும் நல்லாட்சியின் நாயகன் நானே என உலகம் முழுதும் பெரிதாக தம்பட்டம் அடித்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் உண்மையான ஈடுபாட்டுடனும் இதய சுத்தியுடனும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் செயற்படவில்லை.

அவரும் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி கிரிமினல் குற்றவாளிகளையே விடுதலை செய்தார். அவர் தனது பதவிக் காலத்தின் இறுதிப்பகுதியில் இளம் பெண்ணின் படுகொலை தொடர்பில் மரணதண்டனை பெற்ற கிரிமினல் குற்றவாளி ஒருவரை பொது மன்னிப்பில் விடுதலை செய்தார்.

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பில் விடுதலை செய்யுமாறு இலங்கையில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும் ஆனந்த சுதாகரனின் மனைவி மரணமடைந்து அவர்களின் சிறுபிள்ளைகள் அநாதரவாக வீதியில் நின்றவேளையில் கூட, அவர்கள் மீது குறைந்த பட்ச கருணையோ அல்லது மனிதாபிமானமோ காட்டாத முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனா, கொழும்பு றோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கி தனது நிறைவேற்று அதிகாரம் குறித்து பெருமிதம் கொண்டார்.

மேலும் தமிழ் அரசியல் கைதிகள் சிலரை அண்மையில் இலங்கை அரசு விடுவித்தமை வரவேற்கத்தக்கது. எனினும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பாராபட்சமின்றி நடைபெறுதல் வேண்டும். தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றசாட்டில் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்களும் சிங்களவர்களும் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் குறித்தும் அரசாங்கம் அக்கறை கொள்ளவேண்டும். மேலும் தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டு அச்செய்தி மூலம் தென்னிலங்கையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி முழு நாட்டு மக்களும் அப்பரபரப்பில் ஆழ்ந்திருக்கும் வேளையில் தமக்கு மிகவும் வேண்டப்பட்ட அரசியல் முக்கியஸ்தரான மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவை பொதுமன்னிப்பின் கீழ் மிக லாகவமாக இலங்கை ஜனாதிபதி சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளார்.

இறுதிப் போர் நிறைவுற்றதின் பின் ஆட்சியில் இருந்த இன்றைய ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் தம்மிடம் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்ததாக தெரிவித்திருந்தனர். இன்று அந்த ரகசியத் தடுப்பு முகாம்கள் எங்கு சென்றன. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் இளைஞர் யுவதிகளுக்கு தற்போது என்ன நடந்ததுள்ளது. அவர்கள் எங்கு சென்றனர். உங்கள் வசம் உள்ள அவர்களை விடுதலை செய்யுங்கள்.

தமிழர்களின் பல வருட இனவிடுதலைப் போராட்ட வரலாற்றின் பாதி காலங்களைக் கூட தனது வயதாகக் கொண்டிராத நாமல் ராஜபக்ஸ காணாமல் போனவர்களின் விடயத்தை அரசியல் ஆக்கவேண்டாம் எனக் கூறுகிறார். இலங்கையில் காணாமல் செய்யப்பட்டவர்கள் தமிழர்கள் எனும் ஓரே அரசியல் காரணத்திற்காகவே காணாமலாக்கப்பட்டனர்.

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தமிழர்கள் எனும் ஒரே காரணத்திற்காகவே விடுதலை செய்யப்படாமலும் சிறைகளில் உள்ளனர். மேலும் இலங்கையில் தமிழர்கள் பெரும் இன அழிப்பிற்க்கு தமிழர்கள் எனும் அடிப்படையிலேயே முகம் கொடுத்தனர்.

இவையாவற்றிலும் அரசியலே பொதிந்துள்ளது. விடுதலை கோரிப் போராடிய சமூகமொன்றைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட நிலையில் அவர்களை விடுவிப்பதற்கு அரசியல்ரீதியான முன் நகர்வுகளே மேற்கொள்ளப்படவேண்டும்.

இத்தகைய தருணத்தில் நாமல் ராஜபக்ஸ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது. அவரின் மனப்பான்மையையும் அரசியல் அறிவையும் அவர் கருத்து நன்கு வெளிப்படுத்துகிறது.

இனவிடுதலை போராட்டத்தில் காணாமல் போனவர்களையும் கைது செய்யப்பட்டவர்களையும் மனிதாபிமானரீதியில் விடுவிக்குமாறு கடந்த 12 வருடங்களாக இலங்கை அரசாங்கத்திடம் கேட்டு களைத்துவிட்டோம்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நாங்கள் தட்டாத கதவுகள் இல்லை. ஆனால் அக்கதவுகள் என்றுமே திறக்கப்படவில்லை என வட மாகாண சபையின் முன்னாள் பெண் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் மேலும் தெரிவித்தார்.