கொழும்புத் துறைமுகக் கடலில்

மூழ்கிய கப்பலில் இருந்த இரசாயனப் பொருட்களை அகற்ற நடவடிக்கை இல்லையெனக் குற்றச்சாட்டு

பெரும் அபாயம் என்கிறார் முஹம்மட் ஆலம்
பதிப்பு: 2021 ஜூலை 05 13:39
புதுப்பிப்பு: ஜூலை 06 03:37
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்கு உள்ளாகிய கப்பலில் இருந்து கரையொதுங்கி வரும் பிளாஸ்ரிக் மூலப்பொருட்களை மட்டும் அகற்றிவரும் இலங்கை அரசாங்கம் மூழ்கிய கப்பலில் உள்ள இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீட்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எதிர்காலத்தில் இலங்கை மக்கள் பெரும் அபாயத்திற்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசச் செயலாளரும் வட மாகாண கடற்றொழில் இணையத்தின் மன்னார் மாவட்டத் தலைவருமான என். முஹம்மட் ஆலம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
 
எம். வி எக்ஸ்பிரஸ் பேர்ள் (MV- X Press Pearl) எனும் சரக்கு கப்பல் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீ விபத்திற்கு உள்ளாகி கடலில் மூழ்கியது. இந்த நிலையில் மூழ்கிய சரக்கு கப்பலில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து வெளியேறிய இரசாயனப் பொருட்கள் மற்றும் பிளாஸ்ரிக் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் இலங்கை கடற்கரைகளில் கரையொதுங்கியது.

அத்துடன் மேற்படி கப்பல் விபத்தையடுத்து நூற்றுக்கணக்கான அரிய இன ஆமை வகைகளும் டொல்பின் இன மீன்களும் இலங்கை கடற்கரைகளின் பல இடங்களிலும் இன்றுவரை இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் குறித்த கப்பல் விபத்தை தொடர்ந்து கப்பலில் இருந்து கரைக்கு அடித்து வரப்படும் பிளாஸ்ரிக் மூலப்பொருட்களை மட்டுமே இலங்கை அரசாங்கம் அகற்றியுள்ளது. எனினும் கப்பலுடன் கடலில் மூழ்கிய கொள்கலன்கள் தொடர்பில் இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எவற்றையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என முஹம்மட் ஆலம் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

குறித்த சரக்கு கப்பலில் ஏற்றி வரப்பட்டு கப்பலுடன் தற்போது கடலில் மூழ்கிய நிலையில் காணப்படும் பல கொள்கலன்களில் மனித ஆரோக்கியத்திற்கே ஊறு விளைவிக்கும் கைத்தொழிற் துறைகளுக்கு பயன்படுத்தும் பெரும் ஆபத்தான இரசாயனப் பொருட்கள் உள்ளன. மேலும் கப்பலின் எரிபொருள் தாங்கியில் பல ஆயிரக்கணக்கான கலன் எரிபொருட்கள் உள்ளது.

இவை யாவும் கடல் நீருடன் கலந்தால் கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரும் பாதிப்பிற்கு இலக்காவார்கள். இது தொடர்பில் இலங்கை அரசாங்கமும் சுற்றாடல் சார்ந்ந நிபுணர்களும் கூடிய கவனம் செலுத்தி குறித்த கொள்கலன்களைக் கடலில் இருந்து விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என முஹம்மட் ஆலம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

குறித்த கப்பல் விபத்தைத் தொடர்ந்து கடல் வாழ் உயிரினங்கள் பல இறந்து கரையொதுங்கிவரும் நிலையில் பொது மக்கள் அச்சம் காரணமாக மீன்கள் உட்கொள்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

இதனால் பிடிக்கப்படும் மீன்களைச் சந்தைப்படுத்த முடியாத நிலையில் கடற்றொழிலாளர்கள் பொருளாதாரரீதியில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் இலங்கை கடற்பரப்பில் குறித்த கப்பல் விபத்திற்குள்ளானதினால் இலங்கையில் மீன்பிடியும் அதனைச் சார்ந்த ஏனைய தொழிற் துறைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளது.

கப்பல் விபத்தினால் தொழில்ரீதியான பாதிப்பிற்கு முகம் கொடுத்துள்ள மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளைப் போக்குவதற்கு ஒரு முறையான வேலைத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் கப்பல் விபத்தையடுத்து தீங்கு ஏற்படும் எனக் கருதி கடல் உணவைப் பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் மூழ்கிய கப்பலில் உள்ள இறுதிக் கொள்கலன் முறையாக அகற்றப்படும் வரை அப்பகுதிகளில் உள்ள உப்பளங்களில் கடல் நீரைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உப்பில் கூட மேற்படி இரசாயன பொருட்கள் கலக்கும் அபாயம் உள்ளது.

எனவே இலங்கை அரசாங்கம் மக்களின் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டு மூழ்கியுள்ள கப்பலில் உள்ள அனைத்துக் கொள்கலன்களையும் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசச் செயலாளரும் வட மாகாண கடற்றொழில் இணையத்தின் மன்னார் மாவட்டத் தலைவருமான என். முஹம்மட் ஆலம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.