வடமாகாணம் மன்னாரில்

கொவிட் தடுப்பூசி ஏற்ற வந்த மக்களுக்கு ஏமாற்றம்

பல மணி நேரமாகக் காத்திருந்த மக்கள்
பதிப்பு: 2021 ஜூலை 13 21:22
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 14 00:28
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொவிட்- 19 தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்காக மன்னார் நகரில் இரண்டு பாடசாலைகளில் ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பூசி செலுத்தும் நிலையங்களில் குறித்த தடுப்பூசிகள் அனைத்தும் முடிவடைந்ததினால் அதனைப் பெறுவதற்கு குறித்த நிலையங்களுக்கு வருகை தந்த பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். மன்னார் நகர மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்திருக்காது எவ்வித திட்டமிடலும் இன்றி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது.


 
இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தும் குறித்த இரண்டு பாடசாலைகளுக்கும் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய தினங்களில் வருகை தந்த பல நூற்றுக்கணக்கான மன்னார் நகரவாசிகள் பல மணித்தியாலயங்கள் காத்திருந்த நிலையில் ஊசி மருந்துகள் முடிவடைந்ததினால் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

மன்னார் மாவட்டத்திற்கு அண்மையில் 20000 பைசர் தடுப்பூசிகள் கொழும்பில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது. குறித்த தடுப்பூசிகளை அதிக அபாயம் உள்ள கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அதிகாரிகளினால் தீர்மானிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை தலைமன்னார் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு குறித்த பைசர் தடுப்பூசிகள் முதற்கட்டமாக செலுத்தப்பட்டதுடன் மறுநாள் சனிக்கிழமை வங்காலை மற்றும் பேசாலை ஆகிய கரையோரப் பகுதியைச் சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும் குறித்த கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

இவ்வாறான நிலையில் மன்னார் பிரதேசச் செயலகப் பகுதியில் 16 கிராமசேவையாளர் பிரிவுகளில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய தினங்களில் குறித்த பைசர் தடுப்பூசிகள் மன்னார் நகரில் உள்ள இரண்டு பாடசாலைகளில் செலுத்தப்படவுள்ளதாக மன்னார் சுகாதார அதிகாரிகள் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மற்றும் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியில் இயங்கிய தற்காலிக தடுப்பு ஊசி செலுத்தும் நிலையங்களுக்கு மேற்படி 16 கிராமசேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய தினங்களில் காலை வேளையே வருகை தந்தனர்.

இந்த நிலையில் குறித்த இரண்டு பாடசாலைகளிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் கொவிட் தடுப்பூசிகளை பெறுவதற்கு மேற்படி இரண்டு நாட்களிலும் வருகை தந்த பொதுமக்களில் குறிபிட்ட ஒரு தொகையினரை மட்டும் பாடசாலை வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதித்தனர். இவ்விதம் அனுமதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மட்டும் தடுப்பூசிகள் செலுத்தபட்டது.

எனினும் மாலை நீண்ட நேரம் ஆகியும் குறித்த இரண்டு பாடசாலைகளுக்கும் முன் நீண்ட கியு வரிசையில் காத்திருந்த மிகுதியான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தும் பாடசாலை வளாகத்திற்குள் செல்வதற்கு இறுதிவரை அனுமதிக்கப்படாததினால் அவர்கள் ஏமாற்றத்துடனும் பெரும் மன உளைச்சலுடனும் வீடு திரும்பியதாக பாதிக்கபட்ட பொதுமக்கள் கூர்மைச் செய்தி தளத்திற்குத் தெரிவித்தனர்.

இவ்விதம் இரண்டு நாட்களும் கொவிட் தடுப்பூசிகளை பெறமுடியாது ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் இது குறித்து சுகாதார அதிகாரிகளிடம் விசாரித்தவேளை மன்னாரில் தடுப்பூசி செலுத்தும் இரண்டு நிலையங்களுக்கும் அதிக எண்ணிக்கையானோர் வருகை தந்ததினால் குறித்த தடுப்பு ஊசிகள் முடிவடைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அதிகாரிகள் போதியளவு ஊசி மருந்துகளைக் கையிருப்பில் வைத்திருக்காது அதிக எண்ணிக்கையான பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தமையினால் அதனை நம்பி வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.