வடமாகாண கடலில்

இந்திய மருத்துவக் கழிவுகள். கரையோரப் பிரதேசங்கள் மாசடைவதாக முறைப்பாடு

சிரமத்தை எதிர்நோக்குவதாக மீனவர்கள் குற்றச்சாட்டு. வலைகளுக்கும் சேதம் என்று கூறுகின்றனர்
பதிப்பு: 2021 ஜூலை 14 20:44
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 15 00:20
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இந்திய நாட்டு மருத்துவக் கழிவுகள் மற்றும் அங்கு பயன்படுத்தப்பட்ட ஏனைய பாவனைப் பொருட்களின் வெற்றுப் பிளாஸ்ரிக் கொள்கலன்கள் உட்பட பல கழிவுப் பொருட்கள் இலங்கையின் வட பகுதிக் கரையோரங்களில் தொடர்சியாகக் கரையொதுங்கி வரும் நிலையில் குறித்த கழிவுப்பொருட்கள் தமது மீன்பிடி வலைகளில் சிக்குவதினால் தாம் தினமும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக வட பகுதி தமிழ் மீனவர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.
 
இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் வாழும் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அண்மைக்காலங்களாக இந்திய நாட்டின் மருத்துவக்கழிவுகள் மற்றும் அங்கு தினமும் பயன்படுத்தும் பாவனைப் பொருட்களின் வெற்றுக் கொள்கலன்கள் கடல் அலைகளினால் அடித்துவரப்பட்டுக் கரையொதுங்கி வருவதினால் குறித்த கரையோரப்பகுதிகள் மாசடைந்து வருவதாக குறிப்பிடும் வட பகுதி தமிழ் மீனவர்கள் கடலில் மிதந்துவரும் மருத்துவக் கழிவுகள் மற்றும் ஏனைய வெற்றுக் கொள்கலன்கள் கடலில் விரிக்கப்படும் தமது மீன்பிடி வலைகளில் சிக்குவதினால் தமது வலைகள் சேதமடைவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நயினாதீவு கடற்கரைகளில் கடந்த மாதம் முழுதும் இந்திய நாட்டு மருத்துவக் கழிவுகள் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் கரையொதுங்கின. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் குறிகட்டுவான் கடற்கரைப்பகுதியிலும் இந்திய நாட்டு மருத்துவக் கழிவுகள் பெரும் அளவு கரையொதுங்கிய நிலையில் உள்ளூர் மீனவர்கள் இது குறித்து சுகாதார அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்டத்தின் வங்காலை கடற்பரப்பில் இந்திய மருத்துவக் கழிவுகள் இந்திய நாட்டில் பயன்படுத்தப்பட்ட ஏனைய பாவனைப் பொருட்களின் வெற்றுப்பக்கட்டுகள் மற்றும் பிளாஸ்ரிக் வெற்று கொள்கலன்கள் ஆகியன கரையொதுங்கிய நிலையில் வங்காலை மீனவர்கள் கடற்றொழில் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியிருந்தனர்.

வடமாகாண கரையோரப்பகுதிகளில் முன்னொருபோதும் இல்லாத வகையில் இவ்விதமான நோய் தொற்று நிறைந்த கழிவுப்பொருட்கள் கரையொதுங்கிவருவதாக தெரிவிக்கும் மீனவர்கள் தமிழ்நாட்டின் கரையோர மாவட்டம் ஒன்றில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் மருத்துவ கழிவுகளே படகுகள் மூலம் எடுத்து வரப்பட்டு கடலின் நடுவில் கொட்டப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகக் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மீனவர்கள் குறிப்பிட்டனர்.

இவ்விதம் வட மாகாண கரையோரங்களில் இந்திய மருத்துவக் கழிவுகள் கரையொதுங்குவது குறித்து உரிய நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் என மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.