தமிழர் தாயகத்தில் வீடமைப்பு-

இந்திய அரசிடம் கையளிக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங்கைப் பிரதமர் ரணிலிடம் கோரிக்கை

மத்தள விமானநிலைய பங்குகளை கொள்வனவு செய்யும் திட்டம் இல்லை- இந்தியா
பதிப்பு: 2018 ஜூலை 27 10:19
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 27 12:20
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான வடக்கு பிரதேசத்திற்குரிய வீடமைப்புத் திட்டத்தை இந்திய மத்திய அரசிடமே கையளிக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சீன அரசு 1.3 மில்லியன் ரூபாய்களில் வீடொன்றை அமைக்க முடியுமென கூறியிருந்தது. ஆனால் இந்திய அரசினால் கட்டப்படும் வீடொன்றுக்கு 2.2 மில்லியன் ரூபாய்கள் செலவாகின்றன. ஆகவே சீன அரசின் பெறுமதியில் வீடுகளை அமைப்பதற்கு இந்திய அரசு தங்களிடம் உறுதியளித்துள்ளதாகவும் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிடம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் சீன அரசிடம் கையளிப்பதே சிறந்தது என மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் பொறுப்பை ஒப்படைக்குமாறு கோரியுள்ளது. ஆனாலும் வடக்கு வீடமைப்புத் தொடர்பாக இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் ராஜித சேனரட்ன கூறியுள்ளார்.

இலங்கை மீதான சீன. இந்திய அதிகாரப் போட்டிக்குள் சம்பந்தன் ஏன் மூக்கை நுழைத்து இந்திய அரசின் லாபங்களுக்காகப் பாடுபடுகின்றார் என அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தியாவிடமா சீனாவிடமா கையளிப்பது என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முடிவெடுப்பார்கள் என்றும் அமைச்சர் ராஜித சேனரட்ன கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் அழுத்தங்களினால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் வீடமைப்புத் திட்டத்தைக் கையளிக்குமாறு கோரியதாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறியிருந்தன.

வடக்கு வீ்டமைப்புத் திட்டத்தை சீனாவிடம் கையளிக்கவுள்ளமை தொடர்பாக தமக்கு எதுவுமே தெரியாது என்றும் அமைச்சர் சுவாமிநாதன் தங்களுடன் அது குறித்து கலந்துரையாடவில்லை எனவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஏற்கனவே கூறியிருந்தார்.

அது தொடர்பாக அமைச்சர் சுவாமிநாதனுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். சுவாமிநாதன், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்.

இதேவேளை தமிழர் தாயகத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள 25 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்தமாறும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை விவகாரம் குறித்து சீன, இந்திய அரசுகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளமையினால் இரு நாடுகளையும் சமாந்தரமான முறையில் கையாண்டு வருவதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போது கூறியிருந்தார்.

அதேவேளை, அம்பாந்தோட்டையில் உள்ள மத்தள விமான நிலையத்தைக் கட்டுப்படுத்தும் பங்குகளை வாங்குவது தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் அதிகார சபையிடம் திட்டங்கள் எதுவுமே இல்லையென இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் சீன அரசினால் கட்டப்பட்டு வருமானம் இல்லையெனக் கூறி கைவிடப்பட்ட மத்தள விமான நிலையத்தை, இந்திய விமான நிலையங்கள் அதிகார சபை பொறுப்பேற்கவுள்ளதாக இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தமை குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை பாஜக உறுப்பினர் பூனம் மகாஜன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த இந்திய சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜயந்த் சின்ஹா, தற்போது அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லையென தெரிவித்துள்ளார்.

வடக்கில் வீடமைப்புத் திட்டம் குறித்து சீன, இந்திய அரசுகளிடையே கடும் போட்டியென இலங்கை அமைச்சர் ராஜித சேனரட்ன கடந்த புதன்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பகிரங்கமாகக் கூறிய நிலையில், இலங்கையின் மத்தள விமான நிலையத்தின் பங்குகளை கொள்வனவு செய்யும் திட்டம் எதுவும் இல்லையென இந்திய இணை அமைச்சர் ஜயந்த் சின்ஹா அறிவித்துள்ளார்.

அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியிலும் ஈழத் தமிழர்களின் 70 ஆண்டுகால சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அழிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு, நேரடியாகவும் மறைமுகமாகவும் 2009 ஆம் ஆண்டு இராணுவ உதவிகளை வழங்கிய சீன இந்திய அரசுகள், தற்போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைப்பதாகக் கூறிக் கொண்டு, இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுகின்றன.

இந்த நிலையில்> தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக சம்பந்தன் ஏன் மூக்கை நுழைத்து இந்திய அரசின் லாபங்களுக்காகப் பாடுபடுகின்றார் என அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.