வடமாகாணம்

மன்னாரில் கடற்றொழிலாளர்கள் கொவிட் தடுப்பூசி ஏற்ற வேண்டுமென பணிப்பு

மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வினோதன் தர்மராஜன் அறிவிப்பு
பதிப்பு: 2021 ஜூலை 17 22:00
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 19 01:57
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முப்பது வயதிற்கு மேற்பட்ட மீனவர்கள் அனைவரும் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே எதிர்காலத்தில் கடற்றொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வினோதன் தர்மராஜன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மன்னார் மாவட்ட மீனவர்கள் இந்திய நாட்டு மீனவர்களுடன் இலகுவாக தொடர்புபடும் சாத்தியங்கள் அதிகம் உள்ளது. இந்திய நாட்டில் பரவிவரும் திரிபடைந்த கொரோனா வைரஸ் அந்த நாட்டு மீனவர்கள் மூலம் இலங்கை மீனவர்களுக்கும் தொற்றும் அபாய நிலையும் காணப்படுகிறது.


 
இந்த நிலை காரணமாக 30 வயதிற்கு மேற்பட்ட மன்னார் மாவட்ட மீனவர்கள் அனைவரும் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியம். மேலும் குறித்த அபாய நிலையைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட மீனவர்கள் மட்டுமே எதிர்காலத்தில் கடற்றொழில் செய்ய அனுமதிக்கப்படுவர் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வினோதன் தர்மராஐன் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குச் செலுத்துவதற்காக கடந்த வாரம் 20 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் கொழும்பில் இருந்து மன்னாருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக பைசர் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் தலைமன்னார் பகுதியில் கடந்த ஒன்பதாம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

அத்துடன் மன்னார் மாவட்டத்திற்கு மேலும் ஒரு தொகுதி பைசர் தடுப்பூசிகள் இரண்டாவது தடவையாகக் கிடைக்கப்பெற்ற நிலையில் கடந்ந 9ஆம் திகதியில் இருந்து 15ஆம் திகதி வரை 34380 பைசர் தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முப்பது வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களுக்கு 17ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் பைசர் தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை மன்னார் மாவட்டதில் அரச திணைக்களங்கள் அரச மற்றும் தனியார் வங்கிகளில் பணிபுரியும் மன்னார் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள் அனைவரும் தமது அலுவலக அடையாள அட்டையை அல்லது தமது நிறுவனத் தலைவரின் கடிதத்தைப் பயன்படுத்தி கொவிட் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளமுடியும்.

அத்துடன் மன்னார் மாவட்டதில் உள்ள மடு மற்றும் மன்னார் ஆகிய கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் தமது அடையாள அட்டை மற்றும் உரிய ஆவணங்களைப் பயன்படுத்தி கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளமுடியும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வினோதன் தர்மராஐன் கூர்மைச் செய்தித் தளத்திற்க் மேலும் தெரிவித்தார்.