கோட்டபய ராஜபக்ச மீதான குண்டுத் தாக்குதல்-

கைது செய்யப்பட்ட சைவக் குருக்கள் 12 ஆண்டுகளின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றதால் விடுதலை

இலங்கைச் சட்டமா அதிபரால் குற்றங்கள் நிரூபிக்கப்படவேயில்லை
பதிப்பு: 2018 ஜூலை 27 22:40
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 27 23:52
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ கொலை முயற்சி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சைவக் குருக்கள் ஒருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறீஸ்கந்தராஜ சர்மா என்ற குக்களே விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கொள்ளுப்பிட்டி பித்தல சந்தி வழியாக கோட்டபய ராஜபக்ச, ஜனாதிபதி செயலகம் நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தபோது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. 2006ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் கோட்டபய ராஜபக்ச உயிர் தப்பினார். ஆனால் அவரது பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மூன்று இலங்கைப் படையினர் கொல்லப்பட்டனர்.
 
இந்தத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பல வருடங்களாக நடைபெற்று வந்தது.

சந்தேகத்தின் பேரில் இலங்கை குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சைவக் குருக்களுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இலங்கைப் படையினரால் தமிழ் இளைஞர்கள் பலர் கைதாகித் தாக்கப்பட்டு பலாத்காரமான முறையில் ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்டன-- சுந்தரம் மகேந்திரன்.

ஆனால், இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை.

எனினும் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு நீதிமன்றம் இலங்கைச் சட்டமா அதிபருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தது. ஆனாலும் நீண்டகாலமாக குற்றங்கள் நீருபிக்கப்படவேயில்லை.

இதனால் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபயகோன் நேற்று வியாழக்கிழமை குருக்களை விடுதலை செய்தார்.

இலங்கைப் பாதூப்புப் பிரிவைச் சேர்ந்த முன்று படைனர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டமை மற்றும் கோட்டபய ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

அத்துடன், கோட்டபய மீதான குண்டுத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்றும் சைவக் குருக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஆனால், சிறீஸ்கந்தராஜ சர்மாவுக்கு எதிராக இலங்கை குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அவரிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை மாத்திரமே இலங்கைச் சட்டமா அதிபரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்தது.

கைதியொருவர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளியென கூற முடியாதெனவும், சிறீஸ்கந்தராஜ சர்மாவிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் பலாத்காரமாகப் பெறப்பட்டதாகவும், சுயமான முறையில் அவர் வாக்குமூலங்களை வழங்கவில்லை என்றும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

சிறீஸ்கந்தராஜ சர்மாவின் சார்பில் வாதாடிய சட்டத்தரணி கூறிய விடயங்களுக்கு இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு வெளியிடவில்லை.

இதனால், விடுதலை செய்வதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபயகோன் அறிவித்தார்.

இதேவேளை தமிழர் தாயகத்தில் போர் நடைபெற்ற காலத்தில் அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கைப் படையினராலும் இலங்கைப் பொலிஸாராலும் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பலர். இலங்கை குற்றப் புலனாய்வுப் பொலிஸாரினால் தாக்கப்பட்டு பலாத்காரமான முறையில் ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தன.

ஆகவே, இலங்கையின் தென்பகுதி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என இடதுசாரி முன்னணியின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

சுமார் 216 தமிழ் அரசியல் கைதிகள், கொழும்பு வெலிக்கடை, மகசின், அனுராதபுரம் உள்ளிட்ட இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அருட் தந்தை சக்திவேல் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.