வடமாகாணம்

தலைமன்னார் ஐந்தாவது மணல் தீடையில் கரையொதுங்கிய சடலம்

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மீட்பு
பதிப்பு: 2021 ஜூலை 18 22:53
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 19 02:35
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கடல் பரப்பில் உள்ள ஐந்தாவது மணல் தீடையில் கரையொதுங்கிய சடலத்தை நீதிமன்ற உத்தரவின்படி மீட்டதுடன் அதனை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கையளித்துள்ளதாகத் தலைமன்னார் பொலிஸார் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலை கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், தலைமன்னார் கிராமத்திற்கு அருகில் கடல் நடுவே உள்ள ஐந்தாம் மணல் தீடையில் கரையொதுங்கிய நிலையில் சடலமொன்றினை கண்டுபிடித்தனர். இந்த நிலையில் குறித்த சடலம் தொடர்பில் இலங்கை கடற்படையினர் தமக்கு தகவல் வழங்கியதாக தலைமன்னார் பொலிஸார் கூர்மை செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தனர்.
 
இதையடுத்து இலங்கை கடற்படையின் உதவியுடன் ஐந்தாம் மணல் தீடைக்கு படகு மூலம் சென்ற தலைமன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பில் மன்னார் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்பித்த தலைமன்னார் பொலிஸார் நீதிமன்ற கட்டளையின் படி குறித்த சடலத்தை கடந்த வெள்ளிக் கிழமை பிற்பகல் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

கரையொதுங்கிய சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதினால் சடலம் ஆணா பெண்ணா என்பதினை அறிய முடியாதுள்ளது என்று குறிப்பிட்ட தலைமன்னார் பொலிஸார் பிரேதப் பரிசோதனையின் பின்னரே குறித்த சடலம் தொடர்பான முழுமையான விபரங்களை அறிய முடியும் என மேலும் தெரிவித்தனர். மேலும் தலைமன்னார் ஐந்தாம் மணல் தீடையில் இருந்து மீட்கப்பட்ட குறித்த சடலம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கடந்த மே மாதம் பிற்பகுதியில் மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் எவ்விதத் தகவலும் இதுவரை தமக்கு கிடைக்கப் பெறவில்லை என மன்னார் பொலிஸார் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.