தமிழர் தாயகமான

முல்லைத்தீவில் குடும்பங்களின் விபரங்களை இலங்கைப் படையினர் கோருவதாக முறைப்பாடு- படிவங்களும் கையளிப்பு

அச்சத்தில் பொதுமக்கள்- இராணுவ ஆட்சியா சிவில் நிர்வாகமா என்றும் கேள்வி
பதிப்பு: 2018 ஜூலை 28 14:37
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 28 15:16
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் பொதுமக்களிடமும் அங்குள்ள வர்த்தக நிலையங்களிலும் இலங்கை இராணுவத்தினர் தகவல்களை திரட்டி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இலங்கைப் படையின் 572 ஆவது படைப்பிரிவே இந்த தகவல்களைச் சேகரிப்பதாக மக்கள் கூறுகின்றனர். உடையார் கட்டு, சுதந்திரபுரம், கைவேலி, ரெட்பானா, மாணிக்கபுரம் ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர், வீட்டில் வாழும் மக்களின் விபரங்கரளைக் கேட்டுள்ளனர். விண்ணப்பப் படிவம் ஒன்றைக் கையளித்து, அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்குமாறும் இலங்கை இராணுவம் மக்களுக்குக் கட்டளையிட்டுள்ளது.
 
தீடிரென இவ்வாறு விபரங்கள் கேட்கப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் சிவில் நிர்வாகம் இருக்கும் போது இராணுவத்தினர் எதற்காக பெயர் விபரங்களை கோருவதாகவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வடமாகாண சபை நிர்வாகம் உள்ளிட்ட, மாவட்ட அரச அதிபர். பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள் ஆகியோருக்கு குடும்பங்களின் விபரங்களைக் கோருகின்றமை குறித்து, இலங்கை இராணுவம் எதுவுமே அறிவிக்கவில்லை-- மக்கள்.

வீடுகளுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் வருகை தரும் இலங்கைப் படையினர் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து தருமாறு மக்களிடம் கோரியுள்ளமை குறித்து வடமாகாண சபைக்கு அறிவிக்கப்படவில்லை என உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுகின்றமை குறித்து ஏற்கனவே முறைப்பாடுகள் எழுந்துள்ள நிலையில், தற்போது விண்ணப்பப் படிவங்கள் மூலமாக விபரங்கள் பெறப்பட்டு வருகின்றமை குறித்து மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மக்களின் விபரங்களை கேட்பது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், கிராமசேகவர்கள் ஆகியோருக்கும் இலங்கை இராணுவம் எதுவுமே அறிவிக்கவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.

கிளிநொச்சியில் கடந்த மே மாதம் 25 ஆம் திகதியில் இருந்து மே மாதம் 30 ஆத் திகதி வரை பிறந்த பிள்ளைகளின் விபரங்களை கையளிக்குமாறு கிளிநொச்சி மருத்துவமனை நிர்வாகத்திடம் இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோரியிருந்தது.

இந்த நிலையில், முல்லைத்தீவில் வாழும் மக்களின் விபரங்களை இலங்கை இராணுவம் கோரியுள்ளமை குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ஸ் நிர்மலநாதன் கூறியுள்ளார்.

மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூட மக்களின் விபரங்களைப் பெறுவது குறித்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பேசவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, தமிழர் தாயகத்தில் இலங்கை இராணுவத்தின் ஆட்சியா, சிவில் நிர்வாகமா நடைபெறுகின்றது என்பதை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பகிரங்கமாகக் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தினர் கேட்கின்ற விபரங்கள் எதனையும் வடமாகாண அரச அதிகாரிகளும் பொதுமக்களும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையென முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இலங்கை இராணுவம் முல்லைத்தீவில் பொதுமக்களின் விபரங்களைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.