மலையகப் பிரதேசமான டயமகவைச் சேர்ந்த

சிறுமி உயிரிழந்த விவகாரம்- றிஷாத் பதியூதீனின் மனைவி உட்பட நால்வரை தொடர்ந்து விசாரணை செய்ய உத்தரவு

பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாக மேலும் விசாரணைகள் தொடருகின்றன
பதிப்பு: 2021 ஜூலை 25 22:25
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 27 13:57
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
மலையகப் பகுதி சிறுமி இஷாலினி தீ காயங்களினால் உயிரிழந்தமை மற்றும் அவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் பொலிஸாரினால் கடந்த வெள்ளி அதிகாலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியூதீனின் மனைவி உட்பட நால்வரை நாளை திங்கள் 26 ஆம் திகதி வரையான 48 மணித்தியாலயங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கடந்த சனிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியூதீனின் கொழும்பு பௌத்தலோக மாவத்த இல்லத்தில் வீட்டுப்பணிக்காகச் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட டயகம பகுதி சிறுமியான ஜுட் குமார் இஷாலினி தீயினால் ஏற்பட்ட எரிகாயத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 3ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15ஆம் திகதி மரணமடைந்தார்.
 
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொரளை பொலிஸார், றிஷாத் பதியூதீனின் மனைவி, மைத்துனர், மாமா மற்றும் இறந்த சிறுமியை றிஷாத் பதியூதீனின் இல்லத்தில் வேலைக்கு அமர்த்திய தரகர் ஆகிய நால்வரை கடந்த 23ஆம் திகதி வெள்ளியன்று அதிகாலை கைது செய்தனர்.

இந்த நிலையில் பொலிஸாரினால் கைதாகிய நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நீதிமன்ற உத்தரவினை பெறும் பொருட்டு கடந்த சனிக்கிழமை காலை கொழும்பு புதுக்கடை 2ஆம் இலக்க நீதிமன்றில் குறித்த சந்தேக நபர்கள் நால்வரையும் பொரளை பொலிஸார் முன்னிலைப்படுத்தினர்.

இவ்வேளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் நால்வரையும் சனிக்கிழமை தொடக்கம் திங்கள்கிழமை 16ஆம் திகதி வரையான 48 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான நீதிமன்றக் கட்டளையைப் பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.

மேற்படி நாலு சந்தேக நபர்களுக்கான 48 மணித்தியால தடுப்புக்காவல் காலம் நாளை திங்கள் நிறைவுறும் நிலையில் சந்தேக நபர்கள் நால்வரையும் மீண்டும் நீதிமன்றில் திங்கள் அன்று ஆஜர்படுத்துமாறும் கொழும்பு புதுக்கடை 2ஆம் இலக்க நீதவான் நீதிமன்றம் பொரளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி றிஷாத் பதியூதீனின் மனைவி கொழும்பு கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு அவர் மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அத்துடன் றிஸாத் பதியூதீனின் மனைவியின் தந்தை அவரின் சகோதரர் மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தரகர் ஆகிய மூவரும் பொரளை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொரளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

றிஷாத் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிபுரிந்த சிறுமி இஷாலினி தொடர்பாக கொழும்பு வடக்கு சிறுவர் மகளீர் பொலிஸ் பிரிவு, கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொரளை பொலிஸார் ஆகியோர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில் இதுதொடர்பில் இதுவரை 30ற்கும் மேற்பட்டவர்களின் வாக்குமூலங்களையும் பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

பொலிஸாரின் புலன்விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜீத் ரோகண தெரிவித்துள்ளார்.

றிஷாத் பதியூதீன் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதிகளில் அவரது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான கொழும்பில் உள்ள வீடுகளில் மலையகத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த 11 பெண்கள் வீட்டுப்பணி பெண்களாக பணிபுரிந்துள்ள தகவல்கள் பொலிஸ் புலன் விசாரணையில் வெளிவந்துள்ளது.

இதற்கமைய குறித்த 11 பணிப்பெண்களில் அநேகமானோர் நுவரெலியா மாவட்டத்தின் டயகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் அனைவரையும் தற்போது றிஷாத்தின் மனைவியுடன் கைதாகி பொலிஸ் தடுப்புக்காவலில் உள்ள தரகரான டயகமையைச் சேர்ந்த பொன்னையா பண்டாரமே றிஷாதின் வீடுகளில் பணியில் சேர்த்துள்ளார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குறித்த 11 பணிப்பெண்களில் பலர் றிஷாத் பதியூதீனின் இல்லத்தில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பணிப்பெண்களை றிஷாத் பதியூதீனின் வீட்டில் சேவைக்கு அமர்த்தியதற்காகத் தரகர் பொன்னையா பண்டாரத்திற்கு பெரும் தொகையான பணத்தினை றிஷாத் பதியூதீனின் குடும்பத்தினர் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

றிஷாத் பதியூதீனின் வீடுகளில் பணியாற்றிய குறித்த 11 பணிப்பெண்களில் ஒருவர், தான் றிஷாத் பதியூதீனின் மைத்துனரால் (மனைவியின் சகோதரர்- தற்போது கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்) இரண்டு தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகப் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அத்துடன் கடந்த சில வருடங்களுக்கு முன் கொழும்பு பம்பலபிட்டிப் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த மலையகப் பெண்னொருவர் றிஷாத் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த 11 பெண்களில் ஒருவர் எனும் பரபரப்புத் தகவல்களும் வெளிவந்துள்ளது. இச்சூழ்நிலையில் தற்கொலை செய்த பெண் தொடர்பாகவும் பொலிஸார் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை றிஷாத் பதியூதீன் பாராளுமன்ற உறுப்பினராக பிரதிநிதித்துவம் செய்யும் வன்னி மாவட்டத்தின் மன்னார் வவுனியா முல்லைத்தீவு ஆகிய தேர்தல் தொகுதி மற்றும் மலையகம் உட்பட நாடாளாவிய ரீதியில், றிஷாத் பதியூதீன் வீட்டில் பணிபுரிந்து தீ காயங்களினால் மரணமடைந்த மலையகச் சிறுமியின் விவகாரம் தொடர்பில் போராட்டங்களும் எதிர்ப்பு ஆர்பாட்டங்களும் தொடர்சியாக நடைபெற்று வருகின்றது.

மலையக அரசியல் பிரமுகர்களும் றிஷாத் பதியூதீனின் நீண்ட கால அரசியல் நண்பர்களுமான முன்னாள் அமைச்சர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலு ராதகிருஸ்ணன் உட்பட பல அரசியல்வாதிகள் பல மனித உரிமை அமைப்புகள் சிவில் அமைப்புகள் ஆகியன றிஷாத் பதியூதீன் வீட்டில் பணியாற்றி உயிரிழந்த சிறுமி விவகாரம் தொடர்பாக பலத்த கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன் பல எதிர்ப்பு போராட்டங்களையும் மேற்கொண்டுள்ளனர்.