எதிர்ப்புக்கு மத்தியில் சமன் பந்துலசேன வடமாகாண தலைமைச் செயலாளராகப் பதவியேற்பு

பௌத்த மத அனுஷ்டானங்களுடன் சத்திப்பிரமாணம்- பௌத்த குருமாரும் பங்கேற்பு
பதிப்பு: 2021 ஜூலை 27 19:58
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 27 20:10
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கையில் தமிழர்களின் தாயகப்பகுதியான வட மாகாணத்தின் அதி உயர் அரச பதவியான மாகாண தலைமைச் செயலாளர் பதவிக்கு இலங்கை நிர்வாகச் சேவையைச் சேர்ந்த சிங்கள அதிகாரி எஸ். எம். சமன் பந்துலசேன நியமிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கள் முற்பகல் குறித்த பதவியை அவர் பொறுப்பேற்றுள்ளார். வட மாகாண சபையின் தலைமை செயலாளராக குறித்த சிங்கள அதிகாரி நியமனம் செய்யப்பட்டதிற்கு பல தமிழ் அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையில் மேற்படி சிங்கள அதிகாரி தலைமை செயலாளர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.
 
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாண தலைமைச் செயலகத்திற்கு பௌத்த பிக்குகள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உயர் அதிகாரிகள் புடைசூழ வருகை தந்த எஸ். எம் சமன் பந்துலசேன பூரண பௌத்த மத அனுஷ்டானங்களுடன் வட மாகாணத்தின் தலைமைச் செயலாளர் பதவியை நேற்று திங்கள் அன்று முற்பகல் பொறுப்பேற்றுக்கொண்டார். பெருமளவு பௌத்த குருமாரும் பங்குபற்றியிருந்தனர்.

இதற்கு முன்னதாக வட மாகாண சபையின் தலைமைச் செயலாளராக சிரேஸ்ட நிருவாகச் சேவை அதிகாரி அந்தோனிப்பிள்ளை பத்திதநாதன் பணியாற்றினார். மொனராகலை மாவட்டத்தின் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அ. பத்திநாதன் கடந்த 2018 ஆம் மைத்திரி - ரணில் நல்லாட்சிக்காலத்தில் வட மாகாணத் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்

இந்த நிலையில் தனது சேவையில் இருந்து கடந்த 5ஆம் திகதி அ. பத்திநாதன் இளைப்பாறினார். இதையடுத்து வட மாகாண சபையின் தலைமைச் செயலாளராக எஸ். எம் சமன் பந்துலசேனவை இலங்கை ஐனாதிபதி நியமனம் செய்துள்ளார்.

எஸ்.எம் சமன் பந்துலசேன வட மாகாண சபையின் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்படுவதற்கு முன்னர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதியில் இருந்து பணியாற்றிய நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபகஸவினால் வட மாகாண தலைமைச் செயலாளராக இவ்வருடம் ஜூலை 20ஆம் திகதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வட மாகாண சபையின் தலைமைச் செயலாளராக பணியாற்றிய அ. பத்திநாதன் ஓய்வுபெற்ற நிலையில் குறித்த தலைமைச் செயலாளர் பதவியை பெருவதற்காக இலங்கை நிர்வாகச் சேவையைச் சேர்ந்த தமிழ் அதிகாரிகள் பலர் கடும் பிராயத்தனங்களை மேற்கொண்டனர்.

அத்துடன் அவர்கள் அப்பதவியை பெறுவதற்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வட மாகாணத்தைப் பூர்விகமாகக்கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் ஊடாகவும் கடும் முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

மேலும் வட மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் வட மாகாண தலைமை செயலாளர் பதவி தொடர்பில் தமிழ் அரச அதிகாரியொருவரை நியமிப்பதற்கு அரச உயர்பீடத்திற்கு தனது பரிந்துரையை வழங்கியிருந்தார்.

இத்தகைய சூழ்நிலையில் வட மாகாண தலைமை செயலாளர் நியமனம் தொடர்பில் அரச உயர்பீடம் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் தொடர்சியான நச்சரிப்பு மற்றும் வட மாகாண ஆளுநரின் வேண்டுகோள் தொடர்பில் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி தலைமைச் செயலாளராக யாரை நியமிப்பது எனும் பெரும் குழப்ப நிலையை அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறன உந்துதல் காரணமாகவே வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராக பணியாற்றிய சிங்கள அதிகாரியொருவரை வட மாகாண தலைமைச் செயலாளராக நியமித்துள்ளதாகத தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாண சபையின் முன்னாள் தலைமைச் செயலாளராக பணிபுரிந்த திருமதி விஐயலட்சுமி ரமேஸ் இலங்கை உணவு திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி ஜே. கிருஷ்ணமூர்த்தி வட மாகாண கல்வி அமைச்சின் தற்போதைய செயலாளர் ஆர். இளங்கோவன் மற்றும் வட மாகாண சபை பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் க. தெய்வேந்திரம் உட்பட தற்போதைய கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரான திருமதி ரூபாவதி கேதிஸ்வரன் ஆகியவர்களில் ஒருவர் வட மாகாண சபையின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்த நிலையில் சிங்கள அரச அதிகாரியொருவர் தமிழர்கள் அதிகமாக வாழும் வட மாகாணத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.