வடமாகாணம் மன்னார்

மடு தேவாலய பெருநாள் நடைபெறுமென அறிவிப்பு

மன்னார் அரச அதிபர் தலைமையில் கூட்டம்
பதிப்பு: 2021 ஜூலை 30 20:56
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 31 14:15
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் மடு மாதா தேவாலய வருடாந்த ஆவணி பெருநாள் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறும் நிலையில் குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பக்தர்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கலந்துகொள்வதற்கு அனுமதிப்பதுடன் வெளி மாவட்ட பக்தர்களைக் கலந்து கொள்வதற்கு அனுமதிப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
மன்னார் மாவட்டச் செயலகத்தில் கடந்த 27ஆம் திகதி மாலை மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதா வருடாந்த உற்சவம் தொடர்பான கூட்டம் தனது தலைமையில் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர் குறித்த கூட்டத்தில் மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்ணான்டோ மற்றும் அரச திணைக்களங்களின் தலைவர்கள் இராணுவம் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் தற்போதுள்ள கொவிட்- 19 நோய் தொற்றுச் சூழ்நிலையில் மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ள வருடாந்த பெருநாளை எவ்விதம் நடாத்துவது என்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதா பெருநாளில் கலந்துகொள்வதற்கு மன்னார் மாவட்ட பக்தர்களை மட்டுப்படுத்திய அளவில் அனுமதிப்பது எனவும் வெளி மாவட்ட பக்தர்களை உற்சவத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதிப்பதில்லை எனவும் மேற்படிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

இவ்வருடம் நடைபெற்ற மடு மாதா ஆலயத்தின் வருடாந்த ஆடிப் பெருநாள் இறுக்கமான சுகாதார விதிமுறைகளுடன் நடைபெற்றது. அத்துடன் குறித்த பெருநாளின் போது பல கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் எதிர்வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மடு மாதா பெருநாளைச் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக உரிய முறைப்படி மேற்கொள்வதற்கு மேற்படி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

ஆவணி உற்சவத்திற்கு மடு மாதா தேவாலயத்துக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான நீர், மின்சாரம் , போக்குவரத்து உட்பட அடிப்படை வசதிகளைத் தொடர்புடைய திணைக்களங்களின் உதவியுடன் மேற்கொள்வதற்கும் மேற்படி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதுடன் மடு மாதா பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் ஒரு சில தினங்களில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மேலும் ஓரு கூட்டமொன்றினை நடத்துவதற்கும் முடிவெடுக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.