போரின்போதும் அதன் பின்னரான சூழலிலும்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் இல்லை - உறவினர்கள் கவலை தெரிவிப்பு

இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்துவிட்டதாகக் கூறுகிறார் சங்கத் தலைவி
பதிப்பு: 2021 ஜூலை 30 21:10
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 31 12:55
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
போரின் போதும் அதன் பின்னரான சூழலிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீதான அனைத்து நம்பிக்கைகளையும் நாம் இழந்துவிட்டோம். இந்த நிலையில் சர்வதேச நாடுகளே எமக்கான உரிய தீர்வைப் பெற்றுத் தரும் என நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ள இத்தருணத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எம்மை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுமாறு விலை பேசுவதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி திருமதி இமானுவேல் உதயச்சந்திரா தெரிவித்தார்.
 
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை 30 ஆம் திகதி காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.

இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் யுத்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின குடும்ப உறவுகள் பல்வேறு வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி திருமதி இமானுவேல் உதயச்சந்திரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

நாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது இரத்த உறவுகளை கடந்த 12 வருடங்களாகத் தேடி வருகிறோம். நாம் இந்த முயற்சியில் சோர்வடையப் போவதில்லை. எமது இறுதி மூச்சு இருக்கும்வரை காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடும் முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்வோம். இலங்கை அரசாங்கம் எமக்கு நியாயம் பெற்றுத்தரும், எமது உறவுகள் தொடர்பில் தீர்க்கமான பதிலைத் தரும் எனும் எள்ளளவு நம்பிக்கையும் தற்போது எமக்கு இல்லை.

இலங்கை அரசாங்கத்தின் மீதான கடைசி நம்பிக்கையும் தளர்ந்துவிட்டது. எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் நாம் சர்வதேசத்தை நம்பியுள்ளோம். இதன் அடிப்படையில் எமது உறவுகளை தேடிக் கண்டுபிடிக்கும் எமது முயற்சிகளுக்கு சர்வதேசம் கைகொடுக்கும். எமது நியாயமான போராட்டத்திற்கு சர்வதேசம் மூலம் வெற்றி கிடைக்கும் எனும் அசைக்கமுடியாத நம்பிக்கை எமக்கு உண்டு.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுமாறு எம்மை விலை பேசுகிறது. இலங்கை அரசாங்கத்துடன் நாம் ஏன் இணைந்து செயல்படவேண்டும். அரசாங்கத்துடன் இணைவதினால் எமக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

நாம் இலங்கை அரசாங்கத்தை இவ்விடயத்தில் நம்பத் தயாரில்லை. இலங்கை அரசாங்கத்திடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகச் சரியான பொறிமுறை இல்லை. எனினும் நாம் மாதாந்தம் 30 ஆம் திகதி எமது காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் மற்றும் இலங்கை அரசாங்கம் உரிய பதிலை எமக்கு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி எமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தினால் எந்தப் பயனும் இதுவரை ஏற்படவில்லை. மேலும் மன்னார் மாவட்டத்தில் இயங்கும் அமைப்புகளும் அரசியல்வாதிகளும் எமது போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள். எமது உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி திருமதி இமானுவேல் உதயச்சந்திரா மேலும் தெரிவித்தார்.