இலங்கை

ஒற்றையாட்சி அரசின் வடமாகாணத்திற்கான புதிய ஆளுநர்?

கொழும்பு அரசியல் நிர்வாகத்தின் திடீர் முடிவுகள்
பதிப்பு: 2021 ஜூலை 31 22:15
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 31 23:52
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் புதிய ஆளுநராக இலங்கை நிருவாக சேவையில் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்ற முன்னாள் வட மாகாண சபைத் தலைமைச் செயலாளர் அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் நியமிக்கப்படும் சாத்தியம் உள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தன. வட மாகாணத்தின் தலைமைச் செயலாளராகச் சிங்கள அதிகாரியொருவர் நியமிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தேசிய மட்டத்திலும் சர்வதேச ரீதியிலும் கடுமையான விமர்சனங்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் முகம் கொடுத்த நிலையில் அவற்றில் இருந்து மீள்வதற்கான தந்திரோபாய நடவடிக்கையாகவே வட மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை ஆளுநராக நியமிக்கும் சந்தர்ப்பம் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
 
அத்துடன் வட மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கபடும் பட்சத்தில் தற்போது ஆளுநராக பணியாற்றும் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் கொழும்பில் உள்ள முக்கிய அமைச்சொன்றுக்குச் செயலாளராக நியமிக்கப்படலாம் எனவும் குறித்த வட்டாரங்கள் கூர்மைக்கு மேலும் தெரிவித்தன.

திருமதி. சார்ள்ஸ் வட மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்படும் முன், இலங்கை ஒற்றையாட்சி அரசின் சுகாதார சுதேச மருத்துவத்துறை அமைச்சின் செயலாளராக பணியாற்றினார். அத்துடன் அவர் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாவும் பணியாற்றிய இலங்கை நிருவாகச் சேவையைச் சேர்ந்த அதிகாரியுமாவர்.

இந்த நிலையில் வட மாகாணத்திற்கு அ.பத்திநாதன் ஆளுநராக நியமிக்கப்படும் பட்சத்தில் தற்போதைய வட மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் மீண்டும் அரச சேவையில் உள்ளீர்க்கப்பட்டு முக்கிய அமைச்சொன்றின் செயலாளராக அவர் நியமிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாணத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றிய அ. பத்திநாதன் கடந்த 5ஆம் திகதி தனது சேவையில் இருந்து ஒய்வுபெற்றார். இதையடுத்து வட மாகாண சபையின் தலைமைச் செயலாளராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றிய இலங்கை நிருவாகச் சேவையைச் சேர்ந்த சிங்கள அதிகாரியான சமன் பந்துலசேனவை வட மாகாண சபையின் தலைமைச் செயலாளராக ஜனாதிபதி நியமனம் செய்தார்.

இந்த நிலையில் வட மாகாணத்தின் தலைமைச் செயலாளராக சிங்கள அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டத்திற்கு எதிராக வட மாகாணத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் அரசியல் கட்சிகள் தமது பலத்த ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தன. அத்துடன் முன்னாள் வட மாகாண சபை முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் உட்பட முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து வட மாகாணத்திற்கு சிங்கள அதிகாரியொருவரை தலைமைச் செயலாளராக நியமிக்கும் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இது தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு அவசரக் கடிதமொன்றினையும் அவர்கள் அனுப்பி வைத்திருந்தனர்.

இத்தகைய நிலையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றிய சமன் பந்துலசேனைவை வட மாகாண சபையின் தலைமைச் செயலாளராக நியமித்ததின் மூலம் அரசிற்கு ஏற்பட்ட நெருக்குவாரத்தை தணிக்கும் வகையில் தமிழரொருவரை, அதுவும் முன்பு வட மாகாண சபையின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய இலங்கை நிருவாகச் சேவையின் சிரேஷ்ட முன்னாள் அதிகாரியான அந்தோனிப்பிள்ளை பத்திநாதனை வட மாகாணத்திற்கு ஆளுநராக நியமிக்கும் சாத்தியங்கள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.