மொழி தின்ற உடல்கள்

அவர் அறிந்த மொழிதான் அவரைக் கொன்றது

நேரடி அனுபவம் பேசுகிறது
பதிப்பு: 2021 ஜூலை 31 22:29
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 31 23:32
- Mohamed Fiqrhi
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
சில வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிறு காலையில் நான் பஸ்சில் கடைசி வரிசை ஆசனத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். எனது கையில் ஒரு புத்தகம் இருந்தது. இடையில் நிறுத்தமொன்றில் ஏறிய பயணிகளுள் வயதான ஒரு பெண்மனியும் இருந்தார். அவருக்கு நான் சற்று நகர்ந்து உட்கார இடமளித்தேன். முகபாவனையால் எனக்கு நன்றி தெரிவித்த அவர் என் கையில் இருந்த புத்தகத்தினைப் பார்த்துவிட்டு சரளமான ஆங்கில மொழியில் நான் அதிகமாகப் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவனா என என்னிடம் கேட்டார். நேரம் கிடைக்கையில் வாசிப்பவன் என்று பதிலளித்தேன். அவரின் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. “எனது கணவரும் நிறையப் புத்தகங்கள் வாசிப்பார். அவரின் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி ஆற்றல் அபாரமானது” எனக் கூறினார்.
 
அப்படியா என நான் ஆச்சரியமின்றிக் கேட்டேன். ஆனால் அவரின் வாயில் இருந்து அடுத்து வந்த வார்த்தைகள் என்னை மிகவும் அதிர்ச்சியடையச் செய்தன. “அவர் அறிந்த மொழிதான் அவரைக் கொன்றது” எனச் சலனமின்றிக் கூறினார்.

அந்த வசனத்தின் அர்த்தத்தினை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சற்று ஆர்வம் கலந்த தொனியில் மொழி எப்படி உங்கள் கணவரைக் கொன்றது என நான் அவரிடம் கேட்டேன். அடுத்து அவர் கூறிய கதை பல்லாயிரம் இலங்கைத் தமிழ் மக்களின் ஆன்மாவில் உறைந்துள்ள கதைகளுள் ஒன்று. “எண்பத்தி மூன்று ஆடிக் கலவரம் உச்சமடைந்திருந்த நேரம் நாங்கள் எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறிய போது அவர் எங்களுடன் வர மறுத்துவிட்டார்.

எனக்குத் தான் சிங்களம் நன்றாகப் பேசவருமே நான் பேசித் தப்பிக் கொள்வேன் நீங்கள் எல்லோரும் போங்கள் என அடம்பிடித்து எங்களை அனுப்பிவிட்டு தனது வீடு நிறைந்த புத்தகங்களுடன் தனியே தங்கிவிட்டார். காடையர் கூட்டம் அவரையும் அவரது நூல்களுடன் சேர்த்து எரித்துவிட்டுச் சென்றிருந்தது” என்று கூறிய அவரின் கதை என்னை மிகவும் நெகிழச் செய்தது.

தனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் என இரண்டு பிள்ளைகள் எனவும் அவர்களில் தனது மகள் சிங்களவரான ஒரு பொலிஸ் அதிகாரியினைத் திருமணம் முடித்து சில காலத்தின் பின் புற்று நோயால் இறந்து விட்டதாகவும் தனது மகளின் பிள்ளைகளுடன் தான் தனது மருமகன் வீட்டிலேயே வசித்து வருவதாகவும் மகன் திருமணம் முடித்து வேறாக வாழ்ந்து வருவதாகவும் அடிக்கடி தன்னைப் பார்க்க வருவதாகவும் தனது எஞ்சிய வாழ்வு தனது பேரப்பிள்ளைகளுடன் தனது மருமகனின் வீட்டிலேயே கழியும் என்றும் கூறினார்.

மானுட உறவுகளின் சிக்கலான தொடுப்புக்கள் ஆடிக் கலவரங்களையும் இனச் சுத்திகரிப்பினையும் தாண்டி முரட்டுக் கொடி போல் பற்றிப் படர்பவை என்ற உண்மையை அவர் கதை எனக்கு உணர்த்திய அதேவேளை நமது நாட்டில் இடம்பெற்ற இந்த மிகப் பயங்கரமான இன அழிப்பு ஒரு வரலாறு மட்டும்தானா அல்லது அது மீண்டும் நிகழ வாய்ப்புள்ளதா என்ற கேள்வியினையும் என்னுள் எழுப்பியது.

நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் நிச்சயம் உண்டு என்பதையே வரலாறுகளும் ஆய்வுகளும் காட்டுகின்றன. ஈராக் மீது படையெடுத்த மொங்கோலியர்கள் பாக்தாதை அழித்த பின்னர் அங்கிருந்த ஒரு நதியினைக் கடக்கவேண்டியேற்பட்டபோது பாக்தாத் பொது நூலகத்தின் நூல்களையெல்லாம் அந்த நதியில் போட்டு அந்த நதியைக் கடந்து சென்றனராம். நதி நீரே நூல்களின் மையினால் கறுப்பாக மாறியதென வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ளனர்.

பாக்தாத் நூலக அழிப்பு நடந்து 700 வருடங்களின் பின் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. அழிவுகள் ஒரே நோக்கம் கொண்டவையாக இருக்கின்றன. அழிவுகள் தொடரும் பண்புடையவை. அழிப்பிற்கு இரண்டே இரண்டு அடிப்படை நிபந்தனைகள் மாத்திரமே பூர்த்திசெய்யப்படவேண்டும். அழிக்குமாறு கூறும் திட்டவட்டமானதும் தெளிவானதுமான அதிகாரம்.

அதிகாரத்தின் கட்டளையினை நிறைவேற்றுவதற்கான கேள்வி கேட்காத குருட்டு விசுவாசம் கொண்ட தொண்டர் படை. “பல இலட்சக்கணக்காணவர்களைப் படுகொலை செய்வதற்கு ஒருவர் கட்டாயம் கொடியவனாகவோ மிருகத்தனமுடையவனாகவோ அல்லது மனப்பிரள்வுடையவனாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை. தனது கடமையினைச் செய்யும் ஆர்வம் கொண்ட விசுவாசமிக்க தொண்டனாக இருப்பதுவே போதும்” என்று ஹிட்லரின் இனப் படுகொலையிலிருந்து தப்பிய யூதரான சிமொன் வைசெந்தல் குறிப்பிடுவது 1983லும் பொருந்தும் இன்றும் பொருந்தும்.

கட்டளையிடுகின்ற அதிகாரத்திற்குக் கீழ்ப்படிகின்ற மனித உளவியல் மிகவும் சுவாரசியமானதும் ஆபத்தானதும் உலகம் முழுவதிலும் மாறாததுமாகும். சாதாரண அப்பாவி மனிதர்கள் சர்வாதிகார பலம்பொருந்திய அதிகாரத்தின் கட்டளைக்கு உட்படுகையில் எவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்ற ஆய்வினை அமெரிக்க உளவியலாளரான ஸ்டேன்லி மில்கிராம் (Stanley Milgram) 1962 – 1963 காலப்பகுதியில் யேல் பல்கலைக்கழகத்தில் நடத்தினார். இந்த ஆய்வின் முடிவுகளை “அதிகாரத்திற்குக் கீழ்ப்படிதல்” (‘Obedience to Authority’) எனும் நூலில் அவர் 1974ல் வெளியிட்டார். வெளியிடப்பட்ட காலப்பகுதியில் இந்நூலின் பல லட்சக்கணக்கான பிரதிகள் பரபரப்பாக விற்றுத் தீர்ந்தன.

மில்கிராம் நடத்திய ஆய்வு மிகவும் வித்தியாசமானதும் எளிமையானதுமாகும். தமது மனச்சாட்சி, விழுமியங்கள் மற்றும் சுயபிம்பம் ஆகியவற்றுடன் மிகத் தீவிரமாக முரண்படும் ஒரு தெளிவான கட்டளைக்கு மக்கள் எந்த அளவிற்கு அடிபணிகின்றனர் எனும் கேள்விக்கு அவர் பதில் காண விரும்பினார்.

ஆய்வை நடத்த விரும்பிய அவர் மொழியினைக் கற்பது தொடர்பான ஆய்வொன்றில் பங்குபற்றுவதற்குத் தொண்டர்கள் தேவை எனப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார். ஆய்வில் பங்குபற்றவென விரும்பி வந்தவர்கள் இரண்டிரண்டு பேராக அவரது ஆய்வுகூடத்திற்குள் அழைக்கப்பட்டனர்.

இரண்டு பேர்களில் ஒருவரிடம் மொழி கற்பிக்கும் ஆசிரியரைப் போலவும் மற்றவரிடம் மொழி கற்கும் மாணவரைப் போலவும் நடந்துகொள்ளுமாறு கூறப்பட்டது. சாம்பல் நிறத்திலான நீண்ட ஆய்வுகூட அங்கியினை அணிந்த ஆய்வாளர் அறிவியலிலும் புலமையிலும் அதிகாரமிக்கவர் போல் தோற்றமளித்தார். கற்கும்போது தண்டனை வழங்குவது எந்த அளவிற்குக் கற்றலில் பலனளிக்கின்றது என்பதை அறிவதே ஆய்வின் நோக்கம் என ஆய்வில் பங்குபற்றும் இருவரிடமும் கூறப்பட்டது.

மாணவராக நியமிக்கப்பட்டவர் அறை ஒன்றினுள் அழைத்துச் செல்லப்பட்டு கதிரை ஒன்றுடன் பிணைக்கப்படுகின்றார். அவரின் மணிக்கட்டுக்களுடன் மின்சார வயர்கள் இணைக்கப்படுகின்றன. நடக்கப்போகும் பரீட்சை ஒன்றிற்காகச் சொற் சோடிகளின் பட்டியல் ஒன்றினை அவர் பாடமாக்கவேண்டும் என்றும் அதில் அவர் தவறிழைத்தால் அவருக்கு மின்சாரம் பாய்ச்சப்படும் என்றும் தவறு அதிகரிக்க அதிகரிக்க அவர்மீது பாய்ச்சப்படும் மின் அதிர்ச்சியின் அளவும் அதிகரிக்கப்படும் என்றும் அவரிடம் கூறப்பட்டது.

ஆசிரியராக நியமிக்கப்பட்டவர் வேறு அறை ஒன்றினுள் அழைத்துச் செல்லப்பட்டு 30 சுவிட்சுகள் கொண்ட மின்னதிர்ச்சியினை உருவாக்கும் இயந்திரத்தின் முன் அமர்த்தப்படுகின்றார். மின்னதிர்ச்சியின் அளவு 15 வோல்ட் முதல் 450 வோல்ட் வரை காணப்பட்டது. அவரே பரீட்சையினை நடத்தவேண்டும் என்றும் மாணவன் வழங்கும் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் அவர் மாணவனுக்கு மின்னதிர்ச்சியினை வழங்கவேண்டும் என்றும் அவரிடம் கூறப்பட்டது.

ஆய்வினிலே மாணவராகப் பங்குபற்றுபவரிடம் ஆய்வினை நடத்தும் மில்கிராம் கூறுவதைக் கேட்டு அதற்கேற்பச் செயற்பட்டால் போதும் என்றும் உண்மையிலேயே அவருக்கு மின்சாரம் பாய்ச்சப்படாது என்றும் கூறப்பட்டது. அத்துடன் கேள்விகளுக்கு வேண்டுமென்று தவறான பதில்களையே வழங்குமாறும் அவரிடம் கூறப்பட்டது.

ஆனால் ஆசிரியராக நியமிக்கப்பட்டவர் ஓர் அப்பாவியான மனிதர். ஏனெனில் தான் வழங்கப்போகும் மின்னதிர்ச்சி மாணவர் மீது தாக்கத்தினை ஏற்படுத்தாது என்பது அவருக்குத் தெரியாது. தன்னை எதிர்க்கும் மற்றொருவர் மீது அதிகரித்த வலியினை ஏற்படுத்துமாறு கட்டளை வழங்கப்படும் ஓர் உறுதியான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் அந்தக் கட்டளையிடப்பட்ட நபர் எவ்வாறு நடந்துகொள்வார் என்பதை அறியும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் என்னதான் நடந்தது எனப் பார்ப்போம்.

பரிசோதனைக்குக் கூட யார்மீதும் மின்சாரத்தினைப் பாய்ச்சுவதற்கு அதிகமான தனிநபர்கள் மறுப்புத் தெரிவிப்பார்கள் என்றே நமது பொது அறிவு எதிர்பார்க்கும். ஆனால் மில்கிராமின் ஆய்வின் முடிவுகள் அமெரிக்கப் பொதுமக்களையே அதிர்ச்சியில் உறையவைத்தது. ஆம், பங்குபற்றியோரில் 65 விழுக்காட்டினர் அல்லது கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் தொடர்ச்சியாக மின்சாரத்தினை 450 வோல்ட் வரையில் (நமது சாதாரண வீட்டு மின்சாரத்தின் அளவு 230 வோல்ட்) பிரயோகித்திருந்தனர். பங்குபற்றிய ஒவ்வொரு தனிநபரும் 300 வோல்ட் வரை மின்சாரத்தினைப் பிரயோகித்திருந்தனர்.

மில்கிராமின் ஆய்வின் அதிர்ச்சி தரும் முடிவு என்னவெனில், அதிகாரமிக்க ஆளுமை ஒருவரின் கட்டளையினை அதிகமான மக்கள் கேள்வியின்றிப் பின்பற்றி ஓர் அப்பாவியான மனிதரைக் கூடக் கொல்வார்கள் என்பதேயாகும். இந்த ஆய்விலே மாணவர் மீது மின்சாரம் பாய்ச்சப்படுகையில் அவர் அலறும் சத்தம் ஆசிரியருக்குக் கேட்கையில், இப்போது நான் என்ன செய்ய என்ற தோரணையில் ஆசிரியர் பரிசோதகரைப் பார்த்ததாகவும் பரிசோதகர் அவரிடம் தொடர்ந்து மின்சாரத்தினைப் பாய்ச்சுமாறு கூறியதாகவும் மில்கிராம் குறிப்பிடுகின்றார்.

ஆசிரியரின் கீழ்ப்படிதலைப் பெறுவதற்கான பெரும் அதிகாரம் எதுவும் பரிசோதகரிடம் இருக்கவில்லை. ஆசிரியராகப் பங்குபற்றியவருக்கு மின்சாரத்தினைப் பாய்ச்சாமல் இருந்திருக்க முடியும். மின்சாரத்தினைப் பாய்ச்சாவிட்டால் தனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதுவும் அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார் என்பதுவே கீழ்ப்படிதலின் உளவியலின் மையப் புள்ளியாகும்.

மக்கள் இரண்டு வகையான நடத்தைக் கோலங்களைக் கொண்டுள்ளனர் என மில்கிராம் குறிப்பிடுகின்றார். சுயாதீனமான நடத்தை மற்றும் முகவராகச் செயற்படும் நடத்தை. ஒரு மனிதன் சுயாதீனமான நடத்தையினைக் கொண்டிருக்கையிலேயே அவனிடம் மனச்சாட்சி புகுந்து விளையாடும். அவன் என்ன செய்யவேண்டும் என்பதை மனச்சாட்சியே கட்டளையிடும். ஆனால் அவன் சமூக அதிகார அடுக்கின் முகவராகச் செயற்பட முற்படும் கனப்பொழுதிலிருந்து, அது இராணுவமாகவோ அல்லது அரசாகவோ அல்லது கம்பனியாகவோ அல்லது முகாமைத்துவமாகவோ எதுவாகவும் இருக்கலாம், அவன் தனது அறம் சார்ந்த பொறுப்பினை அந்த அதிகாரத்திடமே விட்டுவிடுகின்றான்.

இதனால் தனது செயலுக்குத் தான் தனிப்பட்ட ரீதியில் பொறுப்புக் கூறவேண்டிய சந்தரப்பத்தில் அவன் எவ்வாறு நடந்துகொள்வானோ அதை விட மிக வித்தியாசமான முறையில் மனிதன் இச்சூழ்நிலையில் நடந்துகொள்கிறான்.

குரூரமான சித்திரவதைகள், இன அழிப்புக்கள், மதக் கலவரங்கள், இனச் சுத்திகரிப்பு, யுத்தத்தின் போதான அட்டூழியங்கள் மற்றும் அத்துமீறல்கள் ஆகிய அனைத்தின் பின்னாலும் உள்ள உளவியல் இதுதான். இந்த உளவியலே ஹிட்லரின் நாசிப் படைகளிமும் செயற்பட்டது. தலிபான்களில் இயங்குவதும் இந்த உளவியலே.

மானுடம் இருக்கும் வரை கீழ்ப்படிதலின் இந்த அபாயமான உளவியல் துடிப்பாகவே இருக்கும். எனவே ஆடிக்கலவரங்கள் இனிமேல் வரமாட்டா என அடித்துக் கூறமுடியாது. அவை வராமல் இருப்பதற்கான ஒரே ஒரு நிபந்தனை கண்மூடித்தனமான விசுவாசத்தினை உருவாக்கக்கூடிய அதீத ஆற்றல் மிக்க அதிகார ஆளுமைகள் கட்டளையிடும் பதவிகளை அலங்கரிக்காமலிருப்பதே.

அவ்வாறு நேர்ந்தால் சாதுவான மனிதர்களும் தம் மனச் சாட்சியைச் சட்டையைக் கழற்றுவது போலக் கழற்றி அதிகாரமிடுபவரின் கையில் கொடுத்துவிட்டு நான் சந்தித்த மூதாட்டியின் கணவரைப் போன்ற பலரையும் எக்காரணமுமின்றிப் புத்தகத்துடனோ அல்லது புத்தகமில்லாமலோ போட்டு எரிக்கக் கிளம்பிவிடுவார்கள்.

ஆசிரியர் குறிப்பு- இந்தக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது. கறுப்பு யூலை நினைவை முன்னிட்டு, இதனை கட்டுரை எழுதியவரின் அனுமதியோடு எமது செய்தித் தளத்தில் பிரசுரம் செய்துள்ளோம்.