தமிழர் தாயகத்தில் உயரம் குறைந்த மனிர்களை

இறக்குமதி செய்து அச்சமான சூழலை ஏற்படுத்தும் இலங்கைப் படையினர்- மக்கள் குற்றச்சாட்டு

அரசியல் சிந்தனைகளைத் திசை திருப்புவதே நோக்கம்- அவதானிகள்
பதிப்பு: 2018 ஜூலை 31 09:27
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 31 11:59
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகத்தில் தேவையற்ற கொதிநிலையை ஏற்படுத்தி, பிரதான அரசியல் சிந்தனையில் இருந்து மக்களைத் திசை திருப்புவதே இலங்கைப் படையினரின் முக்கிய நோக்கம் என அவதானிகள் கூறுகின்றனர். யாழப்பாணம் அராலியில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மக்கள் குடிமனைகளுக்குள் நடமாடும் மர்ம நபர்களினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த மர்ம மனிதர்கள் மிகவும் உயரம் குறைந்தவர்கள். பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்களைத் துரத்தினால், ஒரே தடவையில் மதில்கள், வேலிகளினால் ஏறிப் பாய்ந்து தப்பிச் செல்கின்றனர். கறுப்பு உடையணிந்து முகத்திற்கு கறுப்புச் சாயமும் பூசியுள்ளனர். இரவு 7 மணி முதல் இரவு 11 மணி வரையில் மர்ம நபர்களுடைய நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
 
இவர்களைப் பிடிப்பதற்காக மக்கள் இரவு நேரங்களில் வழித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் காலையில் தொழிலுக்குச் செல்ல முடியாமல் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

இன நல்லிணக்கம் என்று கூறிக்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகளையும் இளைஞர்களிடையே வன்முறைகளையும் மைத்திரி- ரணில் அரசாங்கம் உருவாக்கி வருவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

இந்த உயரம் குறைந்த மனிதர்களின் நடமாட்டத்தின் பின்னணியில் இலங்கைப் படையினர் இருப்பதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த மனிதர்களைப் பிடிப்பதற்காக பிரதேச இளைஞர்கள் இரவு நேரங்களில் வீதிகளில் நின்றால், இலங்கைப் பொலிஸார் வீதியில் நிற்க வேண்டாம் எனவும் வீடுகளுக்குள் இருக்குமாறும் இளைஞர்களுக்கு உத்தரவிடுவதாக மக்கள் கூறுகின்றனர்.

ஆனால், இரவு நேரங்களில் நடமாடித் திரியும் இந்த உயரம் குறைந்த மனிதர்கள் பற்றி முறையிட்டால், அது தொடர்பாக இலங்கைப் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த உயரம் குறைந்த மனிதர்கள் மக்களைத் தாக்குவதில்லை. களவு எடுப்பதில்லை. வீடுகள் மீது கற்களை வீசி மக்களை அச்சுறுத்துவதாக வலி மேற்கு பிரதேசசபை தலைவர் த. நடனேந்திரன் கூறுகின்றார்.

ஆகவே இந்த உயரம் குறைந்த மனிதர்களின் நடமாட்டங்கள் தொடர்பாக பொறுப்பபு வாய்ந்த தமிழ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

அதேவேளை, திட்டமிடப்பட்ட முறையில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்படுவதாகவும், தடுப்பதற்கு இலங்கைப் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சிவஞானம் ஊடகம் ஒன்றுக்கு கடந்த வாரம் வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் வாள்வெட்டுக்குழுக்களை உருவாக்கி இளைஞர்கள் மத்தியில் பிளவுகளையும் பிரதேச வேறுபாடுகளையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் இலங்கைப் படையினர், தற்போது உயரம் குறைந்த மனிதர்களை தாயகப் பிரதேசங்களில் இறக்குமதி செய்து மக்கள் மத்தியில் அச்சமான சூழலை ஏற்படுத்தி வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்ச 2013/14 ஆம் ஆண்டுகளில் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் கிறிஸ்பூதங்களை உருவாக்கி நடமாடவிட்டு பெரும் குழப்பங்களையும் அச்சமான சூழலையும் ஏற்படுத்தியிருந்தார்.

அதேபோன்றதொரு நிலையை மைத்திரி- ரணில் அரசாங்கமும் தற்போது தமது அரசியல் நோக்கங்களுக்காக ஏற்படுத்தி வருவதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, இன நல்லிணக்கம் என்று கூறிக்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகளையும் இளைஞர்கள் மத்தியில் வன்முறைகளையும் மைத்திரி ரணில் அரசாங்கம் உருவாக்கி வருவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

யாழ் கொக்குவில் பிரதேசத்தில் நேற்றுத் திங்கட்கிழமை பட்டப்பகலில் வீட்டு ஒன்றுக்குள் புகுந்த சில குழுக்கள் அங்கிருந்தவர்களை அச்சறுத்தியதுடன். வாகனம் ஒன்றையும் தீயிட்டு எரித்துள்ளனர்.

வீட்டுக்கும் தேசம் விளைவித்துள்ளனர். இது தொடர்பாக இலங்கைப் பொலிஸார் உரிய விசாரனை நடத்தவில்லையென உறவினர்கள் கூறுகின்றனர்.

பல்வேறு குழுக்களாக இளைஞர்களைப் பிரித்து. இலங்கைப் பொலிஸாரின் ஆதரவுடன் வன்முறைகளை, இலங்கைப் படையின் புலனாய்வுத் துறையினர் துாண்டிவிடுவதாக யாழ் சிவில் அமைப்புகள் பகிரங்கமாவே குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கைப் படையினரை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்றினால், வன்முறைகளையும் போதைப் பொருள் பாவனைகளையும் ஒழிக்க முடியுமென முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.