இலங்கைத்தீவில்

வேமாகப் பரவும் கொவிட். நேற்று மட்டும் 156 பேர் மரணம்- முழுமையாக முடக்குமாறு கோரிக்கை

இலங்கைத் தாதிமார் சங்கம் எச்சரிக்கை
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 12 21:44
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 15 21:27
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் வேகமாகப் பரவும் கொவிட் நோய் தொற்றைக் கட்டுப்படுத்தி தினமும் நிகழும் பொது மக்களின் உயிரிழப்பைத் தடுப்பதற்கு கடுமையான பயணக்கட்டுப்பாடு அல்லது முழுமையான ஊரடங்கு பிரகடனத்தை உடன் அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் பல தரப்பினரும் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் அலட்சியப் போக்கில் செயல்படுவதாக கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் நாட்டை முழுமையாக முடக்காவிட்டால் தாம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் என இலங்கைத் தாதிமார் சங்கத்தினர் இலங்கை அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் கொவிட் வைரஸால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
கடந்த செவ்வாய் கொவிட் தொற்றினால் இலங்கையின் கலிகமுவ பகுதியில் வைத்தியர் ஒருவர் மரணமடைந்துள்ளார். மேலும் பொது சுகாதாரப் பரிசோதகர் உட்பட இரண்டு சுகாதார ஊழியர்கள் மரணித்துள்ளனர். இத்தகைய நிலையில் சுகாதார துறையினர் நோய் தொற்றுக்கு இலக்காகுவது முழு நாட்டிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அச் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் உடனடியாக நாட்டை முடக்கவேண்டும். அத்துடன் நாட்டு மக்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் பீசீஆர் பரிசோதனைகளைத் தினமும் ஒரு லட்சமாக அதிகரிக்கவேண்டும்.

தமது கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்க தவறின் நாட்டில் உள்ள 38 ஆயிரம் தாதியர்களையும் ஒன்று திரட்டி தொழிற்சங்க நடவடிக்கைகளை தாம் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தாதிமார் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையும், கொரோனா இறப்புகளும் தற்போது அதிகரித்துள்ள நிலையில் கொவிட் தொடர்பாக தற்போது அமுலில் உள்ள சட்டங்களை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி உடனடியாகப் பயணக்கட்டுப்பாடும் அதனோடு இணைந்த கடுமையான ஊரடங்கையும் உடன் அமுல்படுத்துமாறு இலங்கை விஷேட வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் தற்போது கொவிட் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இரண்டு தடுப்பூசிகளையும் (இரண்டு டோஸ்) இலங்கை மக்கள் முழுமையாகப் பெறுவதாயின் இரண்டு அல்லது மூன்று மாத காலங்கள் எடுக்கக்கூடும்.

இவ்வாறான நிலையில் நாட்டில் தடுப்பூசி பெறவேண்டிய தரப்பினர் அனைவரும் அவர்களுக்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெறும் வரையும் நாட்டின் பயணத்தடை தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்துவது சிறந்தது எனவும் இலங்கை விஷேட வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இது இவ்விதம் இருக்க நாடளாவிய ரீதியில் உடனடியாக ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தினால் எதிர்வரும் 20 நாட்களில் நாடு எங்கும் மரணிக்கவுள்ள சுமார் 1200 பேர்களின் உயிர்களைக் காப்பாற்றலாம் என இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் தீர்மானம் மேலும் ஐந்து நாட்களுக்கு பின்தள்ளப்பட்டால் 700 கொவிட் மரணங்கள் சம்பவிக்கும் எனவும் அவர் தனது டுவிட்டர் தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் நிகழும் கொவிட் மரணங்களுக்கு, தற்போது முழு நாட்டிலும் பரவிக் காணப்படும் திரிபடைந்த டெல்டா வைரஸே காரணம் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிடுகிறார். இந்த நிலையில் நாட்டை தாமதமின்றி குறைந்த 14 நாட்களுக்காவது முடக்குமாறு அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று புதன்கிழமை 156 பேர் உயிரிழந்தாக இலங்கைச் சுகாதாரத் திணைக்களம் இன்று வியாழக்கிழமை தொிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென இலங்கை வைத்தியர் சங்கம் எச்சரிக்கை விடுத்தள்ளது.