உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்

ஏழாவது சந்தேக நபராக முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீன்

கொழும்பு கோட்டை நீதிமன்றுக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அறிவிப்பு
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 13 08:26
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 15 21:22
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பாக கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஏலவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஏழாவது சந்தேக நபராக முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கொழும்பு கோட்டை நீதிமன்றுக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் (சீ.ஐ.டீ ) தெரிவித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்பிரல் மாதம் 24ஆம் திகதி அதிகாலை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கொழும்பில் வைத்து முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீனும் அவர் சகோதரர் றியாஜ் பதியூதீனும் கைது செய்யப்பட்டனர்.
 
அத்துடன் இவர்கள் விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சுமார் 108 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டனர். இந்தநிலையில் குற்றத்தடுப்பு பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.பி) ஆர்.ஏ.டி.ஈ.எல். ரந்தெனிய தலைமையிலான பொலிஸாரினால் கடந்த 10ஆம் திகதி செவ்வாய் பிற்பகல் றிஸாத் பதியூதீன் கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

இச்சமயம் சந்தேக நபரான றிஸாத் பதியூதீனை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

இவ்வாறான நிலையில் கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் உள்ள தப்ரபேன் உணவு விடுதியில் உயிர்த்த ஞாயிறு தினமன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் றிஸாத் பதியூதீன் ஏழாவது சந்தேக நபராக பெயர் குறிபிடப்பட்டுள்ளதாகக் கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகேக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட தீவிர புலன் விசாரணைகளில் கொழும்பில் உள்ள ஹொலசஸ் பிரைவேட் லிமிடெட் (Colossus (Pvt) Ltd) எனும் செப்பு உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம், 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலின் தப்ரபேன் உணவகத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட முகம்மட் இபுறாகிம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமானதெனத் தெரியவந்துள்ளதாக கோட்டை நீதவான் பிரியந்த லியனகேக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமது புலன் விசாரணைகளில் தமக்கு கிடைக்கப்பெற்ற மேலும் பல தகவல்களைப் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதவானுக்கு கடந்த செவ்வாய் அன்று விவரித்தனர்.

கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட முகம்மட் இபுறாகிம் இன்சாப் அஹமட்டுக்குச் சொந்தமான ஹொலசஸ் எனும் செப்பு தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திற்கு, சந்தேக நபரான றிஸாத் பதியூதீன், தான் அமைச்சராக பணியாற்றிய வேளை விதிமுறைகளை மீறி செப்பு உற்பத்திக்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இலங்கையில் செப்பு உற்பத்தி துறைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு மூலப்பொருட்களை வழங்கும் செயற்பாடுகள் இவ்வழக்கின் ஏழாவது சந்தேக நபரான றிஸாத் பதியூதீன் அமைச்சராக பதவி வகுத்த கைத்தொழில் வாணிப அமைச்சின் கீழ் உள்ள கைத்தொழில் அபிவிருத்தி ஸ்தாபனமே முன்னெடுத்து வந்தததாகக் குற்றத்தடுப்பு பொலிஸார் கோட்டை நீதவானுக்கு மேலும் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் அச்சமயம் கைத்தொழில் வாணிப அமைச்சராக இருந்த சந்தேக நபர் றிஸாத் பதியூதீன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டரீதியான விதிமுறைகளையும் வழிமுறைகளையும் மீறி தற்கொலைக் குண்டுதாரியான முகம்மட் இபுறாகிம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான ஹொலசஸ் பிரைவேட் லிமிடெட் எனும் செப்பு உற்பத்தி நிறுவனத்திற்கு செப்பு உற்பத்தி மூலப்பொருட்களைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

கைத்தொழில் வாணிப அமைச்சின் கீழ் இருந்த குறித்த கைத்தொழில் அபிவிருத்தி ஸ்தாபனம், செப்பு உற்பத்தியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்கு மூலப்பொருட்களை எவ்விதம் வழங்கவேண்டும், என்பது தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன மூலமாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.

முன்னாள் ஐனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்னவினால் வெளியிடப்பட்ட இந்த வழிமுறைகளுக்கு ஏற்ப கைத்தொழில் வாணிப அமைச்சின் கீழ் இருந்த குறித்த கைத்தொழில் அபிவிருத்தி ஸ்தாபனத்தின் ஊடாக இலங்கையில் செப்பு உற்பத்தி மூலத் திரவியங்களை பெற்றுக்கொள்ள தகுதியுள்ள நிறுவனங்கள் அனைத்தும் சிரிய, நடுத்தர மற்றும் பாரிய நிறுவனங்கள் என மூன்று வகைகளாகத் தரப்படுத்தப்பட்டது.

குறித்த வகைப்படுத்தல் செப்பு உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனமொன்றில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் அந்த நிறுவனத்தின் வருடாந்த செலவீனம் என்பவற்றை மையப்படுத்தியே வகைப்படுத்தல் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சிறிய நிறுவனம் என்பது பத்து ஊழியர்களையும் வருடாந்தம் பத்து மில்லியன் ரூபாவிற்கும் குறைந்த செலவினம் உடையதாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

நடுத்தர நிறுவனமானது பத்து ஊழியர்களில் இருந்து ஐம்பது ஊழியர்களையும் வருடாந்தம் பத்தில் இருந்து இருநூறு மில்லியன் ரூபாக்களை செலவீனமாகக் கொண்டதாகவும் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் பாரிய நிறுவனம் என்பது ஐம்பத்தியொன்றில் இருந்து இருநூறு ஊழியர்களைக் கொண்டதாகவும், வருடாந்தச் செலவீனமாக இருநூறு மில்லியனில் இருந்து அறுநூறு மில்லியன் ரூபாக்களை உடையதாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

இவ்வாறான வழிமுறைகளுக்கு ஏற்ப தகுதியான செப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கு பொருந்தக்கூடிய கூடிய விகிதசார அடிப்படையில் கைத்தொழில் வாணிப அமைச்சின் கீழ் இருந்த குறித்த கைத்தொழில் அபிவிருத்தி ஸ்தாபனம், இலங்கையில் செப்பு உற்பத்தி துறையில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்கு மூலப்பொருட்களை வழங்க வேண்டும் எனும் நடைமுறை உருவாக்கப்பட்டது.

எனினும் தற்கொலை குண்டுதாரியான முகம்மட் இபுறாகிம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான ஹொலசஸ் பிரைவேட் லிமிடெட் இந்த மூன்று வகைகள் எவற்றினுள்ளும் அடங்காது என்பதுடன் அதன் மாதாந்த செலவீனம் ஆயிரம் மில்லியன் ரூபாக்கள் ஆகும் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வகையில் கைத்தொழில் வாணிப அமைச்சின் பொறுப்பின் கீழ் இருந்த குறித்த கைத்தொழில் அபிவிருத்தி ஸ்தாபனம் மூலம் செப்பு உற்பத்திக்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் தகுதி தற்கொலைக்குண்டுதாரியான முகம்மட் இபுறாகிம் இன்சாப் அஹமட்டுக்குச் சொந்தமான ஹொலசஸ் பிரைவேட் லிமிடெட் (Colossus (Pvt) Ltd) எனும் நிறுவனத்திற்கு இல்லை என்பதும் எமது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும் அதனையும் மீறி குறித்த நிறுவனத்திற்கு செப்பு உற்பத்திக்கான மூலத்திரவியங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை, அச்சமயம் கைத்தொழில் வாணிப அமைச்சின் மேலதிகச் செயலாளராகப் பணியாற்றிய சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரியான எஸ். பாலசுப்பரமணியம் என்பவர் கைத்தொழில் அபிவிருத்தி ஸ்தாபனத்திற்கு வழங்கியுள்ளார்.

இந்த விடயத்தில் சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீனின் தலையீட்டுடனேயே ஹொலசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு செப்பு உற்பத்தி மூலத்திரவியங்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் குற்றதடுப்பு பிரிவினரின் புலன் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளதாகப் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கோட்டை நீதவானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டு தாக்குதல்களுக்கான நிதி மேற்படி ஹொலசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வருமானம் ஊடாகவே பெறப்பட்டுள்ளதாக எமது விசாரணைகளில் மேலும் அறிய முடிந்தது. அத்துடன் கொழும்பு புறக்கோட்டையில் உள்ள தனியார் வங்கியொன்றில் ஹொலசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சேமிப்புக் கணக்கொன்றும் நடைமுறைக்கணக்கொன்றும் இருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்தது.

குறித்த வங்கியில் உள்ள மேற்படி சேமிப்புக் கணக்கிற்கு டொலர்களில் வைப்பு செய்யப்படும் பணம் பின்னர் குறித்த வங்கியில் ஹொலசஸ் நிறுவனத்தின் பெயரில் உள்ள பிரிதொரு நடைமுறைக் கணக்கொன்றுக்கு இலங்கை ரூபாக்களாக வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இவ்விதம் வைப்புச் செய்யப்பட்ட குறித்த நடைமுறைக் கணக்கிலிருந்து மீளப்பெறப்பட்ட 120 லட்சம் ரூபாக்கள் பணத்தினை தற்கொலைக் குண்டுதாரியின் மனைவியான உம்மு றசினா என்பவரிடம் இருந்து நாம் மீட்டுள்ளோம்.

தற்கொலைக் குண்டுதாரியின் சகோதரி ஒருவரிடம் இருந்து ஒரு தொகைப் பணத்தையும், அதனை வங்கியில் இருந்து எடுத்து வந்த பையொன்றையும் நாம் மீட்டுள்ளோம் என பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகேயிடம் மேலும் தெரிவித்துள்ளனர்.