அமைச்சர் பசில் ராஜபக்ச தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சந்திப்பது தொடர்பாக

அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் சுமந்திரனுடன் பேச்சு நடத்திய பீரிஸ், வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்பு

வேறுபல அமைச்சுப் பொறுப்புக்களிலும் திடீர் மாற்றம் செய்தார் ஜனாதிபதி கோட்டாபய
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 16 21:25
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 18 23:17
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கை தீவின் அனைத்துப் பகுதிகளும் கொவிட்-19 நோய் தொற்றினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் டெல்டா பிறழ்வு ஆகியவற்றினால் பொது மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வரும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. இன்று திங்கட்கிழமை 16ஆம் திகதி அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மூத்த அமைச்சர்களான பேராசிரியர் ஜீ. எல் . பீரிஸ், ஹெகலிய ரம்புக்வெல, தினேஷ் குணவர்த்தன, பவித்திரா வன்னியராச்சி, டளஸ் அழகபெரும, காமினி லொகுகே மற்றும் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
 
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமா் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் அமைச்சரவை மாற்றத்துக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.

இதுவரை கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்திருந்த தினேஷ் குணவர்த்தன கல்வி அமைச்சராக நியமிக்கபட்டுள்ளார்.

பவித்திரா வன்னியாரச்சி போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சுப் பொறுப்பு ஹெகலிய ரம்புக்வெலவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுவரை மின் சக்தி அமைச்சராக இருந்த டளஸ் அழகபெரும ஊடகத்துறை அமைச்சராகப் நியமிக்கபட்டுள்ளார். போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய காமினி லொகுகே மின்சக்தி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு மேலதிகமாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு அமைச்சர் எனும் புதிய அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் அமைச்சர்களின் பதவி மாற்றத்தின் பொழுது சுகாதார அமைச்சராகப் பணியாற்றிய பவித்திரா வன்னியாரச்சியின் அமைச்சுப் பதவியில் மாற்றம் எதனையும் மேற்கொள்ளவேண்டாம் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வேண்டுகோளுக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இணக்கம் தெரிவித்ததுடன் பவித்திரா வன்னியாரச்சியின் சுகாதார அமைச்சுப் பதவியில் எவ்வித மாற்றமும் செய்வதில்லை என பிரதமருக்கு உறுதியளித்ததாகவும் கூறப்படுகின்றது.

எனினும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி அப்பதவியில் நீக்கப்பட்டு போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார அமைச்சராக ஹெகலிய ரம்புக்வெல நியமிக்கப்பட்டமை தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேராசிரியர் பீாிஸ் கல்வி அமைச்சராகப் பதவி வகித்திருந்தபோதே கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்திருந்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாகவும் குறிப்பாக அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் பேசுவது குறித்தே அந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக எமது கூர்மை செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தவொரு நிலையில் பேராசிரியர் பீரிஸ் வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். 2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர் பீாிஸ் தலைமை பேச்சாளராகத் திகழ்ந்தார்.

தற்போது ராஜபக்சக்களின் அரசாங்கத்திலும் வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றுள்ளதுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைக்கான ஆரம்பத் திட்டங்களையும் இவர் முன்னெடுத்துள்ளார்.

நிதியமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்னர் அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ச சென்ற யூன் மாதம் அங்கிருந்து கொண்டே இணையவழி ஊடாக சுமந்திரனுடன் இரகசியமாகப் பேச்சு நடத்தியிருந்தார்.

இது பற்றிய செய்தியையும் எமது இணையத்தளம் யூன் மாதம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் கொழும்பு திரும்பிய பசில் ராஜபக்ச நிதியமைச்சராகப் பதவியேற்றதுடன் சென்ற ஒன்பதாம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் அமைச்சர் பீரிசும் சுமந்திரனைச் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.