வடமாகாணம்

யாழ் பொன்னாலை மேற்கில் படையினர் மக்கள் மீது தாக்குதல்

பிரதேச சபை உறுப்பினர் பொன்ராசா முறைப்பாடு
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 17 21:21
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 18 23:19
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
வடமாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொன்னாலைப் பிரதேசத்தின் மேற்கில், மக்களின் வீடுகளுக்குள் புகுந்து இலங்கை ஒற்றையாட்சி அரசின் படையினர் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல் மற்றும் மக்களை அச்சுறுத்தியமை தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
சென்ற 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பொன்னாலை மேற்கு பிரதேசத்திற்குள் பட்டா வாகனம் மற்றும் யுஹ12525 இலக்க மோட்டார் சைக்கிள் என்பவற்றில் நுழைந்த படையினர் வீதியில் ஒளிர்ந்துகொண்டிருந்த மின்குமிழ்களை அணைத்துவிட்டு மக்களை மோசமாக அச்சுறுத்தினர்.

வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்தினர். இளைஞர்களை துரத்தி துரத்தி தாக்கினர். படையினரின் மூர்க்கத்தனமான செயற்பாட்டால் அச்சமடைந்த இளைஞர்கள் ஊரை விட்டு தப்பியோடினர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வயல்களுக்குள் தஞ்சமடைந்தனர். சில மணிநேரம் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

இந்நிலையில், வலி.மேற்கு பிரதேச சபையின் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசாவுக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதை அடுத்து உடனடியாகவே சம்பவ இடத்திற்கு சென்ற அவர் படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

நள்ளிரவு நேரம் மக்களை தாக்கிய படையினரின் செயற்பாடு குறித்து படையினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட அவர் பொலிஸாருக்கு அழைப்பு எடுத்து அவர்களை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்திருந்தார்.

பொலிஸார் வந்தால் சிக்கல் நிலை உருவாகும் என்று உணர்ந்த படையினர் உடனடியாகவே அங்கிருந்து வெளியேறினர். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம் வரை ஓடிச்சென்ற படையினர் அங்கு தயாராக நின்ற வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர்.

படையினர் தம்மைத் தாக்கியமை தொடர்பாக நள்ளிரவு 11.55 க்கு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்திருந்த போதிலும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை எனவும் பின்னர் 119 இற்கு அறிவித்தமையால் அதிகாலை 2.00 மணிக்கு வந்து விசாரணை நடத்தியதாக மக்கள் தெரிவித்தனர்.