தமிழ்நாட்டு மாநிலத்தின்

திருச்சி சிறப்பு முகாமில் ஈழஅகதிகள் 15 பேர் தற்கொலை முயற்சி

வைத்தியசாலையில் அனுமதி- வயிற்றில் கத்தியால் கீறிய ஒருவர் ஆபத்தான நிலையில்
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 18 21:48
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 18 23:12
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தின் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனிச்சிறைக்சாலை எனப்படும் சிறப்பு முகாமில் தங்கியுள்ள ஈழ அகதிகள் 15 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தூக்க மாத்திரை சாப்பிட்டும் வயிற்றை கத்தியால் கீறியும் தற்கொலை செய்ய முற்பட்டதால் சிறப்பு முகாமில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 15 பேரும் தற்போது திருச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வயிற்றில் கத்தியால் கீறியவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொவிட்-19 நோய்ப்பரவலைக் காரணம் கூறி தம்மீதான விசாரணைகள் இடம் பெறுவதில்லை என்றும் இதனால் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை ஈழ அகதிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
 
இந்தவொரு நிலையிலேயே தற்கொலை முயற்சியும் இடம்பெற்றிருக்கிறது. அத்தோடு கைதிகளில் இருவர் ஏழு நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஏனைய இருவர் சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சிறைச்சாலையில் ஈழத்தமிழர்கள் உட்பட பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சுமார் எண்பதுக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வேறு பல சித்திரவதைகளும் சிறைக் காவலர்களினால் நடத்தப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமது விடுதலையை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்கள் உயர் அதிகாரிகளின் வாக்குறுதிகளை நம்பி கைவிட்டிருந்ததாகவும், ஆனாலும் அந்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படாது, தாம் ஏமாற்றப்படுவதாகவும் ஈழஅகதிகள் கூறுகின்றனர்.

தமது விடுதலைக்கு தமிழ் நாட்டு அரசின் மக்களவை உறுப்பினர்களும் மற்றும் அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டுமெனவும், தாயகத்தில் செயற்படும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இவர்கள் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேவையற்ற முறையில் குற்றம் சுமத்தி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டதெனவும் ஆனாலும் எட்டு ஆண்டுகள் சென்றுள்ள நிலையில் அந்த வழக்கு விசாரணை முடிவுறுத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் கைதியொருவர் கூறியுள்ளார்.

விடுதலை கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடருமெனவும் ஈழஅகதிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். 1990 ஆண்டில் இருந்து இங்கு அகதிகளாக இருப்பதாகவும் பெரும் சித்திரவதைகளை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.